(Source: ECI/ABP News/ABP Majha)
Jayakumar On Annamalai: ”அதிமுக சொத்து பட்டியல், அண்ணாமலையை பார்த்து பயமெல்லாம் இல்லை” - ஜெயக்குமார் அதிரடி
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை பார்த்து தனக்கு பயமில்லை என, அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை பார்த்து தனக்கு பயமில்லை என, அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு:
சென்னை ராயபுரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திமுக சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டது மற்றும் முன்னாள் ஆளும்கட்சிகளின் ஊழல் பட்டியலையும் வெளியிடுவேன் என அவர் கூறியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜெயக்குமார் ”திமுக ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிட்டது நல்ல விஷயம். அதேநேரம், தற்போது திமுக பற்றி மட்டுமே கூறியிருக்கிறார், அண்ணாமலை அதிமுக சொத்துப்பட்டியல் என்று முன்னாள் அமைச்சர்கள் அல்லது அதிமுக சார்ந்தவர்களின் சொத்துப்படியலை வெளியிட்டாள் அனைத்தையும் சந்திக்க தயாராக உள்ளோம். அதற்கெல்லாம் பயப்படக்கூடிய ஆட்கள் நாங்கள் இல்லை. மறைமுகமாக மிரட்டும் வேலை எல்லாம் எங்களிடம் நடக்காது. மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும். எங்களுக்கு மடியில் கனமில்லை அதனால் வழியில் பயமில்லை” என கூறினார்.
இந்த அரசியல் சரிபட்டு வராது -அண்ணாமலை
சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை ”எதற்கும் துணிந்து தான் நான் அரசியலுக்கு வந்துள்ளேன். கடந்த இரண்டு மாதங்களாக மிகவும் உக்கிரமாக இருக்கிறேன். மாலையை போடுவது, கும்புடு போடுவது, தேர்தலின் போது ஒன்றாக சேர்வது போன்ற அரசியல் எனக்கு சரிபட்டு வராது. ஒரு விஷயத்தை எதிர்க்கிறோம் என்றால் அடிப்படையில் இருந்து எதிர்க்க வேண்டும் என்கிற முடிவுக்கு நான் வந்துவிட்டேன். அதனால் இப்போது நீங்கள் பார்த்த திமுக ஃபைல்ஸ் பகுதி ஒன்றுடன் நிற்கப்போவதில்லை. தமிழ்நாடு அரசில் இதுவரை எந்த கட்சிகள் எல்லாம் அமர்ந்து இருக்கிறதோ, அத்தனை கட்சிகளின் ஊழலும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு அம்பலப்படுத்தப்படும்.
முடிந்தால் அண்ணாமலையை மாற்றுங்கள்
காரணம் ஊழலை எதிர்க்க வேண்டும் என்றால் மொத்தமாக தான் எதிர்க்க வேண்டும். பாதி எல்லாம் எதிர்த்தால் மக்களுக்கு நம் மீது நம்பிக்கை வராது. அதனால் அத்தனை பேரையும் எதிர்ப்போம். அப்படி எதிர்க்கக் கூடாது என நினைப்பவர்கள் டெல்லிக்கு சென்று அண்ணாமலையை மாற்றிவிட்டு வாருங்கள். ஆனால் அண்ணாமலை இருக்கும் வரை எதிர்ப்பான். சக்தி இருக்கு, திராணி இருக்கு என நினைப்பவர்கள் சென்று அண்ணாமலையை மாற்றி விட்டு வாருங்கள். காரணம் இது மோடி விரும்புகிற அரசியல், நான் விரும்புகிற அரசியல் கிடையாது. யாருக்கும் பயந்தோ, பணிந்தோ, குணிந்தோ அவர்கள் தயவில் எம்.பி., எம்.எல்.ஏ ஆகவேண்டியதில்லை.
பார்ட்-4 வரை நீளும் ஊழல் பட்டியல்:
மின்சாரத்தை தொட்டுவிட்டோம் இனி அதை விட முடியாது. பார்ட் ஒன்றுடன் நிறுத்த முடியாது. இனி பார்ட் 2, பார்ட் 3 மற்றும் பார்ட் 3 என, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மேலும் 3 பார்ட் ஊழல் பட்டியல் வெளியிடப்படும். வேறு வேறு கட்சிகளையும் இதில் கொண்டு வரத்தான் போகிறோம்” என பேசியிருந்தார். இதில் திமுகவை காட்டிலும், தற்போது தங்களது கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுகவை தான் மறைமுகமாக அண்ணாமலை அதிகம் சாடியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தான், அண்ணாமலையை கண்டு நாங்கள் பயப்படமாட்டோம் என அதிமுக சார்பில் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.