Vijayakanth: விஜயகாந்த் மறைவிற்கு விழுப்புரத்தில் அனைத்து கட்சியினர் சார்பில் அஞ்சலி
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு விழுப்புரத்தில் அனைத்து கட்சியினர் சார்பில் அஞ்சலி செலுத்தினர்.
விழுப்புரம் : மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு விழுப்புரத்தில் அனைத்து கட்சியினர் சார்பில் அஞ்சலி செலுத்தினர்.
தேமுதிக நிறுவன தலைவரும் நடிகருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக 71வது வயதில் நேற்று உயிரிழந்தார். விஜயகாந்த் அவர்களின் பொதுத் தொண்டு மற்றும் அரசியல் வாழ்வை போற்றும் விதமாக விழுப்புரத்தில் அனைத்து கட்சிகளின் சார்பில் விஜயகாந்த் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாக வாயிலில் நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில் திமுக, அதிமுக, பாமக, பாஜக, தமிழக வாழ்வுரிமை கட்சி, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார். திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு விஜயகாந்தின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பல்வேறு கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து விஜயகாந்த் அவர்களின் பொது வாழ்க்கை மற்றும் அரசியல் வாழ்க்கை குறித்து உரையாற்றினார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவு
தேமுதிக தலைவரும், முன்னாள் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் நேற்று காலை காலமானார். ஏற்கனவே உடல் நல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் இரவு மீண்டும் போரூரில் உள்ள மியாட் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். சளி, இருமல் போன்றவற்றால் ஏற்பட்ட சுவாச பிரச்சினையால் அவர் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து நேற்று அதிகாலை தேமுதிக வெளியிட்ட அறிக்கையில், “விஜயகாந்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், வெண்டிலேட்டர் சிகிச்சையுடன் சிகிச்சையளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது”. ஆனால் சில மணி நேரத்தில் விஜயகாந்த் காலமானார் என அறிவிக்கப்பட்டது. அவரது மறைவு திரைத்துறையினர், தேமுதிக தொண்டர்கள், பொதுமக்கள் என அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பலர் நேரிலும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் விஜயகாந்த் நினைவுகளை பகிர்ந்து இரங்கல் தெரிவித்தனர். முன்னதாக விஜயகாந்த் உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்திய பின் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து விருகம்பாக்கம் வீட்டில் இருந்து விஜயகாந்த் உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள், தேமுதிக தொண்டர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே தேமுதிக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் கேப்டன் அவரகள் காலை 6.10 மணியளவில் மறைவு என்ற செய்தி தேமுதிகவிற்கும், தமிழக திரையுலகிற்கும், உலகில் உள்ள அனைத்து தமிழக மக்களுக்கும் பேரிழப்பாகும். கேப்டன் அவர்களின் இறுதி மரியாதை 29.12.2023 வெள்ளிக்கிழமை மாலை 4.45 மணிக்கு தேமுதிக தலைமைக்கழகமான கோயம்பேட்டில் நடைபெறவுள்ளது. மேலும் தேமுதிக கட்சி கொடி 15 நாட்கள் அரைக்கம்பத்தில் பறக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.