”என்ன மன்னிச்சிடுங்க” கதறி அழுத விஜய் மாமல்லபுரத்தில் நடந்தது என்ன? | Mamallapuram | Vijay meets Karur Victims
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் விஜய் மன்னிப்பு கேட்டு கதறி அழுதததாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூரில் நடந்த சம்பவம் அவரது அரசியல் வாழ்வில் பெரும் துயர சம்பவமாக மாறியது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய்யைப் பார்க்க வந்த ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி பச்சிளங்குழந்தை உள்பட 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை தமிழ்நாடு முழுவதும் உண்டாக்கியது. இந்த உயிரிழப்புகளுக்கு பிறகு விஜய் மற்றும் தவெக-வின் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் மிகுந்த வேதனையையும், அதிருப்தியையும் உண்டாக்கியது. இந்த துயர சம்பவம் நடந்து ஒரு மாதமாக உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்காக விஜய் இரங்கல் தெரிவித்தார், அவர்களது வங்கிக் கணக்கிலே ரூபாய் 20 லட்சம் நிவாரணத் தொகையை தவெக வழங்கியது, பாதிக்கப்பட்ட மக்களுடன் வீடியோ காலில் பேசினார் என்றாலும், ஒரு முறை கூட அவர்களை நேரில் சென்று சந்திக்கவில்லை. இது மக்கள் மத்தியில் விஜய் மீது மிகப்பெரிய அதிருப்தியை உருவாக்கியது.
கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை விஜய் நேரில் சென்று சந்திக்காமல் அவரது அடுத்தகட்ட அரசியல் பயணமும் தேங்கியுள்ளது. இந்த நிலையில், கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை சென்னைக்கு அழைத்து வந்து அவர்களை விஜய் சந்திக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகியது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தது.
இந்தநிலையில் இன்று செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்ற கரூரில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை நேரில் சந்தித்து விஜய் ஆறுதல் தெரிவித்தார். தமிழ்நாடு அரசியல் வரலாற்றிலேயே முதல்முறையாக, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை வேறு ஊருக்கு அழைத்து ஆறுதல் தெரிவித்த நிகழ்ச்சி முதல் முறையாக அரங்கேறியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஊடகங்களுக்கு இந்த நிகழ்ச்சியின் போது அனுமதி மறுக்கப்பட்டது. நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கத்தை முழுமையாக மூடிவிட்டு ஒவ்வொரு குடும்பத்தினரும் தனித்தனியாக அழைத்து விஜய் ஆறுதல் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக விஜய் தரப்பு, பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் ஒரு விண்ணப்பம் கொடுக்கப்பட்டு அந்த விண்ணப்பத்தில் அவர்களுக்கு தேவையானதை எழுதி கொடுக்குமாறு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளனர்.
அந்த விண்ணப்ப மனுவை விஜய்யிடம் வழங்கிய போது அதில் இருப்பதை அனைத்தையும் படித்துவிட்டு, அனைத்தையும் நிறைவேற்றுவதாக விஜய் வாக்குறுதி அளித்துள்ளார். எதிர்பாராத நடைபெற்ற மரணம் என்பதால், நான் உடைந்து போய் விட்டேன் என்னால் அழுகையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியவில்லை என ஒரு சிலரிடம் கண்ணீர் விட்டு கதறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு குடும்பத்தினரும் 20 முதல் 40 நிமிடங்கள் வரை செலவு செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆறுதல் தெரிவித்து முடித்த குடும்பத்தினரை மீண்டும், பேருந்தில் கரூர் அழைத்துச் செல்லப்பட்டனர்.





















