MI vs RR Match Highlights: சொந்த மண்ணில் எடுபடாத மும்பை வியூகம்; ஹாட்ரிக் வெற்றி பெற்ற ராஜஸ்தான்!
IPL 2024 MI vs RR Match Highlights: மும்பை அணியை வீழ்த்தி நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றி பெற்ற முதல் அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
![MI vs RR Match Highlights: சொந்த மண்ணில் எடுபடாத மும்பை வியூகம்; ஹாட்ரிக் வெற்றி பெற்ற ராஜஸ்தான்! IPL 2024 MI vs RR Match Highlights Rajasthan Royals Won Mumbai Indians By 6 Wickets Trent Boult Yuzvendra Chahal Akash Madhwal Riyan Parag MI vs RR Match Highlights: சொந்த மண்ணில் எடுபடாத மும்பை வியூகம்; ஹாட்ரிக் வெற்றி பெற்ற ராஜஸ்தான்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/01/ed1a6d04cc3a6a632ffddf6b9411118a1711992360175102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
17வது சீசன் ஐபிஎல் தொடரின் 14வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களை எடுத்தது. ராஜஸ்தான் அணி சார்பில் போல்ட் மற்றும் சாஹல் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்த போட்டி கேப்டனாக ஹர்திக் பாண்டியாவுக்கு 50வது போட்டி, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 250வது ஐபிஎல் போட்டியாகும். அதேபோல், ராஜஸ்தான் அணி சார்பில் ஆவேஷ் கானின் 50வது லீக் போட்டியாகும். அதேபோல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மூத்த வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 200வது போட்டியில் களமிறங்கினார்.
அதன் பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 126 ரன்களை விரைவில் எடுக்க திட்டமிட்டு விளையாடியது. மும்பை அணியின் சார்பில் முதல் விக்கெட்டினை முதல் ஓவரின் கடைசி பந்தில் மபாகா கைப்பற்றினார். ஜெய்ஸ்வால் தனது விக்கெட்டினை 10 ரன்களில் இழந்து வெளியேறினார். அதன் பின்னர் பும்ரா பவர்ப்ளேவில் விக்கெட் கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது. பும்ரா பவுலிங்கில் பட்லர் கொடுத்த கேட்ச் வாய்ப்பினை ஹர்திக் பாண்டியா பிடிக்க முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை.
பவர்ப்ளேவில் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக வந்த ஆகாஷ் மாத்வல் தான் வீசிய இரண்டாவது பந்தில் சஞ்சு சாம்சனை வெளியேற்றினார். பவர்ப்ளேவில் மும்பை அணியைப் போலவே ராஜஸ்தான் அணியும் 46 ரன்கள் சேர்த்தது. ஆனால் மும்பை அணி 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஆனால் ராஜஸ்தான் இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்திருந்தது.
போட்டியின் 7வது ஓவரில் ஆகாஷ் மாத்வல் பந்தில் பட்லர் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இது மும்பை அணிக்கு சற்று நம்பிக்கை கொடுத்தது. அதன் பின்னர் கைகோர்த்த அஸ்வின் மற்றும் ரியான் பிராக் கூட்டணி மும்பை அணி பந்து வீச்சினை சிறப்பாக கையாண்டு ரன்கள் சேர்த்தது. 10 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 73 ரன்கள் சேர்த்திருந்தது. இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அடுத்த 10 ஓவர்களில் 53 ரன்கள் தேவைப்பட்டது.
அதன் பின்னரும் இருவரும் நிதானமாக ஆடி வந்தனர். போட்டியின் 13வது ஓவரில் ஆகாஷ் மாத்வல் பந்தில் அஸ்வின் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இம்பேக்ட் ப்ளேயராக களமிறங்கிய ஷுபம் துபே ரியான் பராக் உடன் இணைந்து வெற்றியை நோக்கி ராஜஸ்தானை அழைத்துச் சென்றார். இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் சேர்த்து, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் வெற்றி பெற்ற முதல் அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. மும்பை அணி ஹாட்ரிக் தோல்வியைத் தழுவியது. ராஜஸ்தான் அணி சார்பில் ரியான் பராக் 39 பந்தில் 54 ரன்கள் சேர்த்து இறுதி வரை களத்தில் இருந்தார். மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் ஆகாஷ் மாத்வல் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)