சினிமா கிளைமேக்சுக்கு நிகரான பரபரப்பு... போலந்து செல்கிறார் தமிழ்நாட்டின் சிங்கப்பெண் சமீஹா பர்வீன்
தகுதி இருந்தும் தமிழர் என்பதாலும் பெண் என்பதாலும் புறக்கணிக்கப்பட்ட சமீஹா பர்வீன் நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தி போலந்து தடகள போட்டிகளுக்கு செல்கிறார்
ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா ஒரு பதக்கம் வாங்கவே எத்தனை போராட்டங்களை சந்திக்க வேண்டி இருந்தது என்பதை நாம் அறிந்திருப்போம். ஒவ்வொரு பதக்கங்களை நமது வீரர்கள் வெல்லும்போதும், கடைசியாக தங்கப்பதக்கத்தை நீரஜ் சோப்ரா வென்றபோதும் தாங்களே வெற்றிபெற்றதை போல் ஒவ்வொரு இந்தியரும் மகிழ்ந்தனர். டோக்கியோவில் ஒலிம்பிக் பதக்கத்துக்காக இந்திய வீரர்கள் போராடிக்கொண்டிருந்த அதே நேரம், இந்தியாவில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு வீராங்கனை நீதிக்காக போராடிக்கொண்டிருந்தார்.
யார் அவர்..? விரிவாக காண்போம்
கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமேடு கிராமத்தை சேர்ந்த முஜிப், சலாமத் தம்பதியினரின் மகள் ஷமீஹா பர்வீன். 6 வயதில் ஏற்பட்ட அம்மை நோய் காரணமாக செவித்திறன் மற்றும் பேசும் திறனை இழந்தார். இதனிடையே சமீஹா நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தடையோட்டத்தில் அபார திறமை கொண்டிருப்பதை அறிந்த அவரது ஆசிரியர்கள், பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
உடனே அவருக்காக ஈரோட்டில் பயிற்சியாளர் ஒருவரை ஏற்பாடு செய்த தாய், ஆங்கேயே தங்கி கூலி வேலை செய்து வந்தார். தாயின் கஷ்டத்துக்கு கைமாறாக பல்வேறு தடகளப் போட்டிகளில் பங்குபெற்று 9 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் உட்பட ஏராளமான பதக்கங்களை வென்றார் சமீஹா பர்வீன்.
போலந்து சர்வதேச மாற்றுத் திறனாளிகளுக்கான சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தகுதி:
இந்நிலையில் வருகின்ற 23-ஆம் தேதி போலந்து நாட்டில் தொடங்கவுள்ள சர்வதேச மாற்றுத் திறனாளிகளுக்கான சாம்பியன்ஷிப் போட்டிக்கான தகுதிச் சுற்றுப்போட்டிகள் டெல்லி ஜவஹர்லால் நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு நீளம் தாண்டுதல் போட்டியில் 5 மீட்டர் தாண்டி பெண்களில் முதலிடம் பிடித்தார்.
ஆனால் தேர்வு முடிவை அறிவிக்காத அனைத்து இந்திய காது கேளாதோருக்கான விளையாட்டு கூட்டமைப்பு, வீராங்கனை சமீஹா பர்வீனை தேர்ந்தெடுக்காமல் 5 ஆண் போட்டியாளர்களை மட்டும் தேர்வு செய்து போலந்துக்கு அனுப்ப இந்திய விளையாட்டு ஆணையத்திற்கு பரிந்துரைத்தது. இருந்தாலும் மனமுடையாத வீராங்கனை சமிஹாவின் தாய் சலாமத், அதிகார மையத்தின் அனைத்து கதவுகளையும் தட்டினார். தமிழர் என்பதாலும், பெண் என்பதாலும் தங்களை புறக்கணிப்பதாக ஊடகங்களில் பேட்டி கொடுத்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு:
இந்த செய்தியை அறிந்த தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த சமூக செயல்பாட்டாளர் பத்மினி சென்னபிரகடா என்பவர் சென்னையை சேர்ந்த பிரபல உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரபாகர் என்பவருடன் இணைந்து சமீஹா பர்வீன் பெண் என்பதால் புறக்கணிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடுத்தார். வழக்கின் தன்மையை உணர்ந்து கொண்ட நீதிபதி மகாதேவன் வழக்கை உடனே ஏற்றுக் கொண்டு இந்திய விளையாட்டு ஆணையம் 24 மணி நேரத்திற்குள்ளாக விளக்கம் அளிக்க உத்தரவிட்டார்.
