மீண்டும் கல்லூரி செல்லலாம்; 25 ஆண்டுகள் கழித்து கல்லூரிக்கு வந்த மாணவர்கள் - சீர்காழியில் சுவாரஸ்யம்
சீர்காழி அருகே 25 ஆண்டுகளுக்கு பிறகு கல்லூரி பழைய மாணவர்கள் வகுப்பறையில் ஒன்று கூடி நெகிழ்ச்சியான நிகழ்வு நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த புத்தூரில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக அரசு சீனிவாசா சுப்பராயா பல் தொழில்நுட்பக் கல்லூரி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பயின்ற மாணவர்கள் பல்வேறு மாநிலங்களிலும் பல்வேறு நாடுகளிலும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் 1998 வரை பயின்ற மாணவ மாணவியர் நேரில் ஒன்று கூடுவதற்கான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அனைவரும் ஒன்று கூடுவதென ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டு, இதற்கான ஏற்பாடுகளை நீலமேகம் மற்றும் ரஞ்சித் ஆகியோர் கவனித்து வந்தனர்.
1995 முதல் 1998 வரை படித்த எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் டெக்னாலஜி ஆகிய துறைகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் அனைவருக்கும் தகவல் அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து, பல்வேறு ஊர்களில் இருந்தும் முன்னாள் மாணவர் மாணவியர் கல்லூரிக்கு வருகை தந்தனர். 25 ஆண்டுகளுக்குப் பிறகு கல்லூரிக்குள் வந்த மாணவர்கள் ஒருவரை ஒருவர் ஆற தழுவி, கட்டி அணைத்து தங்களுடைய அன்பை பரிமாறிக் கொண்டனர். இது பார்ப்பவர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 25 ஆண்டுகளாக தங்கள் சந்தித்த இன்ப துன்பங்களயும் பகிர்ந்து கொண்டனர். தங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்கள் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்களை சந்தித்து ஆசி பெற்று அன்பை வெளிப்படுத்தினர்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பர்களைக் கண்ட மகிழ்ச்சியில் அனைவரும் ஒருவரை ஒருவர் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பிறகு தாங்கள் பயின்ற வகுப்பறைகளையும் நண்பர்களுடன் நடமாடிய இடங்களையும் நடந்து சென்று பார்வையிட்டு பசுமை மாறா நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். பின்னர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு உண்டு மகிழ்ந்தனர். சந்திப்பு நிறைவடைந்து அனைவரும் பிரிய மனமின்றி கண்ணீர் மல்க பிரியாவிடை பெற்று சென்றனர்.
மேலும் இது குறித்து முன்னாள் மாணவர்கள் கூறுகையில், கால ஓட்டத்தில் ஒவ்வொருவரும் வெவ்வேறு பாதைகளில் பல்வேறு திசைகளில் பிரிந்து சென்றுள்ள இந்த நிலையில் தற்போது அனைவரும் ஒன்று கூடி மீண்டும் பழைய நினைவுகளை அசை போட்டது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமின்றி, வேலை, தொழில், குடும்பம் பல்வேறு காரணங்களால் மன அழுத்தத்திற்கு அழகியுள்ள தங்களுக்கு இது பெரும் அருமருந்தாக அமைந்தது என கூறினர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்