Aadi 18: ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்.. சந்தைகளில் காய்கறிகள், பழங்கள், பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டின் முக்கிய சந்தைகளுக்கு காய்கறிகள், பழங்கள், பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது.
தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் தனிச்சிறப்பு வாய்ந்தது ஆகும். குறிப்பாக, ஆடி மாதம் பல்வேறு சிறப்பு வாய்ந்தது ஆகும். கோயில்களில் சிறப்பு பூஜை, வழிபாடு என்று நகரங்களும், கிராமங்களும் விழாக்கோலமாக ஆடி மாதத்தில் காணப்படும்.
காய்கறிகள், பழங்கள் வரத்து:
ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய், ஆடி அமாவாசை என பல விசேஷ நாட்களை கொண்ட இந்த ஆடி மாதத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக ஆடிப்பெருக்கு தினம் கொண்டாடப்படுகிறது. ஆடிப்பெருக்கு தினமான ஆடி 18 அன்று காவிரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கிய நதிக்கரைகளிலும், புண்ணிய தலங்களில் உள்ள நீர்நிலைகளிலும் மக்கள் குவிந்து நீராடி, ஆலயங்களில் பூஜை செய்வது வழக்கம் ஆகும்.
ஆடிப்பெருக்கு தினத்தன்று தாலி பிரித்துக்கோர்த்தல், கோயில்களில் சிறப்பு பூஜை உள்ளிட்ட பல விசேஷங்கள் நடைபெறுவது வழக்கம். தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு நாளை விசேஷமாக கொண்டாடப்பட உள்ளது. வாழை இலை, மாவிலை, தேங்காய், பழம் உள்ளிட்ட பல மங்களகரமான பொருட்கள் வைத்து வழிபடுவதால் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி, திருச்சி உள்பட மாநிலத்தின் முக்கிய பகுதிகளில் உள்ள சந்தைகளில் காய்கறிகள், வாழை இலைகள், பழங்கள் மற்றும் பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது.
விலை அதிகரிப்பு:
மக்கள் காலை முதலே முக்கிய பொருட்களை சந்தைக்கு சென்று வாங்கி வருகின்றனர். பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதி வருவதால் வழக்கத்தை விட, இன்று பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. ஆடிப்பெருக்கு விழாவிற்கு மக்கள் பச்சரிசி, மஞ்சள், குங்குமம், தேங்காய், வெற்றிலை பாக்கு, தேன், பச்சரிசி மாவு, பன்னீர் ஆகியவை வைத்து படையலிட்டு வணங்குவார்கள்.
மேற்கண்ட பொருட்கள் மட்டுமின்றி பல பொருட்களின் வரத்தும் சந்தைகளில் குவிந்து வருகிறது. காய்கறிகள், பழங்கள் வரத்தைப்போல பூக்கள் சந்தைகளிலும் மலர்களின் வரத்து அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டின் மிகப்பெரிய மலர்சந்தைகளான மதுரை, திண்டுக்கல், தோவாளை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் மல்லி, முல்லை, பிச்சிப்பூ, ரோஜா உள்ளிட்ட பல பூக்களில் வரத்து அதிகரித்துள்ளது. அதேசமயம், நாளை ஆடிப்பெருக்கு என்பதால் பூக்களின் விலை வழக்கத்திற்கு மாறாக இன்று அதிகரித்துள்ளது.
தக்காளி விலை ஏற்கனவே தாறுமாறாக உயர்ந்துள்ள நிலையில், ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு காய்கறிகள், பழங்கள், வாழை இலை, பூக்கள் விலையும் உயர்ந்திருப்பது மக்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் நாளை விழா நாள் என்பதால் சந்தைகளில் மக்கள் கூட்டமும் அலைமோதி வருகிறது. இதனால், விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாளை காலையும் விற்பனை இன்னும் தீவிரமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: ஆடி பௌர்ணமி: திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
மேலும் படிக்க: Aadi 18: மங்களகரமான ஆடிப்பெருக்கு.. கட்டாயம் வாங்கவேண்டிய பொருட்கள் என்னென்ன? இவ்வளவு நன்மைகளா?