Villupuram: விழுப்புரம் போனால் கண்டிப்பா இந்த இடங்களை பாருங்கள்....குவிந்து கிடக்கும் வரலாற்று பொக்கிஷங்கள்
Villupuram Tourist Places: விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் குறித்த தகவல்கள்.
விழுப்புரம் ( Villupuram )
விழப்பரையார்கள் என்ற பூர்வீக மக்கள் வாழ்ந்து வந்த பகுதியை தான் விழுப்புரம் என்று பெயரிட்டு அழைப்பதாக ஒரு வரலாறு உள்ளது. 1993ஆம் ஆண்டு தென் ஆற்காடு மாவட்டத்தில் இருந்து பிரித்து இந்த மாவட்டம் உருவாக்கப்பட்டது. இத்தகைய விழுப்புரத்தில் சுற்றி பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சிக் கோட்டை, கல்வராயன் மலை ஆகியவை விழுப்புரத்துக்கு அருகில் உள்ள சுற்றுலா தளங்களாகும். திருக்கோயிலூர், திருவக்கரை முதலியவை அருகில் உள்ள புகழ்பெற்ற வணக்கத் தளங்கள் ஆகும். தென்னாற்காடு மாவட்டத்திலிருந்து பிரிந்த மாவட்டம் விழுப்புரம். மயிலம் முருகன் கோயில், திருநங்கைகள் கூடும் கூவாகம் கூத்தாண்டவர் கோயில், சிங்கவரம் ஒற்றை கற்கோயில், செஞ்சிக்கோட்டை, சடையப்ப வள்ளல் பிறந்த திருவெண்ணை நல்லூர், ஆழ்வார்கள் பாடிய உலகளந்த பெருமாள் கோயில் உள்ள திருக்கோயிலூர், அழகிய மரக்காணம் கடற்கரை, மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயில் எனப் பார்க்க வேண்டிய சிறப்பிடங்கள் உள்ளன.
திருக்கோவிலூர் ( Thirukovilur )
அன்பே தகளியாக; ஆர்வமே நெய்யாக என்ற பெரியாழ்வாரின் பாடல் பெற்ற தலம், திருக்கோயிலூர் ஆகும். முதலாழ்வார் மூவர் உலகளந்த பெருமாளைப் பாடிப் பரவியுள்ளனர். இங்குப் பெருமாளுடன் புஷ்பவல்லித் தாயாரும் கோயில் கொண்டுள்ளார். இது தவிர மற்றொரு சுற்றுலாத் தலமும் இருக்கிறது. பெண்ணையாற்றின் நடுவே உள்ள கபிலர் குன்றில் சங்க இலக்கியக் கவிஞர் கபிலர் கடைசிக் காலத்தில் தங்கியிருந்ததாகச் சொல்லப்படுகிறது. மாநில தொல்பொருள் ஆய்வுத் துறையினரின் பாதுகாப்பில் இக்கோயில் இருக்கிறது. மேலும் கடலூர் - சித்தூர் சாலையில் விழுப்புரத்திலிருந்து 37 கி.மீ தொலைவில் உலகளந்த பெருமாள் கோவில் உள்ளது.
மேல்மலையனூர் ( Melmalayanur )
சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தியான இடம் இது என்று ஒட்டக்கூத்தரின் தக்கயாகப் பரணி கூறுகிறது. மேல் மலையனூர் சுடுகாட்டில் வீற்றிருக்கும் அங்காளம்மனிடம் தோஷம் பீடித்த சிவன் பிச்சைக்காரனாகப் பிச்சை பெற்று தோஷம் நிவர்த்தியானதாகக் கூறப்படுகிறது. இதைக் குறிக்கும் மயானக் கொள்ளைத் திருவிழா புகழ்பெற்றது. மாசி அமாவாசையில் நடத்தப்படும் இந்த திருவிழா, பத்து நாட்கள் நடைபெறும். மேலும் இங்கு அமாவாசை இரவில் தங்கினால் நினைத்தது நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை உள்ளது. மேல்மலையனூர் மகா ஏரியிலிருந்து பிறக்கும் சங்கராபரணி ஆறு, செஞ்சி வழியாகச் சென்று பாண்டிச்சேரி கடலில் கலக்கிறது.
மரக்காணம் கடற்கரை ( Marakkanam )
புதுவையிலிருந்து 22 கி.மீ. தொலைவில், கிழக்குக் கடற்கரை சாலையில் அமைந்துள்ளது. மரக்காணம் கடற்கரையும், மீனவர் கிராமமும் தனி சொர்கம் என கூறப்படுகிறது. மேலும் உப்பு உற்பத்தியில் மரக்காணம், தூத்துக்குடி அடுத்தபடியாக இரண்டாவது இடமாக மரக்காணம் திகழ்கிறது. சுமார் 3,500 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.
