தஞ்சாவூரில் டீ, காபி விலை உயர்வு! எரிவாயு தட்டுப்பாடு, விறகு விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி!
தஞ்சாவூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் விறகு விலை உயர்ந்து வருகிறது. கிலோ ரூ. 10-க்கு விற்கப்பட்ட விறகு ரூ. 13 ஆகவும், பத்து கிலோ கொண்ட விறகுகள் ரூ. 100-லிருந்து ரூ. 130-க்கும் உயர்ந்துவிட்டன.

தஞ்சாவூர்: சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் தஞ்சாவூர் பகுதியில் விறகு விலை உயர்ந்தது. இதனால் டீக்கடைகளில் டீ, காபி விலையும் ஏற்றப்பட்டது. இதனால் டீ, காபி பிரியர்கள் கவலையடைந்துள்ளனர்.
தஞ்சாவூரில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக விறகு விலை உயர்ந்ததால், சில உணவகங்களில் டீ, காபி விலையும் உயர்ந்துவிட்டது. ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையே நிலவும் போர் காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாக, வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளைகள் பற்றாக்குறையாக உள்ளதால், உணவகங்களில் பல்வேறு பிரச்னைகள் எழுந்துள்ளன.
தஞ்சாவூரிலுள்ள பல உணவகங்களில் கையிருப்பில் இருந்த சமையல் எரிவாயு தீர்ந்துவிட்டதால், விறகு அடுப்புக்கு மாறி வருகின்றனர். இதனால், தஞ்சாவூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் விறகு விலை உயர்ந்து வருகிறது. கிலோ ரூ. 10-க்கு விற்கப்பட்ட விறகு ரூ. 13 ஆகவும், பத்து கிலோ கொண்ட விறகுகள் ரூ. 100-லிருந்து ரூ. 130-க்கும் உயர்ந்துவிட்டன. இதன் காரணமாக சில உணவகங்கள், தேநீரகங்களில் டீ விலை ரூ. 10-லிருந்து ரூ. 15 ஆகவும், காபி விலை ரூ. 15-லிருந்து ரூ. 20 ஆகவும் உயர்ந்துள்ளன.
இதனிடையே, வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளைகள் முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டாலும், சில இடங்களில் சட்ட விரோதமாக கூடுதல் விலைக்கு விற்கப்படுகின்றன. இதனால், ரூ. 1,750-க்கு விற்கப்பட்ட வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலை ரூ. 4 ஆயிரம் முதல் ரூ. 5 ஆயிரம் வரை உயர்ந்துவிட்டது. விறகு மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு காரணமாக செலவு அதிகரித்துள்ளதால், அதை ஈடுகட்ட டீ, காபிக்கு மட்டும் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், மற்ற உணவு வகைகள் வழக்கமான விலையில் வழங்கப்படுவதாகவும் தேனீரக உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர். இந்த விலை உயர்வு காரணமாக சில உணவகங்கள், தேநீர் கடைகள் சில நாட்களாக மூடப்பட்டு வருகின்றன. விலை உயர்வு காரணமாக டீ மற்றும் காபி பிரியர்கள் வேதனையடைந்துள்ளனர்.
இந்நிலையில், உணவகங்களுக்கு விறகுகளின் தேவையும் அதிகரித்து வருகிறது. ஆனால், நாட்டு மரங்களின் வரத்து குறைவாக இருப்பதால், உணவகங்களின் தேவையை நிறைவு செய்யும் விதமாக விறகுகள் வழங்க முடியாத நிலை ஏற்படும் என விறகு விற்பனையாளர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் குறித்து பரவிய வதந்தியால் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் கடந்த வியாழக்கிழமை அளவுக்கு அதிகமாக மக்கள் கூட்டம் கூடியது. இதனால், நாள்தோறும் 2 ஆயிரம் லிட்டர் விற்பனை செய்யப்பட்ட நிலையத்தில், வியாழக்கிழமை 10 ஆயிரம் முதல் 12 லிட்டர் வரை விற்பனையானது. டேங்கர் லாரிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள நிலையில், பெட்ரோல் விற்பனை நிலையத்தின் தேவையை நிறைவு செய்வதில் கால தாமதம் ஏற்பட்டது.
மேலும், ஒரே நேரத்தில் எல்லோரும் திரண்டதால், சில நிலையங்களில் பெட்ரோல் இருப்பு விரைவாக தீர்ந்து நேற்று மூடப்பட்டுக் கிடந்தன. ஆனால், பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களில் பகலில் கூட்டம் குறைந்ததால், நிலைமை சீரானது. இருப்பினும் வரும் நாட்களில் பெட்ரோல் வரத்து அதிகரிக்கும். அப்போது நிலைமை வழக்கத்திற்கு வந்து விடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்






















