Udhayanidhi Stalin : ”GROUND-ஐ பெருக்குங்க”வெயிலில் சுத்தம் செய்த சிறுவர்கள்! சிவகங்கையில் பரபரப்பு
சிவகங்கையில் அமைச்சர் உதயநிதி வருகையை முன்னிட்டு விடுதி மாணவர்களை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வேலையில் ஈடுபடுத்திய சம்பவம் அதிர்ச்சி ஏற்ப்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சுற்றுப் பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார் . இதனை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை காலை 10 மணிக்கு தொடங்கி வைத்ததிருந்தார்.
இந்நிலையில் மாவட்ட விளையாட்டு மைதானத்தை சுத்தம் செய்யும் பணி சாலை அமைக்கும் பணி போன்ற பல்வேறு முன்னேற்பாடு பணிகளை அரசு அதிகாரிகள் மேற்கொண்ட நிலையில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு விடுதியில் சுமார் 60 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வரும் நிலையில், அமைச்சர் வருகையால் அரசு பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் சுமார் 30 -க்கும் மேற்பட்டவர்களை மைதானத்தை சுத்தம் செய்வது, கம்பி நடுவது போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தியது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது.
பள்ளிக்கு செல்லும் மாணவர்களை பணியில் அமர்த்த கூடாது என அரசு பல்வேறு விழிப்புணர்வுப்பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், அதை அதிகாரிகள் கருத்தில் கொள்ளாமல் மாணவர்களை பணியமர்த்தும் சம்பவம் தொடர் கதையாகி வருவது வேதனைக்குரியது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் இது குறித்து விடுதி நிர்வாகத்திடம் கேட்ட போது விடுதியில் உள்ள மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்ததாகவும் அப்போது மாணவர்கள் தாங்களாகவே வேலையில் ஈடுப்பட்டதாகவும்,விடுதி தரப்பிலிருந்து மாணவர்கள் யாரையும் வேளையில் ஈடுப்படுத்தவில்லை என்று விளக்கமளித்தனர்.