காவிரி, வைகைக்கு திட்டம்.. மாநில வரி பங்கு! பிரதமரிடம் முதலமைச்சர் வைத்த டிமாண்ட் இதுதான்
டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடியிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்து முதலமைச்சர்களும் பங்கேற்ற நிதி ஆயோக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிற்காக பல கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்.
இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிற்காக வலியுறுத்தி முன்வைத்த கோரிக்கைகள்:
- நாட்டில் உள்ள நகர்ப்புறங்களின் மேம்பாட்டிற்கு பெருமளவிலான நிதியை கொண்ட ஒரு பெரிய திட்டம் அவசியம். அம்ருத்0 திட்டம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. சிறந்த உட்கட்டமைப்பு, இயக்கம் மற்றும் சுகாதாரத்தை மையமாக கொண்ட ஒரு புதிய நகர்ப்புற மறுமலர்ச்சி திட்டத்தை உருவாக்குவது அவசரத் தேவை. இதுபோன்ற ஒரு திட்டத்தை விரைவில் உருவாக்கித் தர வேண்டும்.
- தமிழ்நாட்டில் உள்ள காவிரி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட முக்கியமான ஆறுகளையும், நாட்டில் உள்ள பிற முக்கியமான ஆறுகளையும் சுத்தம் செய்து மீட்டெடுக்க சுத்தமான கங்கை போன்ற திட்டம் தேவை. எனவே, காவிரி, வைகை, தாமிரபரணிக்கு புதிய திட்டத்தை நீங்கள் உருவாக்கித் தர வேண்டும்.
- இந்த திட்டங்களுக்கு அனைத்து மாநிலங்களுக்கும் தொடர்பு மொழியாக இருக்கும் ஆங்கிலத்தில் பெயரிட வேண்டும்.
- தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் தங்கள் வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு ஒன்றிய அரசு பாகுபாடின்றி ஒத்துழைப்பு தர வேண்டும்.
- பி.எம்.ஸ்ரீ. திட்டம் தொடர்பான கல்வி அமைச்சகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சில மாநிலங்கள் கையெழுத்து போடாததால் எஸ்.எஸ்.ஏ. நிதி மறுக்கப்பட்டுள்ளது. 2024-25ம் ஆண்டில் சுமார் 2,200 கோடி ரூபாய் ஒன்றிய நிதி தமிழ்நாட்டுக்கு மறுக்கப்பட்டுள்ளது. இது அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் மற்றும் ஆர்டிஇ கீழ் படிக்கும் குழந்தைகளின் கல்வியை பாதிக்கிறது. எனவே, தாமதமின்றி ஒரு தலைபட்ச நிபந்தனைகளை வலியுறுத்தாமல் இந்த நிதியை விடுவிக்க வேண்டும்.
- கடந்த 15வது நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி மாநில வரி வருவாய் பங்கை 41 சதவீதமாக உயர்த்தினார்கள். ஆனால், கடந்த 4 ஆண்டுகளில் இதற்கு மாறாக ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில்16 சதவீதம் மட்டுமே மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.
- ஒன்றிய அரசிடம் இருந்து வரவேண்டிய வரிப்பகிர்வு குறைவதால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள், மறுபுறம் ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தும் திட்டங்களுக்கு மாநில அரசு செலவிடும் அதிக நிதி என இரண்டும் மாநில அரசுகளுக்கு பெரும் சுமையை ஏற்படுத்துகிறது. எனவே, ஒன்றிய வருவாயில் மாநிலங்களுக்கான வரி பகிர்வை 50 சதவீதமாக உயர்த்துவதுதான் முறையாக இருக்கும். இதை ஒன்றிய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த கூட்டத்தில் தமிழகத்திற்காக இந்த கோரிக்கைகளை முதலமைச்சர் முன்வைத்து இவ்வாறு பேசினார்.
மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய பல்வேறு நிதிகளை முறையாக ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து உள்ளது. மேலும், நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆதரவில் ஆட்சி நடத்தும் பா.ஜ.க. பீகார் மற்றும் ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களுக்கு மட்டும் மத்திய பட்ஜெட்டில் மிகப்பெரிய சலுகைகளை அளித்து வருவதாகவும் குற்றச்சாட்டு மற்ற கட்சியினரால் முன்வைக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த குற்றச்சாட்டை மற்ற மாநிலங்களும் முன்வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





















