‛கல்வியும்.. விவசாயமும்’ டெல்டாவை கைப்பிடித்து தூக்கிவிட்ட கரம் ‛துளசி வாண்டையார்’
கல்வித் தந்தை, கல்வி வள்ளல் எனப் போற்றப்படும் துளசி வாண்டையார் உடல் நலக்குறைவால் காலமானார்.
ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில், ஐம்பதுகளைக் கடந்த பட்டதாரிகளை, ''எங்கே படித்தீர்கள்?'' என்று கேட்டால், அவர்களின் பெரும்பாலானவர்களின் பதில், 'பூண்டி கல்லூரி’ என்பதாகதான் இருக்கு. டெல்டா மக்களுக்கு பூண்டி கல்லூரி தான் கல்வி தந்த இடம். அந்த இடத்தை இவ்வளவு உயரத்திற்கு எடுத்து வந்தவர் துளசி அய்யா வாண்டையார்.
டெல்டா மக்களுக்கு துளசி வாண்டையாரும் ஒரு காமராஜர் போன்றவர்தான். அதனால் தான் டெல்டா மக்களிடையே இவர் துளசியாக இருக்கவில்லை. துளசி அய்யாவாக இருந்தார். இயற்பெயர் துளசியியா வாண்டையார் என்று இருந்தாலும் அது பின்னாளில் மரியாதைக்காக துளசி அய்யா என்றானது. எவரிடமும் நன்கொடை பெறாமல், குறிப்பாக மாணவர்களிடம் எதுவும் பெறாமல் கல்லூரியை நடத்த முடியும் என்று நடத்திக் காட்டிய சாதனையாளர். கல்வி வழங்கியதோடு மட்டுமல்லாமல், இலவசமாக உணவும் உறைவிடமும் அளித்து மாணவர்களை கைப்பிடித்து கரைசேர்த்த கல்வி வள்ளல். கல்வி என்பது வியாபாரம் அல்ல, அது ஒரு சேவை என்பதை முழு மனதாக நம்பி, அதனை செய்தும் காட்டியவர். ஏழை மாணவர்களின் கல்விக் கட்டணத்தையும் விடுதிக் கட்டணத்தையும் தன் சொந்தப் பொறுப்பில் செலுத்திப் படிக்க வைத்த கல்விக்கடவுள் துளசி வாண்டையார். கல்வி வணிக நோக்கத்திற்குள் சென்றுவிடக்கூடாது என்பதற்காகவே பல்வேறு வற்புறுத்தல்கள் வந்தும் பொறியியல் கல்லூரியை தொடங்க மறுத்துள்ளார்.
பூண்டிக் கல்லூரி தன் மாணவர்களுக்குத் தர விரும்புவது கல்வி மட்டுமல்ல விவசாயத்தின் முக்கியத்துவத்தையும்தான் என்ற சொன்ன துளசி வாண்டையார், தான் ஒரு விவசாயி எனச் சொல்லிக்கொள்வதில் தான் எப்போதும் பெருமைகொள்வார். தஞ்சாவூர் அருகே இருக்கும் பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை நிர்வகித்த பாரம்பரியம் கொண்டது துளசி வாண்டையாரின் குடும்பம். மண்ணும், மனைவியும் ஒன்னுதான். அவர்கள் மீது நமக்கு பரஸ்பர காதல் வேணும் னு மண் மீதான காதலை தெளிவாக போட்டுடைப்பார் துளசி வாண்டையார். அதேபோல், அந்த மண் மீதான காதலை இளம் தலைமுறைக்கும் மடைமாற்றவும் செய்தார். நிலம் இருக்கு உழுதுட்டு நெல் போட்டோம் என்ற மேம்போக்கு விவசாயம் செய்யவில்லை அவர். இயற்கை விவசாயம், புதிய உத்தி என விவசாயத்தில் புரட்சியைக் கொண்டுவர விரும்பினார். அதற்கு எடுத்துக்காட்டுதான் சித்தமல்லி ப்ராஜெக்ட். பயிர்கள் குறிப்பிட்ட இடைவெளியோடு காற்றோட்டம் செல்லும்படி இருந்தால்தான் நல்ல விளைச்சல் கிடைக்கும் என்பதுதான் இந்த பிராஜெக்டின் அடிநாதம்.
தன் சொந்த ஊரான சித்த மல்லியில் இருபது வேலிக்கும் அதிகமான நிலத்தில் இந்த சித்தமல்லி பிராஜெக்டை செய்து வெற்றி பெற்றவர். அதோடு, இயற்கை விவசாயம் என்பதை தன் கல்லூரி வகுப்புறை வரை கொண்டு சேர்த்து மாணவர்களுக்கு விவசாயம் மீதான பிடிப்பை ஏற்படுத்தினார். பூண்டி புஷ்பம் கல்லூரி வாசல்களில் பச்சை பசேலென்று இருப்பது எல்லாம் அழகுச் செடிகள் இல்லை அவை அத்தனையும் மூலிகைச் செடிகள். விஷமில்லா காய்கறிகள் தான் எங்க காலேஜ் புள்ளைங்க சாப்பிடுனும்னு சொல்லிய துளசி வாண்டையார் அதற்காக இயற்கை முறையில் காய்கறிகளை ஏக்கர் கணக்கில் சாகுபடியும் செய்தார்.
கல்லூரி வளாகத்துக்குள் அரசுப் பதிவு பெற்ற சித்த - ஆங்கில மருத்துவ மையம், பெரிய நூலகம், மூலிகைகள், இயற்கை விவசாய சாகுபடி என பூண்டி கல்லூரி மாணவர்களுக்கு கல்வியைக் கடந்து விவசாயத்தையும் கற்பித்தது. கல்வியைத் தேடி தேடி கொடுத்து பல குடும்பங்களை கைத்தூக்கி விட்ட துளசி வாண்டையாரின் கரங்கள் இன்று ஓய்வடைந்து இருக்கின்றன. துளசி வாண்டையார் மறைந்தாலும் அவர் பற்ற வைத்த கல்வித்தீயும், விவசாய புரட்சியும் டெல்டாவில் பரவிக்கொண்டேதான் இருக்கும்.