INDIA T20 Worldcup: ரோகித்தின் மாஸ்டர் பிளான் - இந்தியா உலகக்கோப்பையை வெல்ல காரணமான 6 முக்கிய தருணங்கள்..!
INDIA T20 Worldcup Win: இந்திய கிரிக்கெட் அணி 17 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி டி20 உலகக் கோப்பயை வென்று அசத்தியுள்ளது.
INDIA T20 Worldcup Win: தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில், இந்திய அணி வெற்றி பெற காரணமாக அமைந்த முக்கிய தருணங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
இந்திய அணி சாம்பியன்:
பார்படாஸ் மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்ரிக்கா அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக் கோப்பையையும், 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி கோப்பையையும் இந்திய அணி கைப்பற்றியுள்ளது. 15-வது ஓவர் வரையிலும் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு மந்தமாகவே இருந்த நிலையில், கடுமையாக போராடி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்நிலையில், இந்திய அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெற காரணமாக அமைந்த முக்கிய தருணங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
1. கிங் கோலியின் அட்டகாசமான பேட்டிங்:
நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில் இறுதிப்போட்டிக்கு முந்தைய எந்தவொரு போட்டியிலும், அணியின் நட்சத்திர வீரரான கோலி பெரிதாக சோபிக்கவில்லை. இரண்டு முறை டக்-அவுட்டாகியும் அதிர்ச்சியளித்தார். ஆனால், கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அணி நிர்வாகம் கோலி மீது முழு நம்பிக்கையை வெளிப்படுத்தியது. அதன் விளைவாகவே இறுதிப் போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், கோலி நிலைத்து நின்று ரன்களை சேர்த்தார். ஆரம்பத்தில் நிதானமாக ஆடினாலும், டெத் ஓவர்களில் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார். அதன்படி, 59 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் உட்பட 76 ரன்களை விளாசி, இந்திய அணி கடினமான இலக்கை நிர்ணயிக்க கோலி உதவினார்.
2. எதிரபாராத பூஸ்டாக அமைந்த அக்சர் படேல்:
டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி 34 ரன்களை சேர்ப்பதற்குள், மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. அப்போது, யாரும் எதிர்பாராத விதமாக அக்சர் படேல் களமிறக்கப்பட்டார். நிச்சயம் அவர் தடுப்பாட்டத்தில் தான் ஈடுபடுவார். ரன் மளமளவென ஏறாது என்றே பெரும்பாலான ரசிகர்கள் கருதினர். ஆனால், கோலி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், அக்சர் அதிரடியாக ஆடி அணியின் ரன்னை கிடுகிடுவென உயர்த்தினார். அதன்படி, 31 பந்துகளில் 4 சிக்சர்கள் மற்று ஒரு பவுண்டரி உட்பட 47 ரன்களை அக்சர் படேல் விளாசினார். இப்படி ஒரு அபார இன்னிங்ஸை எந்தவொரு வீரரும் வெளிப்படுத்தாத காரணத்தால் தான், 2023 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி வாய்ப்பை இழந்தது.
3. ஹிட்மேன் ரோகித்தின் மாஸ்டர் பிளான்
தென்னாப்ரிக்கா அணி பேட்டிங் செய்தபோது, 16வது ஓவர் முடிவு வரையிலும் வெற்றி என்பது அவர்கள் வசம் தான் இருந்தது. காரணம் கிளாசென் எனும் அசுரன் இந்திய அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து துவம்சம் செய்து வந்தார். இதையடுத்து கடைசி 18 பந்துகளில் தென்னாப்ரிக்கா அணி வெற்றி பெற, 22 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது கடைசியில் பார்த்துக் கொள்ளலாம் என விடாமல், உடனடியாக கேபடன் ரோகித் சர்மா தனது முக்கிய அஸ்திரமாக கருதிய பும்ராவிடம் பந்தை வழங்கினார். அந்த 18வது ஓவர் தான் போட்டியை மொத்தமாக இந்திய அணி பக்கம் திருப்பியது. அதற்கு முன்னதாக அவர் வகுத்த வியூகங்களும் சரியாக கைகொடுத்தன.
