Chennai Ring Road: சென்னை ரிங் ரோட் - இங்க லேண்ட் இருந்தா நீங்க தான் லக்கி பாஸ்கர் - ரியல் எஸ்டேட் ரேட் அப்டேட்
Chennai Ring Road Real Estate: சென்னை ரிங் ரோட் திட்டத்தை சார்ந்து எங்கேல்லாம் நிலத்தின் மதிப்பு உயரும் எனா கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

Chennai Ring Road Real Estate: சென்னை ரிங் ரோட் திட்டம், ரியல் எஸ்டேட் பிரிவில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
சென்னை ரிங் ரோட்:
சென்னை அவுட்டர் ரிங் ரோட் எனப்படும் வெளிவட்டச் சாலை என்பது, மிகவும் முக்கிய உட்கட்டமைப்பு திட்டமாக பார்க்கப்படுகிறது. 62 கிலோ மீட்டர் நீளத்திற்கான தமிழ்நாடு அரசின் இந்த திட்டம், இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, நகரின் பல்வேறு பகுதிகளுக்கான இணைப்பும் மேம்பட்டுள்ளது.
இரண்டு கட்டங்களாக பணிகள்:
ரிங் ரோடின் சுமார் 29 கிலோ மீட்டர் தூரத்திற்கான முதற்கட்ட பணிகள், GMR இன்ஃப்ராஸ்ட்ரக்சர் எனும் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டது. அந்நிறுவனம் இந்த திட்டத்தை இரண்டு பிரிவுகளாக பிரித்தது. அதன்படி, ஜிஎஸ்டி சாலையில் இருந்து நஸ்ரத்பேட்டையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 48 வரையில் ஒரு பிரிவாகவும், நஸ்ரத்பேட்டையிலிருந்து நெமிலிச்சேரியில் உள்ள சிடிஎச் சாலை வரை இரண்டாவது பிரிவாகவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
சுமார் 33.1 கிலோ மீட்டர் நீளத்திற்கான இரண்டாவது கட்ட பணிக்கான செலவு ஆயிரத்து 75 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டது. இதில் ஒரே கட்டமாக பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி, நெமிலிச்சேரியில் உள்ள சிடிஎச் சாலையை, செங்குன்றத்தில் உள்ள ஜிஎண்டி சாலையுடன் இணைக்க திட்டமிடப்பட்டது. இந்த திட்டமானது 2022ல் பூர்த்தி அடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவிடப்பட்டது. உள்ளூர் போக்குவரத்திற்காக இருபுறமும் சர்வீஸ் சாலையுடன் ஆறு வழி அணுகலுடன், எண்ட்ரி கட்டுப்படுத்தப்பட்ட பிரதான வண்டிப்பாதையான நான்கு வழி சாலையையும் கொண்டுள்ளது.
ரியல் எஸ்டேட் பிரிவில் தாக்கம்:
நகரின் முக்கிய பகுதிகளுக்கான இணைப்பை மேம்படுத்துவது, பயண நேரத்தை குறைப்பதன் இந்த வெளிவட்டச்சாலை திட்டமானது சென்னையின் ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. மேம்படுத்தப்பட்ட இணைப்பு வசதி கொண்ட வணிக பகுதிகளாகவும், ஐடி வழித்தடங்களாகவும் உருவெடுத்துள்ளதால், பெருங்குடி, பூந்தமல்லி மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிகள் அனைத்து வசதிகளும் கொண்ட குடியிருப்பு பகுதிகளாக உருவெடுத்துள்ளன. உட்கட்டமைப்பை மேம்படுத்தும் இந்த நடவடிக்கையானது ஒருங்கிணைந்த டவுன்ஷிப்கள், தொழில்துறை பகுதிகள் மற்றும் வேர்-ஹவுஸ் கிளஸ்டர்களின் வளர்ச்சியையும் ஊக்குவித்துள்ளது. அதன் மூலம், உள்ளூர் சிறு வணிகமும் வளர்ச்சியை கண்டுள்ளது.
வெளிவட்ச்டச்சாலை காரணமாக, விமான நிலையம், பேருந்து முனையம், ரயில் நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளை எளிதில் அணுகின்றனர். இதனால், இந்த சாலையை ஒட்டியுள்ள பூந்தமல்லி. செங்குன்றம், மீஞ்சூர், ழோழிங்நல்லூர், திருவள்ளூர் போன்ற பகுதிகளில் உள்ள நிலத்தின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
செங்குன்றத்தில் டிமாண்ட்:
செங்குன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்கனவே வணிக வளாகங்கள், பிரபலமான பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் நிறைந்துள்ளன. செங்குன்றத்திற்கு அருகில் உள்ள மாதாவரத்தில் இருந்து தான், ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களுக்கான பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. இதற்காக அந்த பேருந்து நிலையத்தை, மெட்ரோ சேவையுடன் இணைப்பதற்கான பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன. இதன் மூலம் நகர்ப்பகுதி உடனான இணைப்பு மேலும் எளிதாகிறது. இதனால் செங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நிலத்தின் விரைவில் பல மடங்கு உயரலாம்.
சென்னை மாநகராட்சி எல்லைக்குள் இருப்பதால் செங்குன்றத்தில் தற்போதே, ஒரு சதுர அடி ஆயிரத்து 500 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. குறிப்பிட்ட சில இடங்களில் அதிகபட்சமாக 7000 வரையிலும் விலை நீள்கிறது. மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டிற்கு வந்துவிட்டால், இந்த விலை மேலும் உயரக்கூடும்.





















