Kerala Tunnel : மலையை குடைந்து சுரங்கப்பாதை..அப்படி என்ன ஸ்பெஷல்? Nitin Gadkari | Kuthiran Tunnel
கேரளா மாநிலத்தின் முக்கிய நுழைவாயிலாக கோவை மாவட்டம் வாளையார் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் பயணிக்காமல், சமவெளி பகுதி வழியாக அம்மாநிலத்திற்கு செல்ல உள்ள ஒரே வழி இது தான்.
பாலக்காடு கணவாயில் அமைந்துள்ள இந்த பாதையில், சேலம் - கொச்சி புறவழிச் சாலை அமைந்துள்ளது. கேரளா மாநிலத்தில் உள்ள முக்கியத் துறைமுகங்களுக்கு செல்ல எளிதான வழி இது தான் என்பதால், பல மாநிலங்களில் இருந்து வரும் சரக்கு வாகனங்கள் இந்த வழி வழியாக கேரளா சென்று வருகின்றன. இந்த வழித்தடத்தில் திருச்சூர் மாவட்டத்தில் பாலக்காடு - திருச்சூர் சாலையில் குதிரன் என்ற இடத்தில் மலைகளை குடைந்து சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மன்னுத்தி - வடக்கன்சேரி பகுதிகளை இணைக்கும் இப்பகுதி, மலைப் பாங்கான பகுதியாக உள்ளது. இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருகின்றன. கனரக சரக்கு வாகனங்கள் மெதுவான வேகத்தில் செல்வதால், போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படுகின்றன.
சாலையின் இடையே குறுக்கிடும் மலையை கடக்க 3 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. அரை மணி நேரத்திற்கும் மேலாக கால விரயம் ஏற்படுகிறது. இவற்றை தவிர்க்கும் வகையில் மலையை குடைந்து சுரங்கப் பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. கேரளா மற்றும் தென்னிந்தியாவின் முதல் சாலை சுரங்கப் பாதையாக, மத்திய அரசின் நிதியில் கடந்த 2016 ம் ஆண்டு குதிரன் சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டது. பீச்சி - வாசஹனி வன விலங்கு சரணாலயத்திற்கு உட்பட்ட பகுதியில் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் பணிகள் செய்யப்பட்டன. பாலக்காடு - திருச்சூர் சாலை மற்றும் திருச்சூர் - பாலக்காடு சாலை ஆகிய இரண்டு பாதைகளில் இரண்டு சுரங்கப் பாதைகள் அமைக்கப்படுகின்றன. இரண்டிலும் சேர்த்து 6 வழிச் சாலையாக 1.6 கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்படுகிறது. இதனால் இரண்டு நிமிடங்களில் அந்த மலையை கடந்து செல்ல முடியும். சுமார் 1300 கோடி ரூபாய் செலவில் இந்த சுரங்கப் பாதை பணிகள் செயல்படுத்தப்பட்டு வந்தது. எனினும் பணிகள் மெதுவாக நடந்து வந்ததால், வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வந்தனர்.
இந்நிலையில் பாலக்காடு - திருச்சூர் சாலையில் உள்ள சுரங்கப் பாதை பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு வழி பாதை திறக்கப்பட்டது. இதையடுத்து வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 964 மீட்டர் தூரம் மலைக்குள் சுரங்கப் பாதை செல்கிறது. 14 மீட்டர் அகலமும், 10 மீட்டர் உயரமும் கொண்டதாக சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இப்பாதையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 1200 எல்.இ.டி. விளக்குகள் மற்றும் 100 மீட்டருக்கு ஒன்று என்ற வீதத்தில் சிசிடிவி கேமராக்கள், இரண்டு எமர்ஜென்சி போன்கள் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, குதிரன் சுரங்கப் பாதை திறக்கப்படும் என டிவிட்டரில் பதிவிட்டார். இதன் திறப்பு விழா எளிமையாக நடத்தப்பட்டது. அன்று மாலை பாலக்காடு - திருச்சூர் சாலையில் உள்ள சுரங்கப் பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. அதேசமயம் எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் யாருக்கும் அழைப்பு விடுக்காமல் புறக்கணித்ததாக புகாரும் எழுந்துள்ளது. திருச்சூர் - பாலக்காடு சாலையில் சுரங்கப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு அப்பாதையும் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.