Cuddalore Train Accident: ரயில் மீது மோதிய பள்ளி வேன்.. கடலூர் செம்மங்குப்பத்தில் நடந்தது என்ன? உயிரைப் பறித்தது யார்?
கடலூர் செம்மங்குப்பம் அருகே ரயில் மீது பள்ளி வேன் மோதிய சம்பவம் எப்படி நடந்தது? என்ன காரணம்? என்பதை விரிவா காணலாம்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே செம்மங்குப்பத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்ற வேன், ரயில் மோதி மீது விபத்துக்குள்ளான சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே உலுக்கியுள்ளது.
கோர விபத்து நடந்தது எப்படி?
இந்த கோர விபத்தால் தற்போது வரை 2 மாணவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், இந்த விபத்திற்கு காரணம் என்ன? இந்த விபத்து நடந்தது எப்படி? என்பதை விரிவாக காணலாம்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே செம்மங்குப்பம் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் ரயில் வந்து செல்லும் தண்டவாளம் உள்ளது. இந்த தண்டவாளத்தின் வழியாக சாலையும் அமைக்கப்பட்டிருப்பதால், பொதுமக்களின் இரு சக்கர வாகனங்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் இதன் வழியாகவே செல்வது வழக்கம். இந்த தண்டவாளத்தில் கடலூர் - மயிலாடுதுறை ரயில் செல்வது வழக்கம் ஆகும்.

தூங்கிய கேட்கீப்பர்:
கடலூர் - மயிலாடுதுறை பயணிகள் ரயில் வழக்கம்போல இன்று காலை 7 மணியளவில் புறப்பட்டு மயிலாடுதுறை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. வழக்கமாக ரயில் வரும் நேரத்தில் இந்த கிராசிங்கில் கேட்கீப்பர் கேட்டை மூடி வைப்பது வழக்கம் ஆகும்.
ஆனால், இன்று கேட்கீப்பர் அலட்சியமாக தூங்கியுள்ளார். இதனால், ரயில் வரும் நேரத்தில் ரயில்வே கேட் மூடப்படாமல் இருந்துள்ளது. இன்று துரதிஷ்டவசமாக ரயில் வரும் நேரத்தில் தனியார் பள்ளி வேன் ஒன்று அந்த வழியாக வந்துள்ளது. பள்ளி வேன் ஓட்டுனர் ரயில்வே கேட் மூடப்படாமல் இருந்ததால், ரயில் வரவில்லை என்று கருதி பள்ளி வேனை இயக்கியுள்ளார்.
உருக்குலைந்த பள்ளி வேன்:

ஆனால், அந்த நேரத்தில் கடலூர் -மயிலாடுதுறை ரயில் வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது, ரயில் பள்ளி வேனின் மையப்பகுதியிலே மோதியது. இதில் பள்ளிக்குழந்தைகளுடன் சென்ற பள்ளி வேன் 50 அடி தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டது. ரயில் மோதிய வேகத்திற்கு பள்ளி வேன் உருக்குலைந்தது.
இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அலறியடித்துக் கொண்டே ஓடி வந்தனர். பள்ளி வேன் மீது மோதிய ரயிலும் சில அடி தூரத்தில் நிறுத்தப்பட்டது. அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து வேனின் உள்ளே பார்த்தபோது, பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் படுகாயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்தனர்.
உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம்:
உடனடியாக காவல்துறையினருக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காயம் அடைந்த மாணவர்களை கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது வரை 2 மாணவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
தக்க சமயத்தில் கேட்டை மூடாததே இந்த கோர விபத்திற்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் மிகுந்த ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் ரயில்வே கேட்கீப்பரை சரமாரியாக தாக்கினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ரயில்வே போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோகத்தில் தமிழ்நாடு:
இந்த சம்பவத்தில் வேன் உருக்குலைந்த நிலையில், உயிரிழந்த மாணவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் அஞ்சப்படுகிறது. இந்த சம்பவத்தால் ஒட்டுமொத்த கடலூர் மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாடும் சோகத்தில் மூழ்கியுள்ளது.





















