Villupuram: நீண்ட நாட்களாக போராடிய நரிக்குறவர் மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கிய அமைச்சர் செஞ்சி மஸ்தான்
மரக்காணத்தில் பசலி வருவாய் தீர்வாயம் விழாவில் நீண்ட நாட்களாக போராடிக் கொண்டிருந்த நரிக்குறவர் சமுதாய மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.
சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தலைமையில், விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் நடைபெற்ற 1432-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம் நிறைவு விழாவில், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை இன்று (04.07.2023) வழங்கினார்.
அமைச்சர் மஸ்தான் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஆட்சிப்பொறுப்பேற்றது முதல், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திடும் வகையில் தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்று சேர்ந்திட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வருகிறார்கள். விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பல்லாயிரக்கணக்கான மக்களின் கோரிக்கைகள் மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வாண்டிற்கான வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்கள் வழங்கும் கோரிக்கை மனுக்கள் மீது உடனடி தீர்வு கண்டு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்கள்.
அதனடிப்படையில், இன்றைய தினம், மரக்காணம், வருவாய் தீர்வாயத்தில் பெறப்பட்ட மனுக்களில் உடனடி தீர்வின் மூலம், வருவாயத்துறை சார்பில், 41 பயனாளிகளுக்கு ரூ.97,62,150/- மதிப்பில் கூனிமேடு சுனாமி குடியிருப்பு இலவச வீட்டுமனைப்பட்டாவும், 21 பயனாளிகளுக்கு ரூ.16,67,595/- மதிப்பில் வீட்டுமனைப்பட்டாவும், 56 பயனாளிகளுக்கு பட்டா மாற்றம் முழுப்புலனும், 57 பயனாளிகளுக்கு பட்டா மாற்றம் உட்பிரிவும், 10 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டையும், சமூக பாதுகாப்புத் திட்டத்தின்கீழ், 100 பயனாளிகளுக்கு ரூ.17,66,750/- மதிப்பில் திருமண உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, தற்காலிக இயலாமை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, முதியோர் உதவிதொகையும், 14 நரிக்குறவர்களுக்கு பழங்குடியினருக்கான சாதிச்சான்றிதழும், வேளாண்மைத் துறை சார்பில், 06 பயனாளிகளுக்கு ரூ.14,880/- மதிப்பில் வேளாண் உபரணங்களும், ஊரக வளர்ச்சித்துறை சார்பில், 1 பயனாளிக்கு ரூ.1,70,000/- மதிப்பில் இலவச வீட்டிற்கான ஆணையும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், 1 பயனாளிக்கு ரூ.10,000/- மதிப்பில் இலவச தையல் இயந்திரம் என மொத்தம் 317 பயனாளிகளுக்கு ரூ.1,33,91,375/- மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், விளிம்பு நிலையில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்திற்கும் தேவையான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி, தமிழ்நாடு அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடி மாநிலமாக திகழ்ந்துவருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு மக்களின் நலன் காக்கும் அரசாக உள்ளது. எனவே, நலத்திட்ட உதவிகள் பெற்றவர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தெரிவித்தார்.