4. மேஜிக் நிகழ்த்திய பூம் பூம் பும்ரா
தான் வீசிய போட்டியின் இரண்டாவது ஓவரிலேயே இந்திய அணிக்கான முதல் விக்கெட்டை பும்ரா பெற்றுக் கொடுத்தார். தொடர்ந்து இக்கட்டான சூழலில் 18வது ஓவரை விசும்படி கேப்டன் ரோகித் அழைப்பு விடுக்க, அவர் எதிர்பார்தபடியே அந்த ஓவரில் மார்கோ ஜான்சென் விக்கெட்டை பும்ரா சாய்த்தார். அதோடு அந்த ஓவரில் வெறும் இரண்டே ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். மொத்தமாக 4 ஓவர்களை வீசி 18 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்து இந்திய அணியின் வெற்றியை ஒரு செய்தார். தொடர் முழுவதும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியதால், அவர் தொடர் நாயகன் விருதையும் வென்றார்.
5. எல்லைக் கோட்டில் பறந்த ஸ்கை சூர்யகுமார்
தென்னாப்ரிக்கா அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரின் முதல் பந்து ஃபுல் டாஸாக கிடைக்க, மில்லர் அதனை சிக்சருக்கு தூக்கி விளாசினார். பந்து எல்லைக்கோட்டை கடந்துவிட்டது என கருதிய நிலையில், அங்கிருந்த சூர்யகுமார் யாதவ் மின்னல் வேகத்தில் பாய்ந்து பந்தை கேட்ச் பிடித்தார். நொடி நேரத்தில் எல்லைக்கோட்டை மிதிக்கவிருப்பதை உணந்து, பந்தை மீண்டும் காற்றில் தூக்கி எறிந்துவிட்டு எல்லைக்கோட்டுக்குள் சென்றார். அதோடு கண்ணிமைக்கும் நேரத்தில் மீண்டும் காற்றில் பறந்து பந்தை கேட்ச் பிடித்து எல்லைக்குட்டுக்கு மறுபுறம் குதித்தார். சூர்யகுமார் பிடித்த அந்த கேட்ச் தான் இந்திய அணியை உறுதி செய்தது.
6. ஜீரோ டூ ஹீரோவான ஹர்திக் பாண்ட்யா:
இந்திய அணியின் பந்துவீச்சை கிளாசென் நையப்புடைத்துக் கொண்டிருந்தார். இதனால், ஐசிசி கோப்பையை வெல்லும் கனவும் இந்த முறையும் பலிக்காது என்ற மனநிலைக்கே இந்திய ரசிகர்கள் சென்றுவிட்டனர். ஆனால், தான் வீசிய போட்டியின் 17வது ஓவரின் முதல் பந்திலேயே கிளாசென ஆட்டமிழக்கச் செய்தார் ஹர்திக் பாண்ட்யா. அதன் பிறகு தான் போட்டியில் வெல்ல இன்னும் வாய்ப்பு உள்ளது என்ற உத்வேகமே இந்திய அணியினரிடையே உயிர்பெற்றது.
அதேநேரம், கடைசி ஓவரில் 14 ரன்களுக்குள் தென்னாப்ரிக்காவை சுருட்ட வேண்டும் என்ற இக்கட்டான சூழலிலும், ஹர்திக் பாண்ட்யா பந்துவீசினார். ஓவரின் முதல் பந்திலேயே மில்லர் விக்கெட்டை வீழ்த்தியதோடு, 5வது பந்தில் ரபாடாவையும் ஆட்டமிழக்கச் செய்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
மோசமான ஃபார்மில் இருந்த ஹர்திக் பாண்ட்யா, டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மாவிற்கு மாற்றாக ஹர்திக் கேப்டனாக நியமிக்கப்பட்டதும் அவருக்கு எதிராக அமைந்தது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால், உலகக் கோப்பை தொடக்கத்தில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார். இந்நிலையில், இறுதிப்போட்டியில் இந்திய அணி கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றியதன் மூலம், ஹர்திக் பாண்ட்யா தற்போது நாயகனாக கொண்டாடப்படுகிறார்.