லண்டனில் வேலை... தஞ்சை பகுதி விவசாயியிடம் இருந்து ரூ.5.94 லட்சம் பணம் மோசடி
சமூக வலைதள மோசடிகள், ஆன்லைன் டிரேடிங்கில் டெபாசிட் செய்ய சொல்வது போன்ற குற்றங்களைத் தடுக்க, 1930 என்ற உதவி எண்ணுடனும், cybercrime.gov.in இணையதளத்துடனும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

தஞ்சாவூர்: லண்டனில் வேலை கிடைத்துள்ளது என்று கூறி தஞ்சையை சேர்ந்த விவசாயியிடம் இருந்து ரூ.5.94 லட்சத்தை மோசடி செய்த மர்மநபர்களை சைபர் க்ரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் எம்.ராஜப்பன் (54). விவசாயி. முதுகலை பட்டதாரியான இவர் வெளிநாட்டில் வேலைக்குச் செல்ல முயற்சி செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த 02.06.25 அன்று இவரது இ-மெயிலுக்கு லண்டனில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டெக்னிக்கல் ப்ராஜெக்ட் மேனேஜர் என்கிற பதவியில் காலி பணியிடம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு சம்பள பற்றிய விவரங்களுடன் அடங்கிய ஒரு மெயில் வந்துள்ளது.
தொடர்ந்து அந்த நிறுவனத்தின் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்ட பேசிய ராஜப்பனுக்கு சில நாட்களுக்கு பின்னர் வேலை வாய்ப்பு கடிதமும் வந்தது. மேலும் அந்த கடிதத்தில் லண்டனில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியின் தொலைபேசி எண்ணும் இருந்தது. தொடர்ந்து அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசிய ராஜப்பனுக்கு மறுமுனையில் பேசிய மர்மநபர் இ-மெயில் மூலம் விண்ணப்பப் படிவத்தை அனுப்பியுள்ளார். இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் சமர்ப்பித்துள்ளார் ராஜப்பன்.
அடுத்த சில நாட்களில் தேர்வு செய்யப்பட்டதாக கூறி பணி நியமன ