CSK Vs SRH, IPL 2024: ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்குமா சென்னை? சேப்பாக்கத்தில் ஐதராபாத் உடன் இன்று மோதல்
CSK Vs SRH, IPL 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் சென்னை மற்றும் ஐதராபாத் ஆகிய அணிகள் மோத உள்ளன.
CSK Vs SRH, IPL 2024: சென்னை மற்றும் ஐதராபாத் ஆகிய அணிகள் மோதும் போட்டி, இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்த்ல் தொடங்க உள்ளது.
ஐபிஎல் தொடர் 2024:
இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 அணிகளும் தலா ஒருமுறை நேருக்கு நேர் சந்தித்து, தொடரின் பாதி போட்டிகள் முடிந்துள்ளன. தற்போது இரண்டாவது சுற்று லீக் போட்டிகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில் வார இறுதியான இன்று இரண்டு போட்டிகள் நடபெறும் நிலையில், இரண்டாவது போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோத உள்ளன.
சென்னை - ஐதராபாத் பலப்பரீட்சை:
சென்னை சேப்பாக்கத்தில் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. சென்னை அணி இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் நான்கில் வென்று, புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் நீடிக்கிறது. கடைசியாக விளையாடிய இரண்டு போட்டியிலும் அந்த அணி தோல்வியுற்றுள்ளது. நடப்பு தொடரில் ஏற்கனவே ஐதராபாத் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியிலும் மண்ணை கவ்வியது. அதற்கு பழிவாங்கும் நோக்கிலும், ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க வேண்டும் என்ற முனைப்பிலும் சென்னை அணி இன்று களமிறங்குகிறது. மறுமுனையில், பேட்டிங்கை மிகவும் சாதாரணம் விஷயம் என்பது போன்று காட்டி, ஐதராபாத் அணி எதிரணிகளை அச்சுறுத்தி வருகிறது. இமாலய ரன்களை குவிப்பது மிக எளிய விஷயமாக செய்து வருகிறது. அதேநேரம், கடைசியாக விளையாடிய லீக் போட்டியில், எதிர்பாராத விதமாக பெங்களூர் அணியிடம் தோல்வியுற்றது. இதனால் இன்றைய போட்டியின் மூலம் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப ஐதராபாத் அணி அதிக ஆர்வம் காட்டுகிறது. எனவே இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஓடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.
பலம், பலவீனங்கள்:
உள்ளூர் மைதானத்தில் களமிறங்குவது சென்னை அணிக்கு பெரும் பலமாக உள்ளது.கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, தோனி மற்றும் ஜடேஜா ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், ரகானே ஆகியோர் ரன் எடுக்க முடியாமல் திணறுவது அணிக்கு பின்னடைவாக உள்ளது. பந்துவீச்சு யூனிட் பலவீனமாகவே காணப்படுகிறது. அதன் விளைவாகவே கடந்த போட்டியில் லக்னோவிடம் சென்னை அணி தோல்வியுற்றது. எனவே பந்துவீச்சில் செய்யும் தவறுகளை சென்னை அணி குறைக்க வேண்டியது மிக மிக அவசியம்.
மறுபுறம் ஐதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, கிளாசென், மார்க்ரம் என பேட்ஸ்மேன்கள் அதிரடியான ஃபார்மில் உள்ளனர். எதிரணிகளுக்கு கடினமான இலக்குகளை நிர்ணயிப்பதை அநாயசமாக செய்து வருகின்ரனர். ஒருபுறம் பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்டினாலும், மறுபுறம் ஐதராபாத் பந்துவீச்சாளர்கள் அதிகப்படியான ரன்களை விட்டுக் கொடுத்து வருகின்றனர். அதையும் கட்டுப்படுத்தினால் ஐதராபாத் அணிக்கு இன்றைய போட்டியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவே உள்ளது.
நேருக்கு நேர்:
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 20 முறை நேருகு நேர் மோதியுள்ளன. அதில் சென்னை அணி 14 முறையும், ஐதராபாத் அணி 6 முறையும் வெற்றி பெற்றுள்ளன. சென்னை அணிக்கு எதிராக ஒரு போட்டியில் ஐதராபாத் அணி அதிகபட்சமாக 192 ரன்களையும், குறைந்தபட்சமாக 134 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், ஐதராபாத் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் சென்னை அணி அதிகபட்சமாக 223 ரன்களையும், குறைந்தபட்சமாக 132 ரன்களையும் பதிவு செய்துள்ளது.
மைதானம் எப்படி?
நடப்பு ஐபிஎல் தொடரில் சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை நான்கு ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன. சேஸிங் அணிகள் மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன, முதலில் பேட்டிங் செய்த அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. டாஸ் வென்ற கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யவே விரும்புவார்.
உத்தேச அணி விவரங்கள்:
சென்னை: அஜிங்க்யா ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட், டேரில் மிட்செல், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, மொயீன் அலி, எம்எஸ் தோனி, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் ரஹ்மான், மதீஷா பத்திரனா
ஐதராபாத்: அபிஷேக் சர்மா, டிராவிஸ் தலைவர், ஐடன் மார்க்ராம், ஹென்ரிச் கிளாசென், நிதிஷ் குமார் ரெட்டி, அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, ஜெய்தேவ் உனத்கட்