(Source: ECI/ABP News/ABP Majha)
President : குடியரசுத்தலைவரின் அதிகாரங்கள்..ஒவ்வொரு இந்திய குடிமகனும் தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள் இதோ..!
இந்திய குடியரசுத்தலைவராக இருக்கும் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
அடுத்த இந்திய குடியரசு தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அவருக்கான அதிகாரங்கள் என்னென்ன என்பது குறித்து நாம் காணலாம்.
இந்திய குடியரசுத்தலைவராக இருக்கும் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வததற்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜூன் 15 ஆம் தேதி தொடங்கியது.
வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாள் ஜூன் 29 ஆம் தேதியாகும். இதில் எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத்தலைவர் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஜார்க்கண்டின் முன்னாள் ஆளுநராகப் பணியாற்றிய திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். இதில் திரௌபதி முர்மு ஜூன் 24 ஆம் தேதியும் யஷ்வந்த் சின்ஹா, நேற்று முன்தினம் ஜூன் 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இதனிடையே நாட்டின் முதல் குடிமகன் என்றழைக்கப்படும் குடியரசுத் தலைவருக்கான அதிகாரம் என்ன என்பதை இந்திய நாட்டின் குடிமகன்களாகிய நாம் அனைவரும் தெரிந்திருக்க வேண்டும்.
- இந்திய அரசமைப்பின்படி மத்திய அரசின் நிர்வாகத்துறைக்கு குடியரசுத்தலைவர் தான் தலைவர். ஆனால் நிர்வாகங்கள் அந்தந்த அமைச்சர்களால் கவனிக்கப்படுகிறது.
- பிரதமர், மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள், உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர், தேர்தல் ஆணையர்கள், தலைமைக் கணக்காயர் உள்ளிட்ட நாட்டின் முக்கிய பதவிகளுக்கு நியமனங்களை குடியரசுத்தலைவர் தான் மேற்கொள்வார்.
- நிதி , அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், ஆட்சிமொழி ஆகியவற்றின் ஆணையங்களையும், மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சிலையும் நியமிக்கும் உரிமை இவருக்கே உண்டு.
- குடியரசுத் தலைவருக்கு நாடாளுமன்ற அவைகளைக் கூட்டவும், கூட்டத்தொடரை முடிவுக்கு கொண்டு வரவும், அவைகளை கலைக்கவும் அதிகாரம் உள்ளது.
- மக்களவையில் பெரும்பான்மையைப் பெற்ற ஒருவரைப் பிரதமராகத் தேர்ந்தெடுத்து ஆட்சி அதிகாரத்தை ஏற்க வருமாறும் அழைப்பு விடுக்கும் அதிகாரம் பெற்றுள்ளதோடு, எந்தவொரு கட்சி அல்லது கூட்டணி பெரும்பான்மையை நிருபிக்க இயலாத நிலையில் சுய விருப்பத்தின் கீழ் வேறு யாரையும் ஆட்சிப் பொறுப்பேற்று பெரும்பான்மையை நிருபிக்க அழைப்பு விடுக்கலாம்.
- கலை,இலக்கியம்,அறிவியல் துறைகளில் சிறந்து விளங்கும் 12 பேரை மாநிலங்களவையில் உறுப்பினர்களாக நியமிக்கும் அதிகாரத்தை பெற்றுள்ளார்.
- மக்களவையில் பெரும்பான்மையை நிருபிக்க இயலாத ஒரு கட்சி ஆட்சி பொறுப்பில் இருந்து விலக மறுக்கும் பட்சத்தில், அந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரலாம்.
- நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வரைவுகளுக்கு இவர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே அது சட்டமாகும் தகுதியைப் பெறும்.
- ஒருவேளை நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஒன்று கூடாத நிலையில் அவசரச்சட்டம் இயற்றவேண்டிய சூழல் ஏற்பட்டால் அதனை இயற்றலாம். இதுகுறித்து விசாரிக்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை
- நாடாளுமன்றத்தில் பண மசோதாவைக் கொண்டு வர குடியரசு தலைவரின் ஒப்புதல் கண்டிப்பாக தேவை.
- அரசியலமைப்பு சட்டம் 72ன் படி, மரண தண்டனை உட்பட எந்தவொரு தண்டனையைக் குறைக்கவும் நிறுத்திவைக்கவும் தள்ளிவைக்கவும் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது. இது விசாரணை நிலையிலோ தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகோ எந்த நிலையிலும் செயல்படுத்தப்படலாம்.
- நாடு முழுவதும் அல்லது மாநிலம் அல்லது குறிப்பிட்ட சில பகுதிகளிலோ நெருக்கடி நிலையை அறிவித்து அடிப்படை உரிமைகளில் சிலவற்றை நிறுத்திவைக்க உரிமை உள்ளது.
- நாட்டில் நிதிநிலை மோசமானால் நிதிநிலை நெருக்கடியை அறிவித்து நீதிபதிகள், அரசு ஊழியர்கள் ஆகியோரின் ஊதியத்தைக் குறைக்க அதிகாரம் உண்டு.
- வெளிநாடுகளுக்கான இந்தியத் தூதர்களை நியமிக்கும் அதிகாரம் கொண்ட குடியரசுத் தலைவர் நாடுகளுக்கு இடையிலான வெளியுறவு நடவடிக்கைகளில் இந்தியாவின் பிரதிநிதியாகவும் செயல்படுகிறார்.
- யூனியன் பிரதேசங்களை நிர்வகிக்க தன்னால் நேரடியாக நியமிக்கப்பட்ட நிர்வாகத் தலைவர்களைக் கொண்டு செயல்பட குடியரசுத்தலைவருக்கு அதிகாரம் உள்ளது.
- சமூகத்தில் பின்தங்கிய மக்கள் வாழும் பகுதிகளை அடையாளம் கண்டு அவற்றைப் பட்டியலிடப்பட்ட பகுதிகளாக அறிவிக்க முழு அதிகாரம் உள்ளது.
- நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் குடியரசு தலைவர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே அவரை பதவி நீக்கம் செய்ய முடியும்.
- நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றுள்ள ஆளும் அமைச்சரவையின் முடிவுகளுக்கு ஏற்ப தான் குடியரசுத் தலைவர் செயல்பட வேண்டும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்