MDMK: பிரதமர் மோடியைச் சந்தித்தது பாஜக-வுடன் கூட்டணி பேசவா? உண்மையை உடைத்த துரை வைகோ
பிரதமர் மோடியைச் சந்தித்தது ஏன்? மதிமுக - பாஜகவுடன் கூட்டணி வைக்குமா? என்பதற்கு துரை வைகோ விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தலுக்கான பணியில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஆளுங்கட்சியான திமுக-வை வீழ்த்த எதிர்க்கட்சிகளான அதிமுக, அறிமுக கட்சியான தவெக, தமிழ் தேசியத்தை முன்னெடுத்து வரும் நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர்.
மோடியைச் சந்தித்த துரை வைகோ:
இந்த நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக-வை வீழ்த்த திமுக கூட்டணியை உடைப்பதே மிகவும் முக்கியம் என்று எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றனர். திமுக கூட்டணியில் உள்ள விசிக-விற்கு நடிகர் விஜய் தொடர்ந்து வலை விரித்து வருகிறார். ஆனால், திருமாவளவன் பிடி கொடுக்காமல் இருந்து வருகிறார்.
இந்த சூழலில், திமுக கூட்டணியில் இருந்து விலகி அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக இணைய உள்ளதாக தகவல் வெளியாகியது. அதற்கு முக்கிய காரணம் பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ சந்தித்ததே ஆகும். பிரதமர் மோடியை எதற்காக சந்தித்தார்? மதிமுக - பாஜகவுடன் கூட்டணியா? என்பதற்கு துரை வைகோ தனியார் வார இதழுக்கு அளித்த பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்.
பிரதமரைச் சந்தித்தது இதற்காகத்தான்:
அதில் அவர் கூறியிருப்பதாவது, ரஷ்யாவிற்கு இந்தியர்களை வேலைக்காக அழைத்துச் சென்று உக்ரைனுக்கு எதிரான போரில் அவர்களை பயன்படுத்துகின்னறர் என்ற புகார்கள் வருகிறது. அவர்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்தேன்.
அங்கு அழைத்துச் செல்லப்பட்ட பலரும் இறந்து விட்டதாகவும், காணாமல் போய்விட்டதாகவும் கூறப்படும் நிலையில் எஞ்சியிருப்பவர்களை மீட்க வேண்டும் என்ற நோக்கத்தில் 15 கட்சிகளைச் சேர்ந்த 68 எம்.பி.க்களிடம் கையெழுத்து வாங்கி அதை பிரதமர் மோடியிடம் வழங்கினேன்.
மானங்கெட்ட செயல்:
இந்த சந்திப்பில் அரசியலைப் புகுத்துவது கேடுகெட்ட, மானங்கெட்ட செயல். இளைஞர்களை மீட்பதற்காக நடைபெற்ற சந்திப்பு பிரதமருடனான சந்திப்பு. பாஜக-வுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. பாஜக-வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு கற்பனையில் கூட இல்லை.
பெரியார் மண்ணில் இந்துத்துவ சக்திக்கு இடமில்லை. நாடாளுமன்றத்தில் இணை அமைச்சர் எல்.முருகனைச் சந்தித்தபோது கூட எங்களைச் சம்பந்தப்படுத்தி ஏன் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துகிறீர்கள்? என கேள்வி எழுப்பினேன். அதற்கு அவர் உங்களை மனதில் வைத்துச் சொல்லவில்லை. மதவாத சக்திகள் காலூன்றும் இந்த சமயத்தில் திமுகவுக்கு பக்கபலமாகவே மதிமுக இருக்கும்.
பிரதமரை எதிர்க்கக்கூடாது:
பிரதமர் மோடி கங்கை கொண்ட சோழபுரத்திற்கு வந்ததால் ராஜேந்திர சோழனின் புகழ் உலகப்புகழ் பெற்றிருக்கிறது. தமிழரின் பெருமையை உலகத்திற்கு எடுத்துச் செல்லும்விதமாக பிரதமர் வரும்போது அதை அரசியலாக்கக்கூடாது. அவரது வருகையை எதிர்ப்பது ஆரோக்கியமானது அல்ல. பிரதமரை வரவேற்க வேண்டும் என்ற திமுக நிலைப்பாட்டை மதிமுக வரவேற்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
திமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள மதிமுக இந்த முறை கடந்த முறை ஒதுக்கப்பட்ட தொகுதிகளை காட்டிலும் அதிகளவு தொகுதிகள் கேட்க திட்டமிட்டிருப்பதாகவும், கூட்டணி கட்சியான காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆகியோரின் தொகுதியையும் மதிமுக கேட்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.





















