(Source: ECI/ABP News/ABP Majha)
Vellore: பைக் ரேசில் உயிரிழந்த மகன்; கணவனை இழந்து மகனே உலகம் என வாழ்ந்த தாயின் துயர முடிவு
வேலூரில் மகன் இறந்த துக்கம் தாங்காமல் காட்பாடியில் ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
வேலூர் மாநகராட்சி சைதாப்பேட்டை பழைய காலனியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மனைவி காஞ்சனா (வயது 45), தனியார் காலனி தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு செந்தில்குமார் இறந்து விட்டார். அதன்பின் காஞ்சனா அவரது மகன் ஆனந்தன் வயது (25) வசித்து வந்தார். தனது ஒரே மகனான ஆனந்தை சிறு வயது முதலே மிகுந்த பாசத்தோடு வளர்த்து வந்துள்ளார். அதே அளவுக்கு ஆனந்தும் தாய் காஞ்சனா மீது பாசத்தோடு இருந்துள்ளார். இந்நிலையில் கார் ஓட்டுனராக வேலை செய்து வரும் ஆனந்த் ஒரு தீவிர அஜித் ரசிகர், அதே சமயம் நீண்ட தூர பைக் (ரைடு) பயணத்தை மேற்கொள்வதையும் வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் திருச்சிக்கு குழுவாக பைக் பயணம் சென்றபோது கடந்த 24.02.2023 அன்று திருச்சி அருகே விபத்து ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் காஞ்சனா மிகவும் சோகத்தில் இருந்து வந்தார். கணவரும் இல்லை, பெற்ற மகனும் விபத்தில் இறந்துவிட்டதால் காஞ்சனாவால் துக்கம் தாங்க முடியவில்லை. இதனால் மனமுடைந்த காஞ்சனா தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
இன்று காலை காட்பாடி ரயில் நிலையத்திற்கு சென்றார். அங்கு 2-வது பிளாட்பாரத்தில் ரயில்வே காவல் நிலையத்தை கடந்து சென்றார். அப்போது காலை 7.40 மணிக்கு பெங்களூருவில் இருந்து சென்னை வழியாக டெல்லி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. ரயில் நிலையத்தில் சிறிது நேரம் நின்ற அந்த ரயில் மீண்டும் சென்னை நோக்கி புறப்பட்டது. அப்போது சிறிது தொலைவில் காஞ்சனா ஓடி சென்று ரயில் முன்பு தண்டவாளத்தின் நடுவில் நின்றார். அவர் ரயிலை நோக்கி கைகளை அசைத்தபடி நின்று கொண்டே இருந்தார். இதனை கண்ட ஓட்டுநர்கள் உடனே அலாரத்தை ஒலித்தபடி பிரேக் போட்டு ரயிலை நிறுத்த முயன்றனர். ஆனாலும் ரயில் நிற்காமல் காஞ்சனா மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த காஞ்சனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை நேரில் பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே காட்பாடி ரயில்வே காவல்நிலைய ஆய்வாளர் சித்ரா மற்றும் காவல்துறையினர் சென்று ரயிலுக்கு அடியில் சிக்கிக் கிடந்த காஞ்சனாவின் உடலை மீட்ட காட்பாடி ரயில்வே காவல்துறையினர் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து ரயில் தாமதமாக புறப்பட்டு சென்றது. உயிருக்கு உயிராக பழகி வந்த மகன் மற்றும் தாய் உயிரிழந்த சம்பவம் வேலூரில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம், எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)உங்கள் பகுதியில் உள்ள குறைகள் நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.