Thiruppavai 29: மார்கழி 29ஆம் நாளுக்கான திருப்பாவையில் ஆண்டாள் கூறுவது இதுதான்...
Thiruppavai 29: மார்கழி மாதம் 29வது நாளுக்கு உரிய திருப்பாவை பாடலாக ஆண்டாள் இயற்றியதை காண்போம்.
மார்கழி மாதத்தில் கண்ணபிரானை போற்றி, 30 நாட்களும் 30 பாடல்கள் கொண்ட திருப்பாவையை ஆண்டாள் இயற்றியுள்ளார். இருபத்து ஒன்பதாவது பாடல் மூலம் ஆண்டாள் கூற வருவதை காண்போம்.
திருப்பாவை இருபத்து ஒன்பதாவது பாடல் விளக்கம்:
கண்ணா! அதிகாலை பொழுதில் எழுந்து உன்னை வணங்க வந்திருக்கிறோம். ஏன் தெரியுமா, அதற்கான காரணத்தை கேள், பசுக்களை மேய்க்கும் ஆயர் குலத்தில் பிறந்த நீ, எங்களது நோன்பை கண்டுகொள்ளாமல் இருந்து விடாதே, நீ தரக்கூடிய பொருட்களுக்காக, நோன்பை நாங்கள் மேற்கொள்ளவில்லை.
ஒவ்வொரு பிறவியிலும், நீ எங்களுடன் ஆயர் குலத்தில் பிறக்க வேண்டும். எங்களை உன் உறவினர்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும். உனக்கு சேவை செய்யும் வாய்ப்பை நீ தந்தருள வேண்டும். இதை தவிர்த்து இதர ஆசைகளை எல்லாம் அழித்து விடு என ஆண்டாள் கேட்கிறார்.
திருப்பாவை இருபத்து ஒன்பதாவது பாடல் :
சிற்றஞ் சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து,
உன்பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்துநீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே ஆவோம்; உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்று ஏலோ ரெம்பாவாய்
ஆண்டாள்:
கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளான ஆண்டாள், சூடி கொடுத்த சுடர் கொடி என்றும் செந்தமிழ் செல்வி கோதை நாச்சியார் என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் மிகவும் தமிழ் புலமை மிக்கவராக திகழ்ந்துள்ளார்.
பக்தி இயக்கம்:
கி.பி ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலான காலத்தை பக்தி இயக்க காலம் என்று அழைப்பர். ஏனென்றால் இக்காலக்கட்டத்தில் பக்தி இலக்கியங்கள் பல உருவாகின என்றும், குறிப்பாக சைவர்களான நாயன்மார்களும், வைணவர்களான ஆழ்வார்களும் இறைவனை போற்றி பல பாடல்கள் இயற்றினர். தமிழுக்கு பங்காற்றியதில், பக்தி இலக்கியங்களுக்கும் பெரும் பங்கு உண்டு.
மார்கழி மாதத்தில், கண்ணபிரானை வைத்து, இலக்கிய நயம் மிக்கதாகவும், உவமை- உருவகத்தை நேர்த்தியாகவும், தமிழை அழகுப்படுத்தி பாடல் அமைத்திருப்பதை காணும்போது, ஆண்டாளின் தமிழ் வளத்தை அறியலாம்.
தொடர்ந்து படிக்க: Thiruppavai 28: உரிமையின் காரணமாகவே உரிமையில் அழைத்தோம்...கோபித்து கொள்ளாதே கண்ணா- ஆண்டாள்..