Renault Kiger 2025: லோ பட்ஜெட்டில் ஹைக்ளாஸ் காம்பேக்ட் எஸ்யுவி - ரூ.6 லட்சத்துக்கு ரெனால்ட் கைகர், எப்ப வாங்கலாம்?
Renault Kiger 2025: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ரெனால்ட் நிறுவனத்தின் கைகர் காரின் புதிய எடிஷன், வரும் 24ம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Renault Kiger 2025: ரெனால்ட் நிறுவனத்தின் கைகர் புதிய எடிஷனுக்கான விலை வெறும் 6 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட உள்ளது.
ரெனால்ட் கைகர் 2025 எடிஷன்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 6 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் காம்பேக்ட் எஸ்யுவியை வாங்க விரும்புபவராக இருந்தால், ரெனால்டின் புதிய கைகர் 2025 ஃபேஸ்லிஃப்ட் எஸ்யுவி உங்களுக்கான நல்ல தேர்வாக இருக்கும். அண்ம்மையில் அந்நிறுவனம் சார்பில் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ட்ரைபர் சந்தைப்படுத்தப்பட்ட நிலையில், புதிய கைகரும் விரைவில் சந்தைப்படுத்தப்பட உள்ளது. கடந்த 2021ம் ஆண்டு முதல்முறையாக விற்பனைக்கு வந்த கைகர் காலப்போக்கில் லேசான அப்டேட்களை மட்டுமே பெற்று வர, 4 ஆண்டுகளில் முதல்முறையாக ஃபேஸ்லிஃப்ட் அப்க்ரேடை பெற்றுள்ளது. புதிய தோற்றம், அம்சங்கள், வசதிகளை கொண்ட கைகர் 2025 எடிஷன், வரும் ஆகஸ்ட் 24ம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் - வெளிப்புற அப்டேட்:
ரெனால்டின் கைகர் ஃபேஸ்லிஃப்டில் முன்புறத்தில் புதிய வடிவிலான எல்இடி லைட் பார் உடன் கூடிய புதிய பம்பர், ஃபாக் லைட் செட்-அப் மற்றும் கவர்ச்சிகரமான தோற்றத்தை பெறுகிறது. பக்கவாட்டில் புதிய 16 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. பின்புறத்தில் ஸ்டாப் லேம்ப் மற்றும் ஷார்க் ஃபின் ஆண்டெனா உடன் கூடிய புதிய டிசைனிலான எல்இடி டெயில் லைட் வழங்கப்பட்டுள்ளது. ஃபேஸ்லிப்ஃட் செய்யப்பட்ட கைகரின் சாலை தோற்றமானது பழைய எடிஷனை காட்டிலும் கம்பீரமாக உள்ளது. ரெனால்டின் புதிய டைமண்ட் லோகோவும் இதில் இடம்பெற உள்ளது.
ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் - உட்புற அப்டேட்:
மேம்படுத்தப்பட்ட கைகர் காரின் உட்புற அம்சங்கள் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் ஏதும் தற்போது வரை வெளியாகவில்லை. ஆனாலும், இந்த காருக்கான அடிப்படை ஆதாரமாக உள்ள நிசான் மேக்னைட்டில் உள்ள டேஷ்போர்டில் சற்றே மற்றம் செய்யப்பட்டு அப்படியே பயன்படுத்தப்படலாம். கூடுதலாக சாஃப்ட் டச் மெட்டீரியல், இருக்கை மற்றும் டோர் ட்ரிம்களுக்கு புதிய அப்ஹோல்ஸ்ட்ரி ஆகியவை எதிர்பார்க்கப்படுகின்றன. புதிய ட்ரைபரை போன்றே, கைகரின் அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் நிலையானதாக வழங்கப்படக்கூடும்.
ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் - அம்சங்கள்
மேம்படுத்தப்பட்ட கைகரில், வையர்ட் ஆண்ட்ராய்ட் ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி ஆப்ஷனுடன் கூடிய பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டாப் வேரியண்ட்களுக்கு டிஜிட்டல் ட்ரைவர் டிஸ்பிளே மற்றும் மல்டிபிள் கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்படலாம். கூடுதலாக 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் மொபைல் சார்ஜிங் பேட், ஆட்டோமேடிக் ஏசி வெண்ட்கள், ஸ்டியரிங் வீல் மவுண்டட் ஆடியோ கண்ட்ரோல்கள், சென்சாருடன் கூடிய ரியர் பார்கிங் கேமரா, டேஷ்போர்ட் மற்றும் கேபினில் ப்ரீமியம் சவுண்ட் சிஸ்டம் மற்றும் ப்ரீமியம் குவாலிட்டி லெதர் செட் ஃபினிஷிங் ஆகியவை வழங்கப்படக்கூடும்.
பாதுகாப்பிற்காக EBD உடன் கூடிய ABS, எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஹில் ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் குழந்தைகளுக்கான ISOFIX இருக்கைகளும் வழங்கப்படுகின்றன.
ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் - இன்ஜின் விவரங்கள்
ரெனால்ட் கைகரின் ஃபேஸ்லிஃப்ட் எடிஷனில் இன்ஜின் அடிப்படையில் எந்த மாற்றமும் இருக்காது என கூறப்படுகிறது. அதன்படி தற்போதைய எடிஷனில் உள்ள 65hp மற்றும் 96Nm ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 3 சிலிண்டர் 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அப்படியே தொடர உள்ளது. இதனுடன் 5 ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்பட உள்ளன. கூடுதலாக 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனானது 98hp மற்றும் 160Nm ஆற்றலை வழங்குகிறது. இது 5 ஸ்பீட் மேனுவல் மற்றும் CVT ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இந்த கார் அதிகபட்சமாக 20 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குமென கூறப்படுகிறது.
ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் - விலை, போட்டியாளர்கள்
மேம்படுத்தப்பட்ட கைகர் கார் மாடலின் விலை அறிமுகப்படுத்தப்படும்போது, ரூ.6.5 லட்சம் முதல் ரூ.11.5 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம். இந்திய சந்தையில் நிசான் மேக்னைட், ஹுண்டாய் வென்யு, கியா சோனெட், டாடா நெக்சான், மாருதி சுசூகி ப்ரேஸ்ஸா மற்றும் மஹிந்திராவின் XUV 3XO ஆகிய காம்பேக்ட் எஸ்யுவிக்களுடன் ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் போட்டியிடுகிறது.





















