தமிழ்நாட்டில் 4308 மருத்துவ காலிப்பணியிடங்கள்; விரைவில் நிரப்ப நடவடிக்கை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் 4,308 மருத்துவக் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காகத் துறை வாரியான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தஞ்சாவூர்: தமிழகத்தில் 4,308 மருத்துவக் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காகத் துறை வாரியான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே கபிஸ்தலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் குடியிருப்பு கட்டடத்தை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
மெத்தனால் பயன்பாடு:
மதுவில் போதையை அதிகமாகக் கொண்டு வருவதற்காக எத்தனால் பயன்படுத்தப்படுகிறது. எத்தனால் விலை அதிகம் என்பதால் கள்ளச்சாராயம் காய்ச்சும் நபர்கள் குறைந்த விலையிலான மெத்தனாலை பயன்படுத்தியுள்ளனர். இதுவே பல்வேறு உயிரிழப்புகள் ஏற்பட்டதற்கு காரணம்.
மெத்தனாலை 10 முதல் 20 சதவீதம் வரை அருந்தினால் நரம்பு மண்டலங்கள் பாதிக்கப்பட்டு, பார்வையிழப்பு ஏற்படும். அதுவே 30 முதல் 40 சதவீதம் பயன்படுத்தும்போது உயிரிழப்புகளை உருவாக்கும். இது தெரிந்தும் கூட போதை அதிகமாக வர வேண்டும் என்பதற்காகக் கள்ளச்சாராயக்காரர்கள் மெத்தனாலை வாங்கி இதுபோன்ற கொடூர செயல்களைச் செய்துள்ளனர்.
கண்காணிப்பு தீவிரம்:
எனவே, மெத்தனால் உற்பத்தி, விற்பனை, வினியோகம் ஆகிய மூன்றையும் கண்காணிக்க உள்ளோம். பொதுவாக தொழிலகப் பயன்பாட்டுக்கு மட்டுமே மெத்தனாலை பயன்படுத்த வேண்டும். வேறு பயன்பாட்டுக்காகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதங்கள் அனுப்பவுள்ளோம். தொடர்ந்து மெத்தனால் விற்பனை குறித்து கண்காணிக்க அறிவுறுத்தவுள்ளோம்.
4308 காலிப்பணியிடங்கள்:
தமிழகத்தில் 4,308 மருத்துவக் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காகத் துறை வாரியான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 1,021 மருத்துவர் பணியிடங்களுக்கு 25 ஆயிரம் பேர் ஏப்ரல் மாதத்தில் தேர்வு எழுதினர். இத்தேர்வு முடிவுகள் 10 நாள்களில் வெளியிடப்பட்டு, பணியில் அமர்த்தப்படுவர்.
இதேபோல, 900 மருந்தாளுநர் பணியிடங்களுக்கு 43 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். இத்தேர்வு முடிவும் 10 நாள்களில் வெளியிடப்பட்டு, பணி நியமனம் செய்யப்படும். நடப்பாண்டு புதிதாக 4 ஆயிரம் மருத்துவப் பணியாளர்களைப் பணியில் அமர்த்த நடவடிக்கை எடுத்துள்ளோம். எம்.ஆர்.பி. மூலம் ஏற்கெனவே 4 ஆயிரத்து 308 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், நடப்பாண்டு 4 ஆயிரம் பேரை தேர்வு செய்யவுள்ளோம். கொரோனா காலத்தில் பணியாற்றிய 2 ஆயிரம் செவிலியர்கள் மீண்டும் அனைத்து மாவட்டங்களிலும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பொது சுகாதாரத் துறை மற்றும் நோய் தடுப்புத் மருந்து இயக்குநர் டி.எஸ். செல்வவிநாயகம், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாநிலங்களவை உறுப்பினர் எஸ். கல்யாணசுந்தரம், பாபநாசம் எம்எல்ஏ எம்.எச். ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தஞ்சை மாவட்டத்தில் மெலட்டூர் ஆரம்ப சுகாதார நிலையம், திருவைகாவூர், உமையாள்புரம், கூகூர் ஆகிய சுகாதார நிலையங்கள், கும்பகோணம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனை ஆகியவற்றில் ரூ. 6.17 கோடி மதிப்பிலான கட்டடங்களை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.