விழுப்புரம் நீதிமன்றத்தில் நடந்த மக்கள் நீதிமன்றம் - சமரசமாக முடிக்கப்பட்ட 887 வழக்குகள்
1,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்ததில் 887 வழக்குகள் சமரசமாக முடிக்கப்பட்டு 12 கோடியே 49 லட்சத்து 4 ஆயிரத்து 976 க்கு தீர்வு காணப்பட்டது.
விழுப்புரம் : விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 887 வழக்குகளுக்கு 12 கோடியே 49 லட்சத்திற்கு சமரச முறையில் தீர்வு காணப்பட்டன.
விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இன்று மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இம்முகாமிற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் முதன்மை மாவட்ட அமர்வு பொறுப்பு நீதிபதியுமான ஹெர்மிஸ் தலைமை தாங்கினார். அப்போது மக்களின் சிரமத்தை போக்கும் வகையில் சமரச முறையில் வழக்குகளுக்கு தீர்வு காணப்படுவதன் மூலம் பல்வேறு வழக்குகள் தேக்கமடையாமல் தீர்வு காணப்படுவதாகவும் முடிந்தளவு சமரச அடிப்படையில் தீர்வு காணப்பட்டால் வழக்குகள் தேக்கமடையாது என தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் விபத்துகள் தொடர்பான வழக்குகள், காசோலை வழக்குகள், நில அபகரிப்பு வழக்குகள், குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், எடுத்துக்கொள்ளப்பட்டு சமரசமாக விசாரிக்கப்பட்டது.அதுபோல் ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளை தவிர புதியதாக தாக்கல் செய்ய தகுதியுடைய வழக்குகள் மற்றும் பிரச்சினைகளுக்கும் சமரச முறையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் நீதிபதிகள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர், 1,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்ததில் 887 வழக்குகள் சமரசமாக முடிக்கப்பட்டு 12 கோடியே 49 லட்சத்து 4 ஆயிரத்து 976 க்கு தீர்வு காணப்பட்டது.
லோக் அதாலத்
லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் சமாதானநிலை மற்றும் சமரசம் மூலம் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க இந்திய அரசால் உருவாக்கப்பட்ட நீதிமன்றம் ஆகும். இந்திய நீதிமன்றங்கள், தங்களிடம் நிலுவையில் உள்ள வழக்குகளை, மனுதாரர்களின் விருப்பத்தின் அடிப்படையிலோ அல்லது தன்னிச்சையாகவோ சமரச முறையில் தீர்வு காண மக்கள் நீதி மன்றங்களுக்கு அனுப்பலாம். இது உரிமையியல் விசாரணை முறைச் சட்டப்பிரிவு 89-ன் கீழ் வருகின்றது.
சட்டப்பணிகள் ஆணைக் குழு பிரிவு 19-தின் படி, மக்கள் நீதிமன்றம், 3 பேர் கொண்ட அமர்வாக இருக்கும். அதில் ஒருவர் பணியில் இருக்கும் அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி, மற்றொருவர் சமூக நலப் பணியாளர் அல்லது பொது நல ஊழியர், மூன்றாம் நபர் வழக்கறிஞர்.
- நீதி மன்றத்திலிருக்கும் நிலுவையிலுள்ள வழக்குகளில் சம்மந்தப்பட்ட இருதரப்புக்கும் இடையே சமரசத் தீர்வு ஏற்படுத்துதல்.
- நீதிமன்றத்திற்கு அப்பாற்பட்ட சில பிரச்சனைகளுக்கும் பேசித் தீர்வு காண முயலுதல்.
- வழக்குத் தரப்பாளர்களுக்குக் குறைந்த செலவில் விரைவாக நீதி கிடைக்க வழிவகை செய்தல்.