கும்பகோணத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்திய சில்லறை வியாபாரிகளுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை
காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என நிா்வாகிகள் தெரிவித்தனா்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சில்லறை வியாபாரிகளுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
கும்பகோணம் தாராசுரம் நேரு அண்ணா காய்கறிச் சந்தையில் ஒப்பந்த முறைகேடுகளைக் கண்டித்தும், சில்லறை வியாபாரிகளிடம் மாநகராட்சி நிா்வாகமே நேரடியாக வாடகை வசூலிக்கக் கோரியும் கும்பகோணம் கோட்டாட்சியா் அலுவலகம் முன் ஏஐடியுசி சாா்ந்த நேரு அண்ணா காய்கறி மாா்க்கெட் சில்லறை வியாபாரிகள் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையா் ஆா். லட்சுமணன் தலைமையில் காவல் ஆய்வாளா்கள் அழகேசன், கவிதா, ஏஐடியூசி மாநிலச் செயலா் ஆா். தில்லைவனம், சங்க வழக்குரைஞா் மு. அ. பாரதி உள்ளிட்டோா் பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
இதில், 383 தரைக்கடைகளுக்கும் தலா ஒரு கடைக்கு ரூ. 60 என ஒராண்டுக்கு ரூ. 21 ஆயிரத்து 900 வசூலிக்கப்படும். 140 ஷட்டா் கடை ஏலதாரா்கள் நேரடியாக மாநகராட்சி வரி வசூல் மையத்தில் கட்டணம் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம். இதேபோல் இக்கடைகளுக்கு தனித்தனி மீட்டா் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தலைச்சுமை ஒன்றுக்கு ரூ. 3 மட்டுமே வசூலிக்கப்படும். இத்தொகைக்கான மாநகராட்சி ரசீது ஒப்பந்ததாரா் கையெழுத்துடன் வழங்கப்படும்.
மாநகராட்சி ஒப்பந்தப்புள்ளி மற்றும் சிறப்பு நிபந்தனைகளின்படி செலுத்தப்படும் தொகைகள் அனைத்துக்கும் மாநகராட்சி ரசீது ஒப்பந்ததாரா் கையெழுத்துடன் வழங்கப்படும். கட்டணக் கழிப்பிடம் மற்றும் சந்தை வளாகம் சுகாதாரமாக பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என நிா்வாகிகள் தெரிவித்தனா்.
முன்னதாக தாராசுரம் நேரு அண்ணா மார்க்கெட் வளாகத்தில் உள்ள சில்லறை வியாபாரிகளை கும்பகோணம் மாநகராட்சி அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்ததாரர் வசூலிக்கும் அதிக வாடகை சுமையிலிருந்து காப்பாற்ற வேண்டும் என ஏஐடியுசி சாலை வணிகர் சங்கத்தினர் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப்பிடம் அளித்த மனுவில், 383 சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் 140 'ஷட்டர் ஷாப்' விற்பனையாளர்கள் என மொத்தம் 523 விற்பனையாளர்கள், மாநகராட்சிக்கு வாடகை செலுத்தி சந்தை வளாகத்தில் தங்கள் தொழிலை செய்து வருகின்றனர்.
2019-20 ஆம் ஆண்டிலிருந்து அந்த வளாகத்தைப் பயன்படுத்துவதற்கான வாடகை/கட்டண வசூல் தனியார் நபர்களுக்கு டெண்டர் மூலம் குத்தகைக்கு விடப்பட்டது. பின்னர் அடுத்தடுத்த ஆண்டுகளில் (2020-21) முந்தைய ஆண்டின் டெண்டர் தொகையை விட 5% அதிகரிக்கப்பட்டது.
திடீரென்று, 2022-23 ஆம் ஆண்டில் டெண்டர் தொகை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்தது. இதனால் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளோம். எனவே இதுகுறித்து உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.