Kevin O Brien Retirement: அயர்லாந்தின் அதிரடி மன்னன் கெவின் ஓ பிரையன் ஓய்வு..!
அயர்லாந்து அணி வீரர் கெவின் ஓ பிரையன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் ஜாம்பவனாக திகழ்ந்து வருகின்றனர். இந்த உச்சத்தை அடைய நீண்டகாலமாக இந்த அணிகள் கிரிக்கெட் விளையாடி வந்த அனுபவமும் காரணமும். இந்த நிலையில், கடந்த 15, 20 ஆண்டுகளில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு பல்வேறு அணிகள் அறிமுகமாகின. அவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க அணிகள் ஆப்கானிஸ்தானும், அயர்லாந்து அணிகளும். இந்த அணிகள் மேலே குறிப்பிட்ட ஜாம்பவான் அணிகளையும் தங்களது சிறப்பான ஆட்டத்தால் அச்சுறுத்தியுள்ளன.
கடந்த 2006-ஆம் ஆண்டு ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான அயர்லாந்து அணி கடந்த 15 ஆண்டுகளாக தங்களது சர்வதேச போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் முக்கிய ஆட்டக்காரராக விளங்கி வரும் கெவின் ஓ பிரையன். கடந்த 2006-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக தனது சர்வதேச போட்டிகளில் அறிமுகமான கெவின் ஓ பிரையன் தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் இதுவரை 152 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 3 ஆயிரத்து 619 ரன்களை குவித்துள்ளார். அதில் இரண்டு சதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 142 ரன்களை குவித்துள்ளார். 95 டி20 போட்டிகளில் விளையாடி ஆயிரத்து 672 ரன்களை குவித்துள்ளார். அதில் அதிகபட்சமாக 124 ரன்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமின்றி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 258 ரன்களை குவித்துள்ளார். இதில் அதிகபட்சமாக 118 ரன்களை குவித்துள்ளார்.
இந்திய அணிக்கு தோனியைப் போல அயர்லாந்து அணிக்கு கெவின் ஓ.பிரையன் திகழ்ந்து வந்தார். தோனி பின்வரிசையில் இறங்குவது போலவே, கெவின் ஓ பிரையன் பெரும்பாலும் 7 அல்லது 8-வது வரிசை ஆட்டக்காரராகவே களமிறங்கி விளையாடி வந்தார். அயர்லாந்து அணிக்காக மூன்று வடிவ போட்டியிலும் சதம் அடித்த வீரர் என்ற பெருமைக்கும் ஓ பிரையன் சொந்தக்காரராக உள்ளார். பேட்டிங் மட்டுமின்றி பந்துவீச்சிலும் ஓ பிரையன் மிகச்சிறந்து விளங்கினார். 152 ஒருநாள் போட்டிகளில் 114 விக்கெட்டுகளையும், 95 டி20 போட்டிகளில் 58 விக்கெட்டுகளையுள் வீழ்த்தியுள்ளார். இவர் கடைசியாக கடந்தாண்டு ஆப்கானிஸ்தான் அணியுடனான டி20 போட்டியிலும், நெதர்லாந்து அணியுடனான ஒருநாள் போட்டியிலும், கடைசியாக இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட் போட்டியிலும் விளையாடி உள்ளார்.
2011-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 329 என்ற இலக்கை நோக்கி அயர்லாந்து அணி களமிறங்கியது, மளமளவென 5 விக்கெட்டுகள் விழ 6வது விக்கெட்டுக்கு களமிறங்கிய கெவின் ஓ பிரையன் இங்கிலாந்து பந்துவீச்சை துவம்சம் செய்து 50 பந்துகளில் சதமடித்து அயர்லாந்து அணியையும் வெற்றி பெற வைத்தார். இத்தனை ஆண்டு கால உலககோப்பை கிரிக்கெட் வரலாறறில் அதிவேக சதமாக கெவின் ஓ பிரையனின் சதமே பதிவாகியுள்ளது. இந்த சாதனை தற்போது வரை முறியடிக்கப்படவில்லை. இந்திய அணிக்கு தோனியை போல, அயர்லாந்து அணியின் ஆபத்பாந்தவனாக திகழ்ந்த கெவின் ஓ பிரையனின் ஓய்வு அந்த நாட்டு ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் அவர் டி20 உலகக்கோப்பை போட்டியில் விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கெவின் ஓ பிரையன் டெஸ்டில் சிறந்த பேட்ஸ்மேனுக்காக 84-வது இடத்தையும், ஒருநாள் போட்டியில் 71-வது இடத்தையும், டி20 போட்டிகளில் 38-வது இடத்தையும் பிடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : WTC 2021 LIVE : 'Day 3' விராட் கோஹ்லி, ரிஷப் பந்த் அவுட் - 166-5