SRH vs LSG, IPL 2023 LIVE: ஹைதராபாத்தில் வாகை சூடிய லக்னோ; புள்ளிப்பட்டியலில் 4வது இடத்துக்கு முன்னேறி அசத்தல்..!
IPL 2023, Match 58, SRH vs LSG: லக்னோ மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.
LIVE
Background
ஐபிஎல் தொடரின் இன்றைய முதல் லீக் போட்டியில் லக்னோ மற்றும் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன. இந்திய நேரப்படி இந்த போட்டி மாலை 3.30 மணிக்கு ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற தொடங்க உள்ளது.
ஐபிஎல் சீசன்:
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பிளே ஆஃப் சுற்றை நெருங்கி வருகிறது. ஆனாலும், இதுவரை ஒரு அணி கூட அதிகாரப்பூர்வமாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. குஜராத் மற்றும் சென்னை அணிகள் மட்டுமே ஓரளவிற்கு வலுவாக முதல் இரண்டு இடங்களில் நீடிக்கின்றன. மீதமுள்ள இரண்டு இடங்களுக்காக டெல்லியை தவிர மற்ற 7 அணிகளும் முட்டி மோதி வருகின்றன.
லக்னோ - ஐதராபாத் மோதல்:
இந்த சூழலில் ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ள, 58வது லீக் போட்டியில் க்ருணால் பாண்ட்யா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் மோத உள்ளன. மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியின் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.
லக்னோ அணி நிலவரம்:
நடப்பு தொடரை அதிரடியாக தொடங்கினாலும், கடந்த சில போட்டிகளாக லக்னோ அணி பெரிதாக சோபிக்கவில்லை. வெற்றி, தோல்வி என மாறி மாறி முடிவுகளை பெற்று வருகிறது. கேப்டன் கே.எல். ராகுல் காயம் காரணமாக தொடரிலிருந்து பாதியிலேயே விலகியது அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. க்ருணால் பாண்ட்யா தலைமையிலான அணியில் கைல் மேயர்ஸ், டி-காக், ஸ்டோய்னிஷ், நிக்கோலஸ் பூரான் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் இருப்பினும், கடந்த சில போட்டிகளில் அவர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாதது குறிப்பிடத்தக்கது. அதோடு பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட வேண்டியது குறிப்பிடத்தக்கது. குஜராத் அணிக்கு எதிராக விளையாடிய கடைசி லீக் போட்டியில், 227 ரன்களை வாரிக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் வென்றால் மட்டுமே புள்ளிப்பட்டியலில் டாப்-4க்குள் நுழைந்து, பிளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பைதொடர முடியும். தற்போது 11 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் நீடிக்கிறது.
ஐதராபாத் அணி நிலவரம்:
ஐதராபாத் அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி நான்கில் மட்டும் வெற்றி கண்டு, புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள நான்கு போட்டிகளிலும் அந்த அணி வெற்றி பெற்றால் தான், பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற ஓரளவிற்கு வாய்ப்பு உள்ளது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என எதிலுமே அந்த அணி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாதது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், கடைசி போட்டியில் வலுவான ராஜஸ்தான் அணியை ஐதராபாத் வீழ்த்தியுள்ளது. இந்தவெற்றி தந்த உத்வேகத்துடன் இன்றைய போட்டியில் அந்த அணி களமிறங்குகிறது.
மைதானம் எப்படி?
ராஜிவ் காந்தி மைதானம் பெரும்பாலும் பேட்ஸ்மேன்களுக்கே சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக அந்த மைதானத்தில் நடைபெற்ற 5 போட்டிகளில் நான்கில் முதலில் பேட்டிங் செய்த அணி தான் வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்ய தான் விரும்பும்.
ஐதராபாத் உத்தேச அணி:
திரிபாதி, அப்துல் சமாத், விஷ்ராந்த் சர்மா, மார்க்ரம், அபிஷேக் சர்மா, ஜான்சென், பிலிப்ஸ், கிளாசென், புவனேஷ்வர் குமார், நடராஜன், மார்கண்டே
லக்னோ உத்தேச அணி:
ஸ்டோய்னிஷ், தாக்கூர், கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, க்ருணால் பாண்ட்யா, ஸ்வப்னில் சிங், நிக்கோலஸ் பூரான், டி-காக், ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான்
SRH vs LSG Live: ஹாட்ரிக் சிக்ஸர்..!
16 ஓவரின் கடைசி மூன்று பந்துகளில் பூரான் மூன்று சிக்ஸர்கள் விளாசினார். இந்த ஓவரில் மட்டும் ஐந்து சிக்ஸர் பறக்கவிட்டுள்ளது லக்னோ அணி..!
SRH vs LSG Live: அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்... மூன்றாவது பந்தில் அவுட்..!
16வது ஓவரின் முதல் இரண்டு பந்தில் இரண்டு சிக்ஸர்கள் விளாசிய ஸ்டாய்னஸ் மூன்றாவது பந்தில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
SRH vs LSG Live: 15 ஓவர்கள் முடிவில்..!
15 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 2 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்கள் சேர்த்துள்ளது.
SRH vs LSG Live: மன்கட் அரைசதம்..!
சிறப்பாக ஆடி வரும் மன்கட் 35 பந்தில் தனது முதல் ஐபிஎல் அரைசத்தினை எட்டியுள்ளார்.
SRH vs LSG Live: 100 ரன்களை எட்டிய லக்னோ..!
13.4 ஓவரில் லக்னோ அணி 101 ரன்கள் எடுத்துள்ளது.