EPS Campaign : ’34 நாட்கள், 10 ஆயிரம் கி.மீ, 100 தொகுதிகள்’ மாஸ் காட்டும் எடப்பாடி பழனிசாமி..!
'காசு கொடுத்து கூட்டத்தை கூட்டுகிறார்கள என்று பல்வேறு விமர்சனங்கள் எடப்பாடி பழனிசாமி பயணம் குறித்து எழுந்தாலும் அவரின் இந்த சுற்றுப்பயணம் அதிமுகவிற்கு புதிய தெம்பை ஏற்படுத்தியிருக்கிறது'

‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் 234 தொகுதிகளுக்கும் முதல் ஆளாக பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்கினார் எடப்பாடி பழனிசாமி. 2026ஆம் ஆண்டு தேர்தலில் ஆட்சியை பிடித்தே ஆக வேண்டிய கட்டாயம் அவருக்கு இருப்பதால், மற்ற கட்சிகளுக்கு முன்னாள், தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு பல மாதங்களுக்கு முன்னரே தன்னுடைய மக்கள் சந்திப்புகள் மூலம் தொண்டர்களையும் கட்சி நிர்வாகிகளையும் தேர்தலுக்கு தயார்படுத்தவும் அவர்களை உற்சாகப்படுத்தவும் இந்த சுற்றுப்பயணத்தை தொடங்கியிருக்கிறார் அவர்.
ஜெயலலிதா பாணியில் எடப்பாடி பழனிசாமி
ஜெயலலிதா பாணியில் கொங்கு மண்டலத்தில் இருந்து தொடங்கிய எடப்பாடி பழனிசாமியின் எழுச்சி பயணம், 34 நாட்களில் 10 ஆயிரம் கிலோ மீட்டர்களை கடந்து, 52 லட்சம் மக்களிடையே பேசி, 100 தொகுதிகளை தொட்டிருக்கிறது. ஒரு நாளைக்கு குறைந்தது 14 மணி நேரம் பிரச்சாரம் செய்து கவனம் ஈர்த்திருக்கும் அவர், மிக விரைவாகவும் அதே நேரத்தில் மிக கவனமாகவும் ஒவ்வொரு தொகுதிக்கான பிரச்னைகளையும், அதிமுக ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்ற வாக்குறுதிகளையும் மக்கள் மத்தியில் சொல்லி சென்றிருக்கிறார்.
ஒவ்வொரு தொகுதிக்கு அவர் பிரச்சாரத்திற்கு செல்வதற்கு முன்பாக காலையில் அவர் தங்கியிருக்கும் இடத்திலேயே விவசாயிகள், வியாபாரிகள், நெசவாளர்கள், மீனவர்கள் உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறார். இதுவரை 150-க்கும் மேற்பட்ட கலந்துரையாடல்களில் பங்கேற்று அவர்களின் பிரச்சினைகளை நேரடியாகக் கேட்டும் அதற்கு அதிமுக ஆட்சிக்கு வந்ததும் தீர்வு காணப்படும் என்ற உத்தரவாதத்தையும் அவர்கள் மத்தியில் கொடுத்திருக்கிறார் எடப்பாடி.
நேர்மையான ஆட்சி - உறுதி கொடுத்த EPS
தன்னுடைய பயணத்தின் நூறாவது தொகுதியான ஆம்பூரில் பேசும்போது, ’’ஒவ்வொரு ஊரிலும், வேலைவாய்ப்பு இழப்பு, விலைவாசி உயர்வு, நிறைவேறாத வாக்குறுதிகள் ஆகியவற்றால் மக்கள் துன்பப்படுகிறார்கள். ஆனால் அவர்களின் கண்களில் நம்பிக்கை தெரிகிறது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் நேர்மையான ஆட்சியையும் வளர்ச்சியையும் கொடுப்போம் என மக்கள் மத்தியில் கூறியிருக்கிறார்.
அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தின் தலைமை குறித்து எழுந்த கேள்விகளுக்கும் விமர்சனங்களும் தன்னுடைய சுற்றுப்பயணத்தின் மூலம் பதிலடி கொடுத்திருக்கும் அவரது பேச்சுகள், சாலைப் பொதுக்கூட்டங்கள் தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக கோடிக்கணக்கான மக்களை எட்டியுள்ளன. எளிமையான, நேர்மையான பேச்சும், மக்களுடன் இயல்பாக பழகும் தன்மையும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர், மழை, வெயில் பொருட்படுத்தாமல், இரவு நேரங்களிலும் காத்திருந்து எடப்பாடி பழனிசாமியின் பேச்சை கேட்பது கட்சி நிர்வாகிகளுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, திமுக அரசுக்கு எதிரான பல்வேறு குற்றச்சாட்டுகளை தொடர்ச்சியாக தன்னுடைய பிரச்சாரங்களில் முன் வைத்து மக்கள் மத்தியில் பேசி வரும் எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய பேச்சின் இறுதியில் கூறும் ‘பை, பை – ஸ்டாலின்’ என்ற சொல்லாடல் அதிமுக தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
காசு கொடுத்து கூட்டத்தை கூட்டுகிறார்கள். குறுகிய சந்தில் கூட்டத்தை நடத்துகிறார்கள் என்று பல்வேறு விமர்சனங்கள் எடப்பாடி பழனிசாமி பயணம் குறித்து எழுந்தாலும் அவரின் இந்த சுற்றுப்பயணம் அதிமுகவிற்கு புதிய தெம்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த பிரச்சாரத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் தொடர்ந்து இதுபோன்ற முன்னெடுப்புகளை எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் அதிமுக தொண்டர்களின் எண்ணமாக இருக்கிறது.






















