Minister Ragupathy‘ : நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
’மழை, வெப்பம், கடும் பனி, போலீஸ் கட்டுப்பாடுகள், தடியடி, கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு என எத்தனை அக்கிரமங்களைச் செய்ய முடியுமோ அத்தனையும் செய்த மோடிதான் திருச்சியில் கபட வேடம் போடுகிறார்’

700 விவசாயிகளின் இறப்புக்குக் காரணமாக இருந்துவிட்டு விவசாயம் பற்றியெல்லாம் பாடம் எடுக்க மோடிக்கு வெட்கமாக இல்லையா? என்றும் வேளாண்மை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் தடியடி,கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு, என எத்தனை அக்கிரமங்களைச் செய்ய முடியுமோ அத்தனையும் செய்த மோடிதான் திருச்சியில் கபட வேடம் போடுகிறார் என்று தமிழ்நாடு அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
நேற்று திருச்சி பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, திமுகவை கடுமையாக விமர்சனம் செய்திருந்த நிலையில், அதற்கு பதிலடி தரும் வகையில் அமைச்சர் ரகுபதியின் பேட்டியை இன்று திமுக ஏற்பாடு செய்திருந்தது.
ரகுபதி பேசியது என்ன ?
அந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் ரகுபதி “தேர்தல் வந்துவிட்டால் பிரதமர் மோடிக்குத் தமிழ்நாடு மீது பாசம் டன் கணக்கில் கொட்டும். திருச்சி கூட்டத்தில் ஆத்தோ ஆத்து என்று உரையை ஆற்றியிருக்கிறார். வறண்ட தானியமான கேப்பையில் நெய் வடிவது சாத்தியமில்லை. கேட்கிறவன் கேனையனா இருந்தால் கேப்பையில் நெய் வடியுதுனு சொல்ற மாதிரி பொய்ப் பிரசாரங்களை முன்னெடுப்பதில் பிரதமர் மோடியை மிஞ்சும் ஆள் இந்த உலகத்திலேயே இல்லை. விவசாயம், விவசாயிகளின் வருமானம், விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்கான திட்டங்கள் பற்றியெல்லாம் பேசுவதற்குப் பிரதமர் மோடிக்கு அருகதை இருக்கிறது? என கேட்டார்.
வேளாண் துறைக்கு திமுக கொடுக்கும் தனி பட்ஜெட்
மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகுதான் முந்தைய அதிமுக ஆட்சியில் நசிந்து கிடந்த விவசாயத்தை மீட்டெடுக்க வேளாண்மைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவித்தார். அதன்படி கடந்த ஐந்தாண்டுகளாக வேளாண் துறைக்கென ரூபாய் 1 இலட்சத்து 94 ஆயிரத்து 76 கோடி நிதி, உழவர்களின் நலனுக்காகவும், உழவுத் தொழிலை மேம்படுத்தவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
உழவர்களின் கோரிக்கையை ஏற்று நெல் கொள்முதல் ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.2500 /- ஆக உயர்த்தப்படும் என வாக்குறுதி கொடுத்து, அதன் படி விலையை உயர்த்தி வழங்கியவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். ஆனால், பிரதமர் மோடி என்ன செய்தார்.? விவசாயத்தையே அழிக்கும் மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்து, விவசாயிகளின் வயிற்றில் அடிக்கப் பார்த்தார். மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்தும், விவசாய விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய வேண்டும் எனப் போராடிய விவசாயிகள் மீது கண்மூடித்தனமான வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டார்.
விவசாயிகளுக்கு சாதகமான பிரதமர்
“விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக்கப்படும்” என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு, மோசமான 3 விவசாயச் சட்டங்களைக் கொண்டு வந்து, தனக்கு நெருக்கமான தொழிலதிபர்களுக்குச் சாதகமாகச் செயல்பட்டார் பிரதமர் மோடி. சந்தைகளை நீக்கிவிட்டு விவசாய வணிகத்தை கார்ப்பரேட் மூலம் செய்ய மோடி கொண்டு வந்த விவசாயச் சட்டங்கள் வழிவகுத்தன. அந்தக் கருப்புச் சட்டங்களை எதிர்த்துப் போராடிய விவசாயிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கினார்.