திருவெண்ணைநல்லூர் ( Thiruvennainallur )
கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்பார்களே. அந்தக் கம்பனை ஆதரித்துப் போற்றிய சடையப்ப வள்ளல் பிறந்த ஊர். பழமை வாய்ந்த சிவன் கோயில் ஒன்று இங்குள்ளது. விழுப்புரத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் திருக்கோயிலூர் சாலையில் அமைந்துள்ளது திருவெண்ணைநல்லூர்.
திருவக்கரை ( thiruvakkarai )
திருவக்கரை என்றதும் கல்மர பூங்காவும், வக்கரகாளி அம்மன் கோவிலும் தன ஞாபகத்திற்கு வரும். இங்குள்ள சோழர்கால சிவன் கோயில் புகழ்பெற்றது. பௌர்ணமி தோறும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இக்கிராமத்தில் புராதன காலத்தின் சாட்சியாகக் கல்மரங்கள் அதிக அளவில் சங்கராபரணி ஆற்றின் கரையோரம் கிடைக்கின்றன.
மண்டகப்பட்டு ( mandagapattu )
மக்களை ஆண்ட மன்னர்களின் கலை, காலத்தால் அழியாத சிற்பக்கலை மற்றும் குடைவரைக் கோயில்கள் உள்ளன. மகேந்திரவர்ம பல்லவன் உருவாக்கிய புகழ்பெற்ற குடைவரைக் கோயில் இங்கு உள்ளது. விழுப்புரத்திலிருந்து 20 கி.மீ. தொலைவிலும், செஞ்சியிலிருந்து 17 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
மயிலம் ( Mailam )
திண்டிவனம் அருகே மயிலம் கிராமத்தில் ஒரு சிறிய மலைக்குன்றில் எழுந்தருளி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு நிகழும் பங்குனி உத்திரத் திருவிழாவைக் காண தமிழகம் முழுவதுஉள்ள பக்தர்கள் கூடுவார்கள். விழுப்புரத்திலிருந்து 35 கி.மீ. தொலைவில் பாண்டிச்சரி - திண்டிவனம் சாலையில் அமைந்துள்ளது மயிலம்.
எண்ணாயிரம் ( ennayiram )
இந்த கிராமத்தில் 8000 சமணர்கள் வாழ்ந்ததாக கூறுகின்றனர். இதனால் 'எண்ணாயிரம்' என்ற பெயர் ஊருக்கு வந்திருக்கிறது. மாமன்னன் இராஜராஜ சோழன் கட்டிய நரசிம்மஸ்வாமி கோயில் இங்குள்ளது. மேலும் நரசிம்மப் பெருமாள் கோயிலையும் இங்கே தரிசிக்கலாம். பெருமாள் பக்தர்கள் அதிகம் பார்க்க வேண்டிய கோயிலாகும்.
மேல் சித்தாமூர் ( mel sithamur )
திண்டிவனத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் மேல் சித்தாமூர் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் வாழ்ந்த திகம்பர சாமிகளின் தலைமையகம். காஞ்சி என்பவர் தலைமைக் குருவாகத் திகழ்ந்துள்ளார். இங்குள்ள இரண்டு சமணக் கோயில்கள் ஒன்றில் பர்சவானந்தரும், மற்றொன்றில் மயிலானந்தரும் வீற்றுள்ளனர். மயிலானந்தர் ஆலயத்தில் உள்ள பெரிய கற்பாறையில் பஹீபாலி, பர்சவானந்தர், ஆதிநாதர், மஹhவீரர் மற்றும் அம்பிகா யஷீ ஆகிய சிற்பங்கள் கல்லில் வடிக்கப்பட்டுள்ளன. இந்தச் சமண ஆலயங்கள் 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை ஆகும்.
எசலம் ( esalam )
சோழமன்னன் முதலாம் இராஜேந்திர சோழன் கட்டிய கோயில். இங்கு இராமநாதேஸ்வரர் கோயில் கொண்டுள்ளார். மாமன்னனைப் பற்றி வடமொழி கிரந்த எழுத்துக்களில் எழுதப்பட்டு சோழ அரச இலச்சினையும் பொறிக்கப்பட்டுள்ளது.
செஞ்சி கமலக்கண்ணியம்மன் கோயில் ( Gingee )
இக் கோயிலில் பலிபீடம் ஒன்றும் மற்றும் நாயக்கர் கால சுவர் ஓவியங்களும் உள்ளன. செஞ்சி ராஜகிரி மலைக்கோட்டை வழியில் இந்த கோயில் உள்ளது.
