T20 World cup 2022: டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இதை செய்யணும்.. முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி
டி20 உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது.
இந்திய கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்காக இந்திய அணி நேற்று ஆஸ்திரேலியா சென்று அடைந்தது. அதைத் தொடர்ந்து தற்போது இந்திய அணி 4 பயிற்சி போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இந்தச் சூழலில் இந்திய அணிக்கு முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி அறிவுரை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் கிரிக்கெட் தளம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதன்படி, “பும்ராவிற்கு காயம் ஏற்பட்டது யாரும் எதிர்பாராத ஒன்று. தற்போது அதிகமாக கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதால் வீரர்கள் காயம் அடைவதற்கு வாய்ப்பு அதிகம். அவருடைய காயத்திற்கு நாம் எதுவும் செய்ய முடியாது. அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக வேறு ஒரு வீரருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
நமக்கு ஒரு நல்ல அணி உள்ளது. நான் எப்போதும் கூறுவது போல் நீங்கள் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டால் நிச்சயம் கோப்பையை வெல்லும் வாய்ப்பு உள்ளது. ஆகவே முதலில் நல்ல தொடக்கம் கிடைப்பது நல்லது. நல்ல தொடக்கத்தை பெற்று இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற வேண்டும். அதன்பின்னர் இந்திய அணிக்கு கோப்பையை வெல்ல போதிய பலம் உள்ளது. பும்ரா, ஜடேஜா இல்லாத சூழலில் மற்ற வீரர்களில் ஒருவர் சிறப்பாக செயல்படும் வாய்ப்பு உள்ளது.
Smiles, laughter and wishes as #TeamIndia left from Mumbai for Australia 📹📸 pic.twitter.com/Re60cUgnZx
— BCCI (@BCCI) October 7, 2022
இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ராவிற்கு பதிலாக மாற்று வீரர் யார் என்பது தொடர்பான சந்தேகம் இன்னும் இருந்து வருகிறது. அவருக்கு பதிலாக இந்திய அணியில் முகமது ஷமி களமிறங்குவார் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால் அவருடைய அனுபவம் ஆஸ்திரேலியாவில் கைக் கொடுக்கும் என்று கூறி வருகின்றனர். அத்துடன் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் ஷமியின் வேகம் இந்தியாவிற்கு கை கொடுக்கும் என்று பல வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பும்ராவிற்கு பதிலாக யார் இந்திய அணியில் இருப்பார்கள் என்று ஆஸ்திரேலியாவில் முடிவு செய்வோம் எனக் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்திருந்தார்.
இந்திய அணி வரும் அக்டோபர் 10 மற்றும் 13ஆம் தேதிகளில் மேற்கு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இரண்டு பயிற்சி போட்டிகளில் விளையாட உள்ளது. ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டியில் களமிறங்க உள்ளது. இந்தப் போட்டிகள் வரும் 17 மற்றும் 19ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
சூப்பர் 12ல் இந்தியாவின் அட்டவணை:
23 அக்டோபர்: இந்தியா vs பாகிஸ்தான் (மெல்பேர்ன்)
27 அக்டோபர்: இந்தியா vs ஏ2(சிட்னி)
30 அக்டோபர்: இந்தியா vs தென்னாப்பிரிக்கா(பெர்த்)
2 நவம்பர்: இந்தியா vs பங்களாதேஷ்(பெர்த்)
6 நவம்பர்: இந்தியா vs பி 1 (மெல்பேர்ன்)
சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி தன்னுடைய முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. அதன்பின்னர் தகுதி சுற்றில் ஏ பிரிவில் 2 ஆவது இடம் பிடிக்கும் அணி, தென்னாப்பிரிக்கா,பங்களாதேஷ் மற்றும் தகுதிச் சுற்றில் பி பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணிகளுடன் விளையாட உள்ளது.