Salem Corporation Budget: நீர்தேக்கத் தொட்டிகளில் ரூ. 60 லட்சம் செலவில் சிசிடிவி - சேலம் மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு
2023-24 ஆம் நிதியாண்டில் மொத்த வருவாய் மற்றும் மூலதன வரவுகள் 786.80 கோடி ஆகும். மூலதன செலவுகள் 788.06 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டு,1.26 கோடி பற்றாக்குறையாக உள்ளது.
![Salem Corporation Budget: நீர்தேக்கத் தொட்டிகளில் ரூ. 60 லட்சம் செலவில் சிசிடிவி - சேலம் மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு Announcement in the municipal budget to install CCTV cameras in the reservoirs at a cost of 60 lakhs TNN Salem Corporation Budget: நீர்தேக்கத் தொட்டிகளில் ரூ. 60 லட்சம் செலவில் சிசிடிவி - சேலம் மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/06/86b7d57ebfaefc3d6547cdf21d49b9db1680769526888189_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் 2023-24 ஆம் நிதியாண்டில் மொத்த வருவாய் மற்றும் மூலதன வரவுகள் 786.80 கோடி ஆகும். மூலதன செலவுகள் 788.06 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டு,1.26 கோடி பற்றாக்குறையாக உள்ளது. பற்றாக்குறையில் நிதி ஆதாரங்களை கூடுதலாக பெற்று சிக்கன நடவடிக்கை மேற்கொண்டு ஈடுகட்டப்படும் என மேயர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சேலம் மாநகராட்சிகள் வரவு செலவு திட்டத்தின் 2023-24 பட்ஜெட்டில் சேலம் மாநகராட்சி புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.
அதன்படி, மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுக்கு உட்பட்ட அனைத்து பொதுமக்களுக்கு தங்குதடையின்றி சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்யும் முறையை கண்காணிக்க 58 மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகளில் 60 லட்ச ரூபாய் செலவில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கல்வியும், மருத்துவமும் இரண்டு கண்கள் என்று தமிழ்நாடு முதலமைச்சர் செயல்பாட்டிற்கு ஏற்ப, சேலம் மாநகராட்சியில் உள்ள பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை 4 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்துவது, மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு முதற்கட்டமாக 2 கோடி செலவில் 6 ஆய்வுக் கட்டிடங்கள், மாணவ மாணவிகளுக்கு கணினி பயிற்சி மற்றும் இணையதளங்களை கையாளும் முறை அவசியமென்பதை கருத்தில் கொண்டு ஒரு கோடி ரூபாய் செலவில் 5 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தி தரப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. சேலம் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் போதுமான அளவிற்கு கழிப்பிடங்கள் இல்லாதது, கழிப்பிடங்கள் பராமரிப்பு இல்லாமல் இருப்பது ஆகியவற்றை கண்டறிந்து 2 கோடி மதிப்பில் சுகாதார வளாகங்கள் கட்டித் தரப்படும். சேலம் மாநகர பகுதியில் உள்ள விளையாட்டு மைதானங்களை சீர்செய்து, ஒருகோடி ரூபாய் செலவில் உடற்பயிற்சி சாதனங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படும், மாணவர்கள் போட்டி தேர்வினை எளிதில் எதிர்கொள்ளும் வகையில் 50 லட்சம் ரூபாய் செலவில் போட்டி தேர்வு மையங்கள் ஏற்படுத்தி தரப்படும் என கல்விக்காக மட்டும் 10 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவிடப்பட உள்ளது.
மாநகர பகுதி மக்களுக்கு 24 மணி நேரமும் மருத்துவ வசதிகளை கொடுக்க மாநகராட்சியின் மருத்துவமனைகளை மேம்படுத்துவற்காக ,சேலம் அண்ணா மருத்துவமனையில் ஒருங்கிணைந்த நகர்புற நல வாழ்வு மையம் ஏற்படுத்தி , 99 லட்சம் செலவில் முன்மாதிரி மருத்துவமனையாக செயல்படுத்தப்பட உள்ளது. சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சித்தா மருத்துவமனை மற்றும் யுனானி மருத்துவமனை ஆகியவற்றை அண்ணா மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்து, அங்கே விளையாட்டு, தினமும் யோகா வகுப்புகள், ஆண்கள் மற்றும் பெண்கள் உடற்பயிற்சி செய்யக்கூடிய பிரத்தியோக திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அண்ணா மருத்துவமனை வளாகத்தில் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் உணர திறன் ஒருங்கிணைப்பு சிகிச்சை பூங்கா ஏற்படுத்தப்படும். சேலம் மாநகராட்சியில் 16 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 32 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் ஆகியவற்றிற்கு வரும் நோயாளிகள் மற்றும் அங்குள்ள உபகரணங்களை பாதுகாத்தல் மற்றும் கண்காணித்தல் அவசியம் என்பதால் 50 லட்சம் மதிப்பில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். வெளிமாவட்டத்தில் இருந்து வணிகரீதியாக வரும் மக்கள் மனம் ரசிக்கும் வகையில், நகரில் முக்கியமான நான்கு ரவுண்டான பகுதியில் பொதுமக்களின் பங்களிப்புடன் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் இரண்டு கோடி செலவில் நவீன வசதியுடன் கூடிய சுகாதார வளாகம் ஏற்படுத்தப்படும். சேலம் மாநகராட்சி பகுதியில் , மாநகராட்சி சொந்தமான காலியிடங்கள் கண்டறியப்பட்டு, அந்த இடத்தில் சுற்றுப்புற சுகாதாரத்தை கருத்தில் கொண்டு பொது மக்களின் பங்களிப்புடன் நீரூற்றுக்கள் அமைத்து நகரை அழகு படுத்தப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு புதிய அறிவிப்புகளை மேயர் ராமச்சந்திரன் வாசித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)