செஞ்சிக் கோட்டை ( gingee fort )
சப்த கன்னிகளில் ஒன்றாக திகழும் செஞ்சியம்மனின் பெயரால் விளங்கும் இக்கோட்டை சுமார் 700 ஆண்டுகள் பழமையானது. இக்கோட்டை ஆனந்தக் கோனாரால் அமைக்கப்பட்டு பல அரசர்களின் ஆட்சியின் கீழ் இருந்து பின்னர் பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் வசம் இருந்தது. தற்போது இக்கோட்டை மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறையின் பராமரிப்பில் உள்ளது. கிருஷ்ணகிரி, சந்திரகிரி மற்றும் ராஜகிரி ஆகிய மூன்று சீரற்ற மலைக்குன்றுகளை மாபெரும் செஞ்சிக்கோட்டையின் மதில்கள் அரவணைத்துக் செல்கின்றன.ராஜகிரி மலை மட்டுமே (800 அடி உயரம்) தனியாக எவற்றோடும் பொருந்தாமல் நிற்கும் குன்று. தற்போது கட்டப்பட்ட ஒரு பாலம் 20 மீ வரை ஆழமுள்ள சுனையை இணைக்கிறது.
செஞ்சிக் கோட்டை குளங்கள் ( gingee fort )
அனுமன் கோயிலுக்குச் செல்லும் வழியில் கீழ்க்கோட்டைக்கு வெளியே உள்ள கோயில் குளங்களும், கண்ணைக் கவரும் அழகிய வடிவங்களும் உள்ளன. இவற்றில் சக்கரகுளம், செட்டிகுளம் ஆகிய இரு குளங்களும் புகழ்பெற்றவை. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் மராட்டியர்கள் ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்தில் இந்த குளம் வெட்டப்பட்டுள்ளது. இக்குளத்தின் வடபுறம் உள்ள சிதைச் சதுக்கம் ராஜா தேசிங்கினுடையது என்று கூறப்படுகிறது .
சிங்கவரம் ( singavaram )
குடைவரைக் கோயில், மாவீரன் ராஜாதேசிங்கு வழிபட்ட ரெங்கநாதர் இக்குன்றின் உச்சியில் கோயில் கொண்டுள்ளார். குடைவரைக்கோயில் தனிச்சிறப்பான தென்னிந்தியக் கோயில் கட்டடக் கலைப்பாணியில் கட்டப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதரைவிட, இந்த ரெங்கநாதர் நீளமானவர் என்று கதப்படுகிறது. சிங்கவரம் ரெங்கநாதர் 24 அடி நீளத்திற்கு பள்ளி கொண்டுள்ளார். அவரும், பள்ளியறையும் ஒரே கல்லில் உருவானவை.
திருவாமாத்தூர் ( thiruvamathur )
அபிராமேஸ்வரர் வீற்றிருக்கும் சோழர் காலத்து பழமையான கோயில் இங்குள்ளது. 1500 ஆண்டுகால பழமை வாய்ந்தது. இந்த கோயில் இராஜராஜ சோழன் மற்றும் சீரங்கதேவ மஹhராயர் ஆகிய இருவருக்கும் இடைப்பட்ட காலத்தில் பல கைகள் மாறியுள்ளதாகக் தெரிகிறது.
ஆரோவில்
ஆரோவில் என்பது ஒரு சர்வதேச நகரமாகும். இங்கு உலகம் முழுவதிலிருந்தும் வந்து 50,000 பேர் வசிக்கக்கூடிய நகரமாக இது திட்டமிடப்பட்டுள்ளது. ஆரோவில்லின் நோக்கம் – மனிதஇன ஒற்றுமையை பரிசோதித்துப் பார்ப்பதற்காக இந்த இலட்சிய நகரம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 1930-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே ஸ்ரீ அன்னைக்கு இத்தகைய நகரத்தை உருவாக்கவேண்டுமென தோன்றியது. 1960-ஆம் ஆண்டு மத்தியில் பாண்டிச்சேரி ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம் இதுபோன்ற நகரத்தை உருவாக்கவேண்டும் என ஸ்ரீ அன்னையிடம் தெரிவித்தது. அதற்கு ஸ்ரீ அன்னை தம் ஆசீர்வாத்தை அளித்தார். பின்னர் இக்கருத்துரு இந்திய அரசாங்கத்தின் முன்வைக்கப்பட்டது, அதற்கு அது தனது ஆதரவை அளித்தது. மேலும், யுனெஸ்கோவின் பொதுசபைக்கு எடுத்து சென்றது. 1966-ஆம் ஆண்டு யுனெஸ்கோ எதிர்கால மனித சமுதாயத்திற்கு இது முக்கியமான திட்டம் என பாராட்டி ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றி, இதற்கு தனது முழு ஆதரவையும் அளித்தது.