IPL Auction: ”மஞ்ச துணிக்கு கடமைப்பட்டு இருக்கேன்” ஐபிஎல் சிஎஸ்கே அணிக்கு திரும்பிய அஸ்வின் நெகிழ்ச்சி
IPL Auction: ஐபிஎல் தொடரில் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பி இருப்பது மகிழ்ச்சி அளிபப்தாக, ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
IPL Auction: ஐபிஎல் தொடரில் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பியது தொடர்பாக அஸ்வின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வாழ்க்கை ஒரு வட்டம் - அஸ்வின் நெகிழ்ச்சி:
ஐபிஎல் 2025- சீசனுக்கான வீரர்களின் மெகா ஏலம் நேற்று தொடங்கியது. பரபரப்பாக நடைபெறும் ஏலத்தில், சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளூர் வீரர் அஸ்வினை சென்னை அணி மீண்டும் ஏலத்தில் எடுத்துள்ளது. இதுதொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்து அஸ்வின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “வாழ்க்கை ஒரு வட்டம் என சொல்வார்கள். 2008 முதல் 2015ம் ஆண்டு வரை முதல் முறையாக மஞ்சள் ஜெர்சியை அணிந்து சென்னை அணிக்கு விளையாடியதில் இருந்து, அந்த அணிக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன். சென்னை அணியில் விளையாடியது, கற்றுக்கொண்டது தான் சர்வதேச போட்டிகளில் நான் இவ்வளவு தூரம் பயணிக்கு உதவியுள்ளது. சென்னை அணிக்காக நான் கடைசியாக விளையாடி 10 வருடங்கள் ஆகிவிட்டது. 2015ல் கடைசியாக விளையாடியேனேன்.
Yellove Bol. 💛#UngalAnbuden Ashwin 🦁#SuperAuction @ashwinravi99 pic.twitter.com/drAzxRBt5U
— Chennai Super Kings (@ChennaiIPL) November 24, 2024
”அன்புடென் ஃபேன்ஸ்”
எப்படி சொல்வது என தெரியவில்லை. சென்னை அணி மீண்டும் என்னை தேர்வு செய்துள்ளது. விலை, ஹோம்கமிங் என பல்வேறு விதமாக கூறினாலும், 2011ம் ஆண்டு சண்டை போட்டு என்னை ஏலத்தில் எடுத்தது போன்று மீண்டும் எடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மிகவும் சிறந்த உணர்ச்சிகள் அது. அன்புடென் ஃபேன்ஸ் என்பதை கடந்த 9-10 ஆண்டுகளாக பார்க்கிறேன். ராஜஸ்தான் அணிக்காக விளையாடும்போதெல்லாம், சென்னை அணிக்கு எதிராக களமிறங்கும்போது கடினமாக இருந்தது. அந்த அணிக்கு விளையாடும்போது ரசிகர்கள் எனக்காக குரல் எழுப்பமாடார்கள். இந்நிலையில் மீண்டும் அணிக்கு திரும்பி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தோனியுடனும், கெய்க்வாட் தலைமையிலும் களமிறங்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என அஸ்வின் தெரிவித்துள்ளார்.
ரூ.9.75 கோடிக்கு ஏலம்:
சென்னை அணி, ஏலத்தில் யாரை வாங்கப்போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்புகளை கிளப்பியிருந்தன. அர்ஷ்தீப் சிங், சாஹல், முகமது ஷமி, கே. எல். ராகுல் ஆகியோரை வாங்க சென்னை அணி முயற்சி செய்தது. ஆனால், அனைத்தும் தோல்வியில் முடிந்தன. முதல் அமர்வில் யாரையும் வாங்காமல் இருந்த சிஎஸ்கே இரண்டாவது அமர்வில் வேட்டையை தொடங்கியது. டேவன் கான்வாயை தங்களுடைய முதல் வீரராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது. அவரை 6.25 கோடி ரூபாய்க்கு வாங்கிய சிஎஸ்கே, அடுத்ததாக ராகுல் திரிபாதியை 3.40 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.
சாமர்த்தியமாக செயல்பட்ட சென்னை அணி, ரச்சின் ரவீந்திராவை 4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. இறுதியாக, தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9.75 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இதன் மூலம், கடந்த 2008ம் ஆண்டு தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை சென்னை அணியில் தொடங்கிய அஸ்வின், 10 ஆண்டுகால இடைவெளிக்கு பிறகு மீண்டும் தன்னுடைய சொந்த மண்ணுக்கு திரும்புகிறார்.