தஞ்சாவூர் மாநகராட்சி முன்னாள் உதவி பொறியாளர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு
கடந்த 2021ம் ஆண்டு மணிமாறன், அவரது மனைவி செல்வியை சந்தித்த, கார்த்திகேயன், மணிமாறனின் மகன் மற்றும் மகளுக்கு, மாநகராட்சியில், நிரந்தர அரசு பணி, வாங்கித் தருவதாக கூறி, பணம் கேட்டுள்ளார்.

தஞ்சாவூர்: மாநகராட்சியில், வேலை வாங்கி தருவதாக, பெண் ஒருவரிடம், 42 லட்சம் ரூபாய் மோசடி செய்த, தஞ்சாவூர், மாநகராட்சியில் பணியாற்றிய, உதவி பொறியாளர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தஞ்சாவூர், அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன். தஞ்சாவூர் மாநகராட்சியில் தற்காலிக ஊழியராக பணியாற்றினார். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு, தஞ்சாவூர் மாநகராட்சியில் உதவி பொறியாளராக பணியாற்றிய கார்த்திகேயனுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு மணிமாறன், அவரது மனைவி செல்வியை சந்தித்த, கார்த்திகேயன், மணிமாறனின் மகன் மற்றும் மகளுக்கு, மாநகராட்சியில், நிரந்தர அரசு பணி, வாங்கித் தருவதாக கூறி, பணம் கேட்டுள்ளார்.
இதை நம்பிய மணிமாறனும் அவரது மனைவி செல்வியும், கடந்த 2021ம் ஆண்டு ஏப்.1ம் தேதி முதல், 2025ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி, வரை, கார்த்திகேயன் கூறிய வங்கி கணக்கில், 42 லட்சம் ரூபாயை, செல்வி பல தவணையாக செலுத்தி வந்துள்ளனர். ஆனால், கார்த்திகேயன் வேலை வாங்கி தரமால் இழுத்தடித்துள்ளார்.
இதற்கிடையில், கார்த்திகேயன் பண்ருட்டி நகராட்சியில், உதவி பொறியாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து செல்வி கார்த்திகேயனிடம் தன் மகன் மற்றும் மகளுக்கு வேலைக்காக கொடுத்த பணம் குறித்து பல முறை கேட்டுள்ளார். ஆனால் கார்த்திகேயன் முறையான பதில் அளிக்கவில்லை.
இதையடுத்து செல்வி, தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில், புகார் அளித்தார். இதன்பேரில், தஞ்சாவூர் மாநகராட்சி முன்னாள் உதவிப் பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது மகள் சுவேதா ஆகியோர் மீது, இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.
மாநகராட்சி குப்பை கிடங்கை அகற்றுவதில், சுமார் 10 கோடி ரூபாய் அளவுக்கு நடந்த முறைகேடு விவகாரத்தில், கார்த்திகேயன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரயில்வே போலீசார் அதிரடி... வாகனங்களுக்கு அபராதம்
பொதுமக்களுக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை சங்கிலியால் பூட்டி ரயில்வே போலீசார் அபராதம் விதித்தனர்.
தஞ்சாவூர் ரயில் நிலையத்திற்கு தினமும் ஏராளமான ரயில்கள் வந்து இயக்கப்பட்டு வருகிறது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதனால் எப்போதும் தஞ்சாவூர் ரயில் நிலையம் மக்கள் கூட்டம் எப்போது இருந்து கொண்டே இருக்கும்.
இந்நிலையில் ரயில் நிலையம் முகப்பு பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருசக்கர வாகனங்களை நிறுத்த கூடாது என ரயில்வே காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் அதையும் மீறி ரயில் நிலையத்தின் முகப்பு பகுதியில் இருசக்கர வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். ரயில் நிலையத்திற்கு வருபவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தி செல்கின்றனர்.
இவ்வாறு வாகனங்களை நிறுத்தக்கூடாது என்று ரயில்வே போலீசார் எச்சரிக்கை விடுத்து வாகன ஓட்டுனர்களுக்கு அறிவுறுத்தி வந்தனர். ஆனால் பொதுமக்கள் தொடர்ந்து முகப்பு பகுதியில் நிறுத்தி வந்தனர். இதையடுத்து ரயில்வே போலீசார் அதிரடியாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை சங்கிலியால் பூட்டி வாகன ஓட்டுனர்களுக்கு 1,000 அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நிறுத்தினால் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்படும் என தெரிவித்தனர்.























