TN Rain: மழையால் மயிலாடுதுறையில் மீட்பு பணி வீரர்களுக்கு வந்த சோதனை
மயிலாடுதுறையில் பேரிடர் மீட்பு பணியில் ஈடுபடும் தீயணைப்புத்துறை அலுவலக வளாகத்தில் வடிவால் வசதி இல்லாமல் தேங்கும் மழை நீரால் தீயணைப்புத் துறையினர் பல ஆண்டுகளாக அவதியடைந்து வருகின்றனர்.
தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கியுள்ளது, இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 16 -ஆம் தேதி மாறும் என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக பல்வேறு மாவட்டங்களில் கனமழையானது நேற்று முதல் தொடர்ந்து பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மிதமான மழை பெய்து வந்தது.
நேற்று மதியம் முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது. நள்ளிரவு முதல் தொடர்ந்து மிதமான மழை விடிய விடிய பெய்து தற்போதும் தொடர்கிறது. மழை காரணமாக மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும்வரை கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. விடாமல் தொடர்ந்து பெய்துவரும் தொடர் மழை காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதாலும், சம்பா மற்றும் தாளடி விவசாயத்திற்கு உகந்தது என்பதாலும் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி இடையூறு ஏற்பட்டது. மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தீயணைப்பு துறை, வட்ட வழங்கல் துறை, மகளிர் உரிமை திட்ட அலுவலகம், மாணவர்கள் தங்கும் விடுதி உள்ளிடவைகள் அமைந்துள்ளது. கோட்டாட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள தீயணைப்பு துறை வளாகத்தில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. மேலும் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் 3 அடி ஆழத்தில் வாகனத்தின் அடிப்புறம் சரி செய்வதற்காக உள்ள பள்ளத்திலும் மழைநீர் தேங்கியுள்ளது. பேரிடர் காலத்திற்கு பயன்படுத்தப்படும் ஜெனரேட்டர் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது.
Hara Bhara Soya Kebab: சுவையான ஹரா பாரா சோயா கபாப் எப்படி செய்வதென்று பார்க்கலாம்....
தீயணைப்பு துறை வளாகம் அருகே மழை நீர் வடியும் வடிகால் தூர்ந்து போய் சரி செய்யப்படாமல் உள்ளதே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் அவசர உதவிக்காக செல்லும் தீயணைப்பு வீரர்கள் வாகனங்களில் மீட்பு பொருட்களை ஏற்றும் போது வாகனத்தை நிறுத்தி வைத்துள்ள அடியில் உள்ள பள்ளத்தில் தவறி விழுந்து காயம் ஏற்படுவது தொடர் கதையாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறை சார்ந்த பல அதிகாரிகள் பலரிடம் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், தூர்ந்துபோயுள்ள வடிகாலை சீரமைத்தால் மட்டுமே தீயணைப்பு துறை வளாகத்தில் தண்ணீரை வடியவைக்க முடியும் என்று அங்குள்ள தீயணைப்பு துறை வீரர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.