இத்தனை ஆயிரம் பேரை ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து மீட்டிருக்கிறோம்: என் ஒரே குறிக்கோள் இதுதான்- முதல்வர் ஸ்டாலின் உருக்கம்!
நன்றாக படித்து தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நீங்கள் பணியாற்றினால் அதுதான் இந்த திட்டத்தின் வெற்றி.- முதல்வர் ஸ்டாலின்

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நகரப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இன்று (ஆக.26) முதல் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
’’குழந்தைகளுடன் உணவு சாப்பிட்ட உடன், அவர்களைப் போலவே எனக்கும் எனர்ஜி வந்துவிட்டது. மனதுக்கு மிகவும் நிறைவான நாள் இது. இந்தத் திட்டத்தில் 20 லட்சம் குழந்தைகள் தினந்தோறும் காலை உணவு உட்கொள்கிறார்கள் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி எனக்கு.
புதுமைப் பெண் திட்டத்தைத் தொடங்கி வைக்க டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் வந்த நிலையில், காலை உணவுத் திட்ட விரிவாக்கத்துக்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வந்துள்ளார்.
ரூ.600 கோடி மதிப்பீட்டில் செயல்பாடு
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஆண்டுக்கு ரூ.600 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப் படுகிறது, இந்தத் திட்டத்தை செலவு என நான் சொல்ல மாட்டேன். இது ஒரு சிறப்பான சமூக முதலீடு. ஆயிரக்கணக்கான குழந்தைகளை ஊட்டச்சத்துக் குறைபாட்டில் இருந்து மீட்டிருக்கிறோம். நன்றாக படித்து தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நீங்கள் பணியாற்றினால் அதுதான் இந்த திட்டத்தின் வெற்றி.
நான் முதல்வர் ஆனதில் இருந்து என்னுடைய ஒரே குறிக்கோள், எல்லாத் துறைகளிலும் தமிழ்நாட்டை நம்பர் 1 மாநிலம் ஆக்குவதுதான்’’.
இவ்வாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.






















