தூத்துக்குடியிலிருந்து கோவை சென்ற பேருந்து தீ விபத்தில் சிக்கியது - டிரைவரால் உயிர் தப்பிய பயணிகள்
”இரவு நேரம் என்பதால் பயணிகள் அனைவரும் உறங்க தொடங்கியுள்ளனர். அப்போது மின் கசிவு காரணமாக பேருந்தில் இருந்து தீப்பொறி வந்துள்ளது, இதையடுத்து சூதாரித்துக் கொண்ட டிரைவர் பேருந்தை ஓரமாக நிறுத்தியுள்ளார்”
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் இருந்து 8 மணி அளவில் கோயம்புத்தூரை நோக்கி எஸ்பிஎஸ் தனியார் ஆம்னி பேருந்து 36 பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. அப்போது பேருந்தை காயாமொழி குமாரசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த சத்யராஜ் (34) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் ஓட்டப்பிடாரம் அருகே புதூர்பாண்டியபுரம் டோல்கேட் பகுதியை இரவு 10 மணி அளவில் தாண்டி சென்று கொண்டிருந்தது. இரவு நேரம் என்பதால் பயணிகள் அனைவரும் உறங்க தொடங்கியுள்ளனர். அப்போது மின் கசிவு காரணமாக பேருந்தில் இருந்து தீப்பொறி வந்துள்ளது. இதை அடுத்து ஏதோ விபரீதம் நடப்பதாக சுதாரித்துக் கொண்ட டிரைவர் ஓரமாக பேருந்தை நிறுத்தி பார்த்துள்ளார்.
அப்போது பேருந்தில் தீ மளமளவென பரவ தொடங்கியுள்ளது. இதனையடுத்து, பயணிகள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு அவசர அவசரமாக இறங்கினர். அதற்குள் தீ பற்றி எரியத் தொடங்கியுள்ளது. உடனடியாக தீயணைப்புத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் பேருந்து முழுவதும் பற்றி எரிந்தது. ஆனால் பயணிகளின் உடமைகள் அனைத்தும் பேருந்திலேயே தீக்கிரையானது.
அதன் பின்னர் சிப்காட் தீயணைப்பு துறையினர், மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி குமார் தலைமையில் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்ககளுடன் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயம் ஏதும் இன்றி உயிர் தப்பினர். இச்சம்பவம் குறித்து புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உரிய நேரத்தில் சுதாரித்துக் கொண்டு பயணிகள் அனைவரும் பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இரவு நேரத்தில் பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்