ஆடி பௌர்ணமி: திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து, பல மணி நேரம் கோயிலில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை (Tiruvannamalai News): பஞ்சபூத தலங்களில் அக்னித்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலாகும். அண்ணாமலையார் கோயிலின் பின்புறம் உள்ள மலையை சிவனே மலையாக காட்சி அளிக்கிறார். மலையை சுற்றிலும் 14 கிலோ மீட்டர் கிரிவலப்பாதை அமைந்துள்ளது. பௌர்ணமி நாட்களில் வெளிநாடு, வெளி மாநிலம், வெளி மாவட்டம், வெளியூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த நிலையில் ஆடி மாதத்திற்காக பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
ஆடிமாத பௌர்ணமி ஆந்திர கர்நாடக மாநில பக்தர்கள் கிரிவலம்
கிரிவலம் வரக் கூடிய பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலை நகரின் வெளி சுற்றுவட்ட சாலையில் 9 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. பக்தர்கள், கிரிவலம் செல்வதற்காக திருவண்ணாமலைக்கு பேருந்துகள் மூலம் வந்தனர். இதில் ஆந்திராவை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கார், வேன் மட்டுமின்றி பேருந்துகளில் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்தனர். வாகனம் நிறுத்தும் இடங்களில் பெரும்பாலும் ஆந்திர மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வாகனங்கள் அதிகளவில் உள்ளது.
பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம்
வழக்கமான நாட்களை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பினும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். பௌர்ணமி நாட்களில் அண்ணாமலையார் கோவிலில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டதால் பக்தர்கள் அனைவரும் பொது தரிசன வழியில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 5 முதல் 6 மணி வரையில் நேரம் ஆனதாக கூறப்படுகிறது. மேலும் கோவிலில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், பக்தர்கள் விரைந்து சாமி தாிசனம் செய்வது குறித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். கிரிவலப்பாதையில் பக்தர்களின் அடிப்படை வசதிகளான கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஆங்காங்கே உடனுக்குடன் தூய்மை காவலர்கள் தூய்மை செய்து வருகின்றனர். கிரிவலப்பாதை முழுவதும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு உடனும், ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கிரிவல பாதையில் ஆங்காங்கே பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது.