முக்கிய கட்சியினருக்கு பணமா?; அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் ஐ.டி. அதிரடி சோதனை - நெல்லையில் பரபரப்பு
முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு பணம் நன்கொடையாக அளிக்க உள்ளதாக வந்த தகவலை அடுத்து வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

நெல்லை மாவட்டம் விஜயநாராயணம் பகுதியை சார்ந்தவர் ஆர்.எஸ்.முருகன். அரசு ஒப்பந்தக்காரரான இவர் நெல்லை என்ஜிஓ காலனி வசித்து வருகிறார். மேலும் பெருமாள்புரம் சாரா டக்கர் கல்லூரி அருகே 80 அடி சாலையில் இவரது அலுவலகமும் செயல்பட்டு வருகிறது.
வருமானவரித்துறை சோதனை:
இந்த நிலையில் வருமான வரித்துறை உதவி ஆணையாளர் ராஜேந்திரன் தலைமையிலான ஏழு பேர் மூன்று வாகனங்களில் நேற்று திடீரென அவரது வீட்டிற்கு சோதனைக்கு வந்தனர். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் பெருமாள்புரம் பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடைபெற்று வருவதாக தெரிகிறது.
குறிப்பாக திருச்செந்தூர் - திருநெல்வேலி - கல்லிடைக்குறிச்சி இடையேயான சாலை விரிவாக்கம் திருநெல்வேலி - தென்காசி நான்கு வழி சாலை பணிகள் என பல நூறு கோடி ரூபாய்க்கு சாலை பணிகளை எடுத்து செய்து வருகிறார். முன்னாள் அதிமுக நிர்வாகியான இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தற்போதைய ஆட்சியிலும் பல்வேறு ஒப்பந்தங்களை எடுத்து வேலை செய்து வருகிறார். இதன் காரணமாக முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவிற்காக பணம் அளிக்க உள்ளதாக வந்ததாக வருமான வரித்துறையினருக்கு தகவல் வந்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் அதிகாரியில் சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.. அதாவது பாராளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முக்கிய அரசியல் கட்சிகள் இவரிடம் பணம் பெற்று கொடுக்க உள்ளதாக தகவல் வந்த நிலையில் சோதனை நடைபெற்றது நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு வருமான வரித்துறை அதிகாரிகள் ஆர் எஸ் முருகன் அலுவலகத்தில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. மேலும் பணம் கைப்பற்றப்பட்டது குறித்து எந்த தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை. அதிகாரப்பூர்வான தகவலை தொடர்ந்து முழுவிவரம் தெரிய வரும் என்றும் சொல்லப்படுகிறது. இதே போல முன்னாள் சபாநாயகரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் கிழக்கு மாவட்ட செயலாளருமான ஆவுடையப்பன் அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில் அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் சோதனை நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

