மாட்டிகினாரு ஒருத்தரு.. அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு Absent.. பாஜக டீம்ல Present.?
அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு ஆப்சென்ட் ஆகி, பாஜகவின் பி டீமாக அவர் இருக்கிறார் என்று பேசப்படுவதை ஒருவர் உறுதிப்படுத்தியிருப்பதாக பேசப்படுகிறது. அவர் யார்.?

நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக இன்று(05.03.25) நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில், சீமானின் நாம் தமிழர் கட்சி பங்கேற்கவில்லை. அண்மைக் காலமாக பாஜகவின் பி டீமாக நாம் தமிழர் கட்சி செயல்பட்டு வருவதாக கூறப்பட்டுவரும் நிலையில், பாஜகவுடன் சேர்ந்து அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்ததால், அந்த பேச்சு உண்மையோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
தொகுதி மறுசீரமைப்பில் தீவிரம் காட்டும் மத்திய அரசு
நாடாளுமன்ற தொகுதிகளை மறுசீரமைப்பு செய்வதில் பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது.ஒரு வேளை மத்திய அரசு இதை செயல்படுத்தினால், தமிழ்நாடு 8 மக்களவை இடங்களை இழக்கும் நிலை ஏற்படும். மேலும், தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவம் குறையும் என்பதால், தமிழ்நாடு அரசு அதை தீவிரமாக எதிர்த்து வருகிறது. தமிழ்நாடு மட்டுமல்ல, தென் மாநிலங்கள் அனைத்துமே பல மக்களவை இடங்களை இழக்க நேரிடும்.
முன்னதாக, மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு சீரமைப்பு இருக்கக்கூடது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்றும், தமிழ் நாட்டில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் இதை ஒரே நேர்கோட்டில் நின்று எதிர்க்க வேண்டும் என்றும் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். அதோடு நிறுத்தாமல், அனைத்துக் கட்சி கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்து, சமீபத்தில் தொடங்கப்பட்ட தவெக முதல் எல்லா கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார் ஸ்டாலின்.
அனைத்துக்கட்சிக் கூட்டத்தை புறக்கனித்த பாஜக, நாதக, தமாகா
அந்த வகையில், இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு,க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் சட்டமன்ற எதிர்க்கட்சியான அதிமுக பங்கேற்றது. அதேபோல், தமிழக வெற்றிக் கழகம், அமமுக உள்ளிட்ட கட்சிகளையும் சேர்த்து 56 கட்சிகள் பங்கேற்றன. ஆனால், இந்த கூட்டத்தை பாஜக புறக்கணித்த நிலையில், சீமானின் நாம் தமிழர் கட்சி புறக்கணித்தது. இதேபோல், ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் கூட்டத்தை புறக்கணித்தது.
முன்னதாக, பெரியாருக்கு எதிராக சீமான் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிவருவது, அண்மையில் ரஜினி மற்றும் துக்ளக் குருமூர்த்தியை சந்தித்தது, பாஜக நிர்வாகி ஹெச்.ராஜவை ஞானி என்று சொன்னது மற்றும் சங்கி என்றால் நண்பன் என்று சீமான் சொல்லி வருவதை வைத்து, பாஜகவின் அறிவிக்கப்படாத பி டீமாக நாதக செயல்பட்டு வருவதாக மற்ற கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
நாம் தமிழர் கட்சியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
இப்படிப்பட்ட சூழலில், மற்ற எல்லா கட்சிகளும் கலந்துகொண்ட அனைத்துக் கட்சி கூட்டத்தை சீமானின் நாம் தமிழர் கட்சி புறக்கணித்துள்ளது, சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. வர்த்தைக்கு வார்த்தை தமிழ், தமிழ்நாடு என்று முழங்கும் சீமான், தமிழ் நாட்டின் பிரதிநிதித்துவத்தை தகர்க்க நினைக்கும் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டத்தில் கலந்துகொள்ளததன் மூலம், அவர் பாஜகவிற்காகதான் செயல்படுகிறார் என்பது தெளிவாகிறது என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.





















