Yuzvendra Chahal Divorce: அடக்கடவுளே! மனைவியை டைவர்ஸ் செய்கிறாரா சாஹல்? ஷாக்கில் ரசிகர்கள்
இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் தனது மனைவி தனஸ்ரீயை விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் பிரபலமான சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவர் யுஸ்வேந்திர சாஹல். சமீபகாலமாக இந்திய அணியில் இடம் கிடைக்காவிட்டாலும் மிகவும் சிறப்பான சுழற்பந்துவீச்சாளர் ஆவார்.
மனைவியை பிரிகிறாரா சாஹல்?
யுஸ்வேந்திர சாஹலின் மனைவி தனஸ்ரீ வர்மா. இவர் நடனக்கலைஞர் ஆவார். இன்ஸ்டாகிராமில் நடனம் ஆடி ஏராளமான வீடியோக்களைப் பதிவிட்டுள்ளார். இவரை இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கானோர் பின்தொடர்கிறார்கள்.
கிரிக்கெட் உலகின் சிறந்த தம்பதிகளாக இவர்கள் உலா வந்தனர். இந்த நிலையில், திடீரென இன்ஸ்டாகிராமில் ஒருவரை ஒருவர் அன்ஃபாலோ செய்துள்ளனர். மேலும், இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கியுள்ளனர். இதனால், இவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இன்ஸ்டாகிராமில் போட்டோக்கள் நீக்கம்:
இவர்கள் இருவருக்கும் நெருக்கமானவர்கள் கூறும்போது, "இவர்கள் இருவரும் விவகாரத்து செய்வது தவிர்க்க முடியாதது. அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வர சில காலம் ஆகும். அவர்கள் இருவரும் பிரிந்ததற்கான சரியான காரணங்கள் இன்னும் தெரியவில்லை. ஆனால், சாஹலும், தனஸ்ரீயும் இனிமேல் தனித்தனியே வாழ முடிவு செய்துள்ளனர்" என்று கூறினார்.
சாஹல் - தனஸ்ரீ திருமண வாழ்க்கை முடிவுக்கு வர இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் இருவருக்கும் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி திருமணம் ஆகியது. சாஹல் தனது மனைவியுடன் எடுத்துக்கொண்டு அனைத்து புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கியுள்ளார். ஆனால், தனஸ்ரீ சாஹலுடன் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வைத்துள்ளார்.
விரைவில் அறிவிப்பு:
ஏற்கனவே, கடந்த 2023ம் ஆண்டு தனஸ்ரீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து சாஹல் என்ற பெயரை நீக்கியிருந்தார். அப்போதும் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக தகவல் வெளியாகியது. சாஹலும் புதிய வாழ்க்கை ஆரம்பமாக உள்ளதாக பதிவிட்டார். இதனால், இவர்கள் இருவரும் பிரிவது உறுதி என்று தகவல் பரவியது. பின்னர், இவர்கள் இருவரும் சேர்ந்து யாரும் வதந்தியை பரப்ப வேண்டாம் என்று ஒன்றாக இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
ஆனால், இந்த முறை இவர்கள் இவரும் விவகாரத்து செய்ய முடிவு செய்திருப்பதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்றும் தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. 34 வயதான யுஸ்வேந்திர சாஹல் 72 ஒருநாள் போட்டிகளில் ஆடி 121 விக்கெட்டுகளையும், 80 டி20 போட்டிகளில் ஆடி 96 விக்கெட்டுகளையும், 160 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 205 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். சமீபகாலமாக பிரபலங்கள் மத்தியில் விவாகரத்து அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.