Villupuram: திண்டிவனத்தில் வரும் 23ம் தேதி கடன் வசதியாக்கல் லோன் மேளா
திண்டிவனத்தில் கடன் வசதியாக்கல் முனைப்பியக்கம் / லோன் மேளா 23:11.2023 அன்று நடைபெறவுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் கடன் வசதியாக்கல் முனைப்பியக்கம் / லோன் மேளா 23:11.2023 அன்று நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.
எம். எஸ். எம். ஈ நிறுவனங்கள் ஊரகப்பகுதிகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திறன் பெற்றதாகவும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் பங்களிப்பதாகவும் உள்ளதால் தமிழ்நாடு அரசு, விழுப்புரம் மாவட்ட எம்.எஸ்.எம்.ஈ. நிறுவனங்களின் வளர்ச்சிக்காக 2023-24 ஆம் ஆண்டில் ரூ.1390.00 கோடி ரூபாய் கடன் வழங்க வேண்டுமென ஆண்டுக் கடன் திட்ட அறிக்கையில் இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை வென்றடைய, சூலை 2023 தொடங்கி காலாண்டுக்கொருமுறை கடன் வசதியாக்கல் முனைப்பியக்கம் என்னும் லோன் மேளா நடத்தப்பட வேண்டுமென மாவட்டத் தொழில் மையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதல் லோன் மேளா, 18.08.2023 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் விழுப்புரத்தில் நடத்தப்பட்டு 2119 எம்.எஸ்.எம்.ஈ. நிறுவனங்களுக்கு ரூ.11.22 கோடி கடன் வழங்கப்பட்டது. 30.9.2023 வரையிலான அரை நிதியாண்டில் ரூ.695.41 கோடி ரூபாய் அளவிலான கடன் எம்.எஸ்.எம்.ஈ. நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு ஆண்டுக் கடன் திட்ட இலக்கில் 50% எட்டப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இரண்டாவது எம்.எஸ்.எம்.ஈ. கடன் வசதியாக்கல் முனைப்பியக்கம் 25112023 அன்று காலை 10.00 மணியளவில் திண்டிவனத்தில் தேசீய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஹோட்டல் ஹரிஹர பவன் ஹாலில் நடைபெறவுள்ளது.
இந்த முனைப்பியக்கத்தின் முதன்மை நோக்கம் எம். எஸ். எம். ௬. நிறுவனக் கடன். கூடவே, பிற முன்னுரிமைக் கடன்களுக்கும் முக்கியத்துவம் உண்டு. வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய அரசுத் துறைகள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் உதவி மையங்களை அமைக்கவுள்ளன. அங்கே அவை தரும் கடன் வகைகள், கடன் மற்றும் மானியத் திட்டங்கள், அவற்றைப் பெறும் முறைகள் குறித்த விளக்கப் பதாகைகள் அமைக்கப்பட்டிருக்கும். ஆர்வமுள்ளோர், தேவையான வழிகாட்டுதல் மற்றும் விளக்கங்கள் பெறலாம். கடன் கோரி விண்ணப்பங்களைப் பதிவு செய்யவும் பரிசீலிக்கவும் வழி வகை செய்யப்படும்.
ஆர்வமுள்ள தொழில் முனைவோர், வணிகர், இளைஞர் மற்றும் மாணவர்கள் திறன் மேம்பாடு, தகுதியும் வாய்ப்புமுள்ள தொழில், வணிகத் திட்டங்களைக் கண்டறிதல், திட்ட அறிக்கை தயாரித்தல், தொழில் மற்றும் வணிக நிறுவனங்களை நிறுவுதல் மற்றும் நிர்வகித்தல், நிதி நிறுவனங்களுடன் தொடர்பில் ஒருத்தல், சந்தைப்படுத்தல் மற்றும் ஏற்றுமதி உள்ளிட்ட தொழில் மற்றும் வாணிகம் தொடர்பான அத்தனை விஷயங்கள் குறித்தும் முறையான தகவலும் தெளிவும் பெறலாம். ஊக்கமும் தேவையும் உள்ள யாவரும் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கடன் வசதியாக்கல் முனைப்பியக்கம் தொடர்பாகவும் கடன் பெறுதல் மற்றும் தொழில் தொடங்குதல் தொடர்பாகவும் மேலான விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்டத் தொழில் மையம், மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம், விழுப்புரம் அவர்களை நேரடியாகவோ 9443728015 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் பழனி தெரிவித்துள்ளார்.