Watch video: மைதானத்துல தான் சண்டை எல்லாம்.. மத்தபடி நாங்க "தோஸ்துங்க தான்".. இந்திய - பாக். வீராங்கனைகள் வீடியோ
மகளிர் டி-20 உலகக்கோப்பை லீக் போட்டிக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் அணி வீராங்கனைகள் சந்தித்துக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்திய - பாக். வீராங்கனைகள் சந்திப்பு:
மகளிர் டி-20 உலகக்கோப்பை லீக் போட்டிக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் அணி வீராங்கனைகள் சந்தித்துக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், ”போட்டிக்கு பிறகு இரு அணி வீராங்கனைகளும் சந்தித்துக்கொண்டு சிரித்து பேசி, மகிழ்ச்சியுடன் கட்டியணைத்துக்கொண்டுள்ளனர். தங்களது அனுபவங்களையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ள, ஒரு சில வீராங்கனைகள் தங்களது ஜெர்சியை பரஸ்பரம் மாற்றிக்கொண்டுள்ளனர். பாகிஸ்தானின் இளம் வீராங்கனைகள் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர் மற்றும் நட்சத்திர வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா உள்ளிட்டோருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டுள்ளனர். இறுதியாக இரு அணி வீராங்கனைகளும் சேர்ந்து குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளனர்.” இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
Players' interactions after the #INDvPAK match at Newlands 🇵🇰🇮🇳#BackOurGirls | #T20WorldCup pic.twitter.com/Yc4YcKxV2v
— Pakistan Cricket (@TheRealPCB) February 13, 2023
ஆசிய கோப்பை சர்ச்சை:
இந்தியா - பாகிஸ்தான் அரசாங்களுக்கு இடையேயான மோதல் காரணமாக, நடப்பாண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க அந்நாட்டிற்கு செல்ல மாட்டோம் என, இந்திய கிரிக்கெட் சம்மேளனம் தெரிவித்துள்ளது. அவ்வாறு நடந்தால் இந்தியாவில் நடப்பாண்டு இறுதியில் நடைபெற உள்ள, உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கமாட்டோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இதனால், இருநாட்டு கிரிக்கெட் வாரியங்கள் மட்டுமின்றி, முன்னாள் வீரர்களுக்கு இடையேயும் கடுமையான வார்த்தை போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இருநாடுகளின் மகளிர் அணி வீராங்கனைகளும் சகஜமாக பேசி, பழகும் வீடியோவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் மோதல்:
தென்னாப்ரிக்காவில் நடைபெறும் மகளிர் டி-20 உலகக்கோப்பை தொடரில், தனது முதல் லீக் போட்டியில் இந்திய அணி, நேற்று பாகிஸ்தானை எதிர்கொண்டது. நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணி 20 ஓவர்கள் முடிவில், 149 ரன்களை எடுத்தது.
இந்திய அணி அபார வெற்றி:
150 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு, பாட்டியா மற்றும் ஷஃபாலி வர்மா ஜோடி நல்ல தொடக்கத்தை தந்தது. தொடர்ந்து இரண்டாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 38 பந்துகளில் 8 பவுண்டரிகள் உட்பட 53 ரன்களை சேர்த்து, இறுதி வரை ஆட்டமிழக்காமல் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இறுதி கட்டத்தில் ரிச்சா கோஷ் அதிரடியாக விளையாடி 31 ரன்களை சேர்த்தார். இதன் மூலம் இந்திய அணி 19 ஓவர்கள் முடிவில், 151 ரன்களை எடுத்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோட்ரிக்ஸ் ஆட்டநாயகியாக ரோட்ரிக்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.