Japan Olympic: தயக்கம் காட்டும் நட்சத்திர வீரர்கள்; மீண்டும் ஒத்திவைக்கப்படுமா ஒலிம்பிக்?
முதலாம் உலகப் போர் நடந்தபோது பெர்லினில் நடைபெற்றவிருந்த 1916 தொடர் ரத்து செய்யப்பட்டது. 1940 மற்றும் 1944 ஆண்டுகளில் நடைபெற இருந்த ஒலிம்பிக் தொடர்கள், இரண்டாம் உலகப் போரின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
2020-ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள், கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்த ஆண்டு, ஜூலை 23-ம் தேதி தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா தொற்று பரவல் தீவிரமாகி வருகிறது. திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறுவதற்கு இன்னும் இரண்டு மாதாங்களுக்கும் குறைவான காலமே உள்ளதால், ஒலிம்பிக் தொடர் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஒலிம்பிக் தொடரில் பங்கேற்பது குறித்து வெவ்வேறு விளையாட்டுகளை சேர்ந்த நட்சத்திர வீரர் வீராங்கனைகளும் தயக்கம் காட்டுகின்றனர்.
டென்னிஸில் இரண்டு முறை ஒலிம்பிக் சாம்பியனான ரஃபேல் நடால், ஒலிம்பிக் தொடரில் பங்கேற்பது குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளார். “சாதாரண சூழலில் ஒலிம்பிக்கில் பங்கேற்பது குறித்து எந்த குழப்பமும் இருந்திருக்காது. ஒலிம்பிக் தொடரில் பங்கேற்பது எவ்வளவு முக்கியமானது என்பதை அனைவரும் அறிவீர். ஆனால், இக்கட்டான சூழலில் ஒலிம்பிக்கில் பங்கேற்பது குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது. இன்னும் இரண்டும் மாத காலம் உள்ள நிலையில், சூழலை பொறுத்து முடிவு செய்யப்படும்” என தெரிவித்துள்ளார்.
நடால் மட்டுமல்ல, டென்னிஸ் நட்சத்திர வீராங்கனைகளான செரீனா வில்லியம்ஸ், நவோமி ஒசாகா, வீரர் கெய் நிஷிகோரி ஆகியோரும் ஒலிம்பிக்கில் பங்கேற்பது குறித்து சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக பின்பற்றி, பாதுகாப்பான முறையில் ஒலிம்பிக்கை நடத்த முடியும் என ஜப்பான் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், அந்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது மறுக்க முடியாத உண்மையாக உள்ளது. ஜப்பான் நாட்டு மக்களும் ஒலிம்பிக் ரத்து செய்யப்பட வேண்டும் அல்லது ஒத்திவைக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.
கியோடோ நியூஸ் என்ற நிறுவனம் ஜப்பான் மக்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பில், பெரும்பாலானோர் ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்க வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். மே 9-ஆம் தேதி ஜப்பானில் நடைபெற்ற ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டிகளின்போது, ஒலிம்பிக் தொடர் ஒத்திவைக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
ஒலிம்பிக் தொடர் நடைபெற இருந்தால், உலகெங்கிலும் இருந்து 10,000க்கும் அதிகமான விளையாட்டு வீரர் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வது சந்தேகம் அளிப்பதாக உள்ளது.
இதற்கு முன்பு, மூன்று முறை இப்படி ஒலிம்பிக் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. முதலாம் உலகப் போர் நடந்தபோது பெர்லினில் நடைபெற்றவிருந்த 1916 தொடர் ரத்து செய்யப்பட்டது. 1940 மற்றும் 1944 ஆண்டுகளில் நடைபெற இருந்த ஒலிம்பிக் தொடர்கள், இரண்டாம் உலகப் போரின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்தியாவில், பயோ-பபிள் நடைமுறைக்கு உட்பட்டு நடைபெற்று வந்த ஐபில் தொடர், கொரோனா பரவல் காரணமாக, வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த ஆண்டு தேதி அறிவிக்கப்படாமல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. பூட்டிய மைதானத்திற்குள்ளே கொரோனா பரவல் ஏற்படும் அச்சம் நிலவுவதால், ஒலிம்பிக் போன்ற பிரமாண்டமான விளையாட்டு தொடரை பாதுகாப்பான முறையில் நடத்துவதில் சிக்கல் நீடிக்கிறது.