CWG 2022 Wrestling: காமன்வெல்த் மல்யுத்தத்தில் இந்தியாவிற்கு 5வது தங்கத்தை வென்று அசத்திய வினேஷ்
காமன்வெல்த் மல்யுத்தத்தில் மகளிருக்கான 53 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகாத் தங்கம் வென்றுள்ளார்.
காமன்வெல்த் மல்யுத்தத்தில் மகளிருக்கான 53 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகாத் பங்கேற்றார். இவர் முதல் போட்டியில் கனடா வீராங்கனை சமந்தா ஸ்டீவாட்டை எதிர்த்து விளையாடினார். அந்தப் போட்டியில் வினேஷ் போகாத் 5-0 என்ற கணக்கில் வென்றார். இதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியில் நைஜீரிய வீராங்கனை அடோகுரோயே எதிர்த்து விளையாடினார். அந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வினேஷ் போகாத் 3-0 என்ற கணக்கில் வென்று அசத்தினார்.
இந்நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி போட்டியில் இலங்கையின் மதுராவல்கேவை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் வினேஷ் போகாத் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்தப் போட்டியை 4-0 என்ற கணக்கில் இருந்த போது பின் செய்து வென்றார். இதன்மூலம் 53 கிலோ எடைப்பிரிவில் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று வினேஷ் போகாத் முதலிடம் பிடித்தார். அத்துடன் தங்கப்பதக்கத்தையும் வென்று அசத்தினார். இதன்மூலம் நடப்பு காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவிற்கு மல்யுத்தத்தில் 5வது தங்கத்தை வினேஷ் போகாத் வென்று அசத்தியுள்ளார்.
இறுதிப் போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தஹியா நைஜீரியாவின் வெல்சன் எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் தொடக்க முதலே இரு வீரர்களும் புள்ளிகள் எடுக்க முயற்சி செய்தனர். அதன்பின்னர் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி இந்திய வீரர் ரவிக்குமார் தஹியா அசத்தலாக புள்ளிகளை குவித்தார். இறுதியில் 10-0 என்ற கணக்கில் போட்டியை வென்று அசத்தினார். அத்துடன் இந்தியாவிற்கு 4வது தங்கப்பதக்கத்தையும் வென்று அசத்தினார்.
மகளிருக்கான 50 கிலோ எடைப்பிரிவு போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்தியா சார்பில் பூஜா கேலோத் பங்கேற்றார். இவர் முதல் இரண்டு சுற்றுகளில் வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து அரையிறுதி போட்டிக்கு இவர் முன்னேறினார். அரையிறுதிப் போட்டியில் இவர் கனடாவின் மேடிசன் பார்க்ஸை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் இந்தியாவின் பூஜா கேலோத் 9-6 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். இதன்மூலம் அவர் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார்.
வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் பூஜா கேலோத் ஸ்காட்லாந்து நாட்டின் கிறிஸ்டினாவை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் தொடக்க முதலே பூஜா கேலோத் ஆதிக்கம் செலுத்தினார். இதன்காரணமாக இவர் 12-2 என்ற கணக்கில் எளிதாக போட்டியை வென்றார். அத்துடன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்