Udhayanidhi Vs Nayinar: வீரவசனம் பேசி தப்ப முடியாது; ரத்தீஷ், ஆகாஷ் தலைமறைவானது ஏன்.? உதயநிதிக்கு கொக்கி போட்ட நயினார்
ED ரெய்டுக்கு பயந்துதான் முதலமைச்சர் டெல்லி சென்றதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு நேற்று உதயநிதி பதிலளித்திருந்த நிலையில், அவருக்கு கொக்கி போடும் வகையில் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமலாக்கத்துறை சோதனைக்கு பயந்துதான் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, பிரதமர் மோடியை சந்திக்கத்தான் டெல்லி சென்றார் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்த நிலையில், அது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு நேற்று உதயநிதி ஸ்டாலின் பதிலளித்திருந்தார். அப்போது, தவறு செய்யவில்லை என்பதால் யாருக்கும் பயப்படத் தேவையில்லை என்று கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தவறு செய்யவில்லை என்றால், ரத்தீஷும், ஆகாஷும் ஏன் தலைமறைவானார்கள் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், உதயிதிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
உதயநிதி கூறியது என்ன.?
புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலினிடம், ED ரெய்டுக்கு பயந்துதான் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளதாக கூறப்படுவது குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த உதயநிதி, நாங்கள் ED-க்கும் பயப்பட மாட்டோம், மோடிக்கும் பயப்பட மாட்டோம் என்று தெரிவித்தார். மேலும், அவர்கள் எங்களை மிரட்டப் பார்த்தார்கள், ஆனால், நாங்கள் அடிபணியவில்லை என்றும், நாங்கள் தவறு செய்யவில்லை, தவறு செய்தவர்கள் தான் பயப்பட வேண்டும், நாங்கள் பயப்பட மாட்டோம் என தெரிவித்தார். மேலும், எதுவாக இருந்தாலும் சட்டப்பூர்வமாக சந்திப்போம் என கூறினார்.
வீர வசனம் பேசி தப்பிக்க முடியாது - உதயநிதிக்கு நயினார் பதிலடி
உதயநிதியின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “மோடிக்கும் பயமில்லை, ED-க்கும் பயமில்லை“ என்று வழக்கம் போல எதுகை மோனையில் வீரவசனம் பேசிவிட்டு தப்பிவிடலாம் என்று உதயநிதி நினைப்பதாக கூறியுள்ளார்.
தவறு ஏதும் செய்யவில்லை என்றால், வழியில் ஏதும் பயமில்லை என்றால், எதற்காக உதயநிதியின் கூட்டாளிகளான ரத்தீஷும், ஆகாஷ் பாஸ்கரனும் இன்று வரை தலைமறைவாக உள்ளார்கள் என்று உதயநிதி விளக்கம் கொடுப்பாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், நீங்கள் பிரதமருக்கு பயப்படுகிறீர்களா என்பது கேள்வி அல்ல, நீங்கள் நீதிக்கு பயப்படுகிறீர்களா என்பதுதான் உண்மையான கேள்வி என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அதோடு, அந்த நீதி, நிச்சயம் இறுதியில் உங்கள் எண்ணத்தை எல்லாம் தூளாக்கி, திமுகவுக்கு தக்க பாடம் கற்பிக்கும் என்பதில் தனக்கு எந்த சந்தேகமுமில்லை என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பதிவிட்டுள்ளார்.
“மோடிக்கும் பயமில்லை, ED-க்கும் பயமில்லை” என்று வழக்கம் போல எதுகை மோனையில் வீரவசனம் பேசிவிட்டு தப்பிவிடலாம் என்று நினைக்கிறார் திரு. @Udhaystalin அவர்கள்.
— Nainar Nagenthiran (@NainarBJP) May 24, 2025
தவறு ஏதும் செய்யவில்லை என்றால், வழியில் ஏதும் பயமில்லை என்றால், எதற்காக திரு. உதயநிதி அவர்களின் கூட்டாளிகளான ரத்தீஷும்,… pic.twitter.com/swfGKWesYe





















