"இது தமிழ்நாட்டின் உரிமை" கட்சிகளை கடந்து குரல் கொடுக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் கட்சி எல்லைகளை கடந்து குரல் கொடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகி்னறனர். மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படும் என்ற மத்திய அரசின் முடிவிற்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.
இந்த நிலையில், இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
தொகுதி மறுசீரமைப்பு:
ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஒரு விவகாரத்தில் முடிவெடுப்பதற்காக நாம் இங்கு கூடியிருக்கிறோம். கட்சி வேறுபாடுகளை கடந்து, அழைத்திருப்பது யார் என்று பார்க்காமல் எவ்வளவு முக்கியமான பிரச்சினைக்காக அழைத்திருக்கிறோம் என்று மனதில் வைத்துக்கொண்டு இங்கு வந்திருக்கும் அனைத்து கட்சித் தலைவர்களுக்கும், பிரதிநிதிகளுக்கும் என் நெஞ்சார்ந்த வணக்கம்.
தமிழ்நாடு மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டிருப்பதை உணர்த்துவதற்காகத்தான் இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறோம். தொகுதி மறுசீரமைப்பு எனும் கத்தி தென்னிந்திாவின் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டு இருக்கிறது. இதனால், தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்பட இருக்கிறது.
மக்கள்தொகை கணக்கெடுப்பு:
இன்றைக்குத் தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்ற தொகுதிகள் இருக்கிறது. இதை குறைக்கின்ற அபாயம் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. மத்திய அரசு 2026ம் ஆண்டு மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை மறுசீரமைப்பு செய்யப்போகிறது.
பாெதுவாக, இதை மக்கள்தொகையை கணக்கிட்டுத்தான் செய்வார்கள். மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது இந்திய நாட்டின் மிக முக்கியமான இலக்கு. அந்த இலக்கில் நம்முடைய தமிழ்நாடு வெற்றி பெற்றிருக்கிறது. பல பத்தாண்டுகளாக வெற்றிகரமான குடும்ப கட்டுப்பாடு திட்டங்கள், பெண்கள் கல்வி மற்றும் சுகாதார முன்முயற்சிகள் மூலமாக நாம் இதை சாதித்திருக்கிறோம்.
தொகுதி குறைய வாய்ப்பு:
தற்போது இருக்கும் 543 மக்களவைத் தொகுதிகள் தொடர்ந்தால் மக்கள்தொகை குறைவாக இருப்பதால் நம் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. தமிழ்நாடு மொத்தமாக 8 மக்களவை இடங்களை இழக்கும் என்கிறார்கள். அதாவது, இனி தமிழ்நாட்டுக்கு 39 எம்.பி.க்கள் கிடைக்க மாட்டார்கள். 31 எம்.பி.க்கள்தான் இருப்பார்கள்.
நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 848 ஆக உயர்த்தப்பட்டு, தற்போதைய விகிதாச்சாரத்தின்படி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் நமக்கு கூடுதலாக 22 தொகுதிகள் கிடைக்க வேண்டும். ஆனால், தற்போதைய மக்கள் தொகையின்படி மறுசீரமைப்பு செய்தால் 10 தொகுதிகள்தான் கூடுதலாக கிடைக்கும். இதனால், நாம் 12 கூடுதல் தொகுதிகளை இழக்க நேரிடும்.
குரல் கொடுக்க வேண்டும்:
இந்த இரண்டு முறைகளிலும் நமக்கான பிரதிநிதித்துவம் குறைந்து அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைக்கும். இதனால், தமிழ்நாட்டின் குரல் நசுக்கப்படும். இது வெறும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை பற்றிய கவலையில்லை.
நம் தமிழ்நாட்டின் உரிமை சார்ந்த கவலை. நம் தமிழ்நாடு எதிர்கொள்ள இருக்கும் இந்த முக்கியமான பிரச்சினையில் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற வேண்டுகோளை, உங்கள் அனைவரின் முன்பும் நான் வைக்கிறேன். அனைத்துக்கட்சிகளும் கட்சி எல்லைகளை கடந்து குரல் கொடுக்க வேண்டும். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால், அது தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதித்துவ எண்ணிக்கை குறைந்துவிடும்.
முறியடிக்க வேண்டும்:
எனவே, இந்த சதியை நாம் அனைவரும் சேர்ந்து முறியடித்தாக வேண்டும். மக்கள்தொகை அடிப்படையில் மக்களவை மாநிலங்களவை மற்றும் சட்டமன்ற பேரவைகளின் இடங்கள் குறையும் என்று சொல்வது, மக்கள்தொகை கட்டுப்பாடு எனும் கொள்கையை, முனைப்பாக செயல்படுத்தி நாட்டு வளர்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ள தென்மாநிலங்களுக்கு தரப்படும் தண்டனையாகவே அமையும். இதை முன்கூட்டியே உணர்ந்துதான் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 14ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நாம் ஒரு தீர்மானம் நிறைவேற்றினோம்.
தமிழ்நாட்டின் உரிமை, கூட்டாட்சி கருத்தியலோடு கோட்பாடு, தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட எதுவும் பாதிக்கப்படாது என்பதை தீர்க்கமாக திடமாக அப்போதே நாம் வலியுறுத்தியிருப்போம். இந்த தொகுதி மறுசீரமைப்பு என்பது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தென்னிந்தியாவிற்கே அபாயமான செயல். இதில் நமக்கு கருத்து மாறுபாடு நிச்சயம் இருக்காது என்று நினைக்கிறேன். இருக்கக்கூடாது என்று விரும்புகிறேன். இந்திய நாட்டின் கூட்டாட்சி அமைப்பிற்கும், தென்மாநிலங்களின் அரசியல் உரிமைக்கும் இது அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.