ஆனால் ஆணையத்தால் சரியான காரணங்களை சொல்ல முடியாததால் கடந்த வெள்ளிக்கிழமை வீராங்கனை சமீஹா பர்வீனை போலந்து நாட்டில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்றும் 16-ம் தேதிக்குள் இந்திய விளையாட்டு ஆணையத்தின் தலைமை இயக்குநரை சந்திக்க வேண்டும் என்றும் அவசர உத்தரவை பிறப்பித்தார். தனது மகளுக்கு நீதி கிடைத்துவிட்டது என்ற நம்பிக்கையுடன் அவரை அழைத்துக்கொண்டு டெல்லி புறப்பட்டார் தாய் சலாமத். அவருடன் கன்னியாகுமரியை சேர்ந்த சமூக செயல்பாட்டாளர் அன்சர் மீரான், சென்னையை சேர்ந்த முகமது கவுஸ் ஆகியோரும் டெல்லி சென்றனர்.
டெல்லியில் அலைக்கழித்த அதிகாரிகள்:
ஆனால் அங்கு அவர்களுக்கு மேலும் சில அதிர்ச்சிகள் காத்திருந்தன. டெல்லி சென்று சேர்ந்தவர்கள் உடனடியாக அனைத்து இந்திய காது கேளாதோருக்கான விளையாட்டு குழும தலைவர் மகேந்திர சிங்கை சந்திக்க நேரம் கேட்டபோது, அனுமதிக்காமல் அலைக்கழித்துள்ளார். இதனால் அவரது வீட்டிற்கே சென்று சந்தித்தனர். இதன் தீவிரத்தை புரிந்துகொண்ட தலைவர், உடனடியாக சமீஹா பர்வீன், கரூரை சேர்ந்த உயரம் தாண்டுதல் வீரர் கார்த்திக், ஹரியானாவை சேர்ந்த தட்டெறிதல் வீராங்கனை பிரியங்கா உள்ளிட்டோரை போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என இந்திய விளையாட்டு ஆணையத்திற்கு கடிதம் அனுப்பினார்.
இதன் பின் இந்திய விளையாட்டு ஆணைய தலைவரை சந்திக்க சென்ற போது சமீஹா பர்வீனை அனுமதிக்கவிடாமல் பல மணி நேரம் காக்க வைத்துள்ளனர். சர்வதேச விளையாட்டு கவுன்சிலில் பங்கேற்பதற்கான பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவடையும் நிலையில் தொடர் தாமதத்தால் பொறுமையிழந்த சமூக செயற்பாட்டாளர்கள் பிரச்சனையை விளக்க திட்டமிட்டு அவசர பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்தனர்.
கடைசி நேர பரபரப்பு:
டெல்லி ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்திற்குள் பத்திரிகையாளர்கள் வாகனங்கள் வருவதை அறிந்து கொண்ட விளையாட்டு ஆணைய அதிகாரிகள் கடைசி நேரத்தில் சமீஹா பர்வீனை அழைத்துள்ளனர். அப்போது போலாந்து செல்வதற்கான அனுமதி கடிதம், மைதானத்தில் தங்கி பயிற்சி எடுப்பதற்கான உத்தரவுடன் போலாந்து செல்லும் வரை அவருடன் தங்கி இருப்பதற்கு அவரின் தாய் சலாமத்துக்கும் அனுமதி வழங்கினார்.
தொடர்ந்து புறக்கணிக்கப்பட்ட தன் மகளுக்கு நீதி கிடைக்க தொடர்ந்து போராடி இன்று அந்த போராட்டத்தில் வெற்றி பெற்று தன் மகளை தமிழ்நாட்டு மக்களின் தங்க மகளாக போலந்துக்கு அனுப்புகிறார் தாய் சலாமத்.
"போராடினால் நாம் வெல்லலாம். வான் வீதியில் கால் வைக்கலாம்."