"விஜய்க்கு இது அழகல்ல, அவர் திருந்தி கொள்ள வேண்டும்" - கே.பி.ராமலிங்கம் எச்சரிக்கை
புதிதாக கட்சி தொடங்கி உள்ள விஜய் அரசியலில் வேகமாக வளர்வதற்காக பாஜகவை பாசிசம் என்று குறிப்பிட்டார். அவர் பாஜகவை முழுமையாக புரிந்துகொள்ளவில்லை என்றுதான் அர்த்தம் என்றார்.

சேலத்தில் பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, மும்மொழி கல்வி கொள்கையில் மாநில மொழி கட்டாய பாடமாக இருக்கும். அதன்படி தமிழகத்தில் தமிழ் மொழி கட்டாயம். இணைப்பு மொழியாக ஆங்கிலம் மற்றும் விருப்ப மொழியாக நாடு முழுவதும் உள்ள மொழிகளில் ஏதேனும் ஒன்றை மாணவர்கள் தேர்வு செய்து படிக்கலாம். தேசத்தின் மொழிகளை நாம் வளர்க்க வேண்டும். தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளை அரசு பள்ளிகளில் படிக்க இயலாததால் பெரும்பாலானோருக்கு மூன்றாவது மொழி பேச தெரிந்தும் எழுத தெரியவில்லை. பெரும்பாலான மாணவர்கள் தனியார் பள்ளியில் மூன்றாவது மொழி பயில்கின்றனர். இது ஏன் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்க கூடாதா? என் கேள்வி எழுப்பினார். கலைஞர், ஸ்டாலின், அவருடைய மகன், அவருடைய பேரன் என்ன செய்தார்கள் என்பதை பாடத்திட்டத்தில் இணைக்க முயற்சிக்கிறார்கள் என்று கூறினார்.
கல்வியில் சேர, சோழ, பாண்டிய வரலாறுகள் மறைக்கப்பட்டு வரலாற்றை திசை திருப்ப பார்க்கிறார்கள். முதல்வரின் தவறான புரிதலை திருத்தும் மருந்தாக கையெழுத்து வேட்டையை துவங்கிறோம். தொடர்ந்து மும்மொழி கொள்கை ஆதரவு கையெழுத்துக்களை முதல்வரிடம் வழங்க உள்ளோம் என்றார்.
போதை கலாச்சாரம், டாஸ்மாக் மற்றும் கள்ளச்சாராயம் விற்பனையில் தமிழ்நாடு முதலிடம், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கிடப்பதில் முதலிடம், சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமையில் முதலிடம். இவற்றை திசை திருப்பவே மும்மொழி கொள்கையை முதல்வர் கையில் எடுத்துள்ளார்.
இது 1965 ஆம் ஆண்டு அல்ல. இது 2025 என முதல்வர் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். உலக அரங்கில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அசுர வேகத்தில் உள்ளது. இதனை உலக தலைவர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். அமெரிக்க அதிபரே நமது பிரதமரின் இருக்கையை சரி செய்யும் அளவிற்கு நமது பிரதமர் வளர்ந்து நிற்கிறார். வெளிநாட்டு அதிபர்கள் அனைவரும் இந்திய நாட்டின் ஆட்சியை பாராட்டுகிறார்கள். நம் நாடு 100 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது வல்லரசு நாடுகளையே நாம் வழிநடத்தும் வகையில் பிரதமர் ஆட்சி செய்து வருகிறார். ஆனால் அவற்றின் மீது சேற்றை வாரி அடிப்பது போல் தமிழ்நாடு முதல்வர் செயல்படுகிறார். குடுகுடுப்பைகாரர்களை போல தொகுதி மறு வரையறை குறித்து பேசி முதல்வர் மக்களை ஏமாற்றுகிறார் என்றார்.
40 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்து திமுக என்ன கிழித்தது. உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டில் தொகுதிகள் குறையாது என்று தெளிவாக பேசியும் கூட இவர்களுக்கு புரியவில்லை என்றால் இவர்களை பைத்தியகார மருத்துவரிடம்தான் அழைச்சிட்டு போகணும். மும்மொழி கொள்கையில் மாநில மொழியான தமிழ் கட்டாயம் என்று கூறினார்.
புதிதாக கட்சி தொடங்கி உள்ள விஜய் அரசியலில் வேகமாக வளர்வதற்காக பாஜகவை பாசிசம் என்று குறிப்பிட்டார். அவர் பாஜகவை முழுமையாக புரிந்துகொள்ளவில்லை என்றுதான் அர்த்தம். தங்களை வளர்த்து கொள்வதற்காகவும் தங்களது நிழலை வளர்த்து கொள்ளவும் மோடியை எதிர்த்து பேசுபவர்கள் முட்டாள். ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி எதிர்கட்சிகளை ஒடுக்கும் எண்ணம் ஒருபோதும் பாஜகவிற்கு இல்லை. அரசியலில் வளரும் விஜய்க்கு இது அழகு அல்ல. விஜய் திருந்தி கொள்ள வேண்டும் என எச்சரித்தார்.