கபட வேடம் போடும் மோடி – ரகுபதி தாக்கு
இந்திய வரலாற்றிலேயே நடந்த மிக நீண்ட மக்கள் போராட்டம் என்று வருணிக்கப்படும் போராட்டத்தைத் தலைநகர் டெல்லியின் எல்லைகளில் ஓராண்டுக்கும் மேலாக முகாமிட்டு விவசாயிகள் நடத்தினார்கள். மழை, வெப்பம், கடும் பனி, போலீஸ் கட்டுப்பாடுகள், தடியடி, கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு என எத்தனை அக்கிரமங்களைச் செய்ய முடியுமோ அத்தனையும் செய்த மோடிதான் திருச்சியில் கபட வேடம் போடுகிறார்.
வெட்கமாக இல்லையா மோடி ? - ரகுபதி
வேளாண்மை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கடுங்குளிர், தற்கொலை, விபத்தால் 700 விவசாயிகளை கொன்றுவிட்டு, விவசாயம் பற்றியெல்லாம் பாடம் எடுக்க மோடிக்கு வெட்கமாக இல்லை? உத்தரபிரதேசம் லக்கிம்பூரில் ஊர்வலம் சென்ற விவசாயிகள் மீது பா.ஜ.க-கவின் அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் காரை ஏற்றி 4 அப்பாவிகளைப் படுகொலை செய்தவர்கள் காருண்ணியம் பேசுகிறார்கள்!
எடப்பாடி பழனிசாமி மீதும் தாக்கு
பிரதமர் மோடி இப்படியென்றால் அவருடைய பரம அடிமையான பழனிசாமியும் மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்ததோடு சேலம் - சென்னை பசுமை வழிச் சாலையை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது அடக்குமுறையை ஏவிவிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடியின் 11 ஆண்டுக்காலத்தில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். அந்தத் தரவுகளை மறைத்து மோசடி ஆட்சியை நடத்தி வருகிறார்கள். அதே பாணியைத்தான் எடப்பாடி பழனிசாமியும் தன்னுடைய ஆட்சியில் செய்தார். சொந்த காரணங்களுக்காகத்தான் விவசாயிகள் இறந்தனர் என்று அன்றைக்கு பொய்க் கணக்கு சொன்னார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் காப்பாற்றியவர் - ரகுபதி
மதுரையில் விவசாயத்தை அழிக்கும் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முயற்சிக்குக் காரணமான கனிமவளச் சட்டத் திருத்தத்தை ஒன்றிய அரசு மாநிலங்களவையில் கொண்டு வந்த போது ஆதரவு கொடுத்து, மதுரை விவசாயிகளுக்குத் துரோகம் செய்தவர் பழனிச்சாமி. ஆனால், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் பணியைத் தடுத்து நிறுத்தி விவசாயத்தைக் காப்பாற்றியவர் நம்முடைய முதலமைச்சர் அவர்கள்.
நீலிகண்ணீர் வடிக்கும் மோடி
இன்று திருச்சியில் நின்று விவசாயிகளுக்கு நீலிக் கண்ணீர் வடிக்கும் பிரதமர் மோடிதான், சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்க விவசாயப் பொருட்களை இந்தியச் சந்தைகளில் விற்க ஒப்புதல் அளித்து, இந்திய விவசாயத்தையே சவக்குழியில் தள்ளியுள்ளார். அமெரிக்க விவசாயப் பொருட்களுக்கான வரியை 18 சதவீதமாகக் குறைத்து, இந்திய விவசாயத்தைச் சவக்குழியில் தள்ளியுள்ளார் பிரதமர் மோடி. 45.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க யானையை, உள்ளூர் கரும்புத் தோட்டத்திற்குள் நுழையவிட்டுப் பொருளாதாரத்தைச் சிதைக்கப் பார்க்கிறார். கேஸ் மற்றும் பெட்ரோல் தட்டுப்பாட்டிற்கு மத்தியிலும் அவர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்குத்தான் வெண்சாமரம் வீசிக்கொண்டிருக்கிறார். இந்திய மக்கள் கேஸ் சிலிண்டருக்கும் பெட்ரோலுக்கும் தத்தளித்துக்கொண்டிருக்கின்றனர்.
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்று 2014-ல் கொடுத்த வாக்குறுதியைப் பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றி விட்டாரா? ’விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவேன்’ எனக் கூறிவிட்டு ஆட்சிக்கு வந்த பின் விவசாயிகள் வயிற்றில் அடித்து வருபவர்தானே பிரதமர் மோடி. இவையெல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியாது எனக் கதையளக்க வந்துவிட்டார்” என்று குறிப்பிட்டார்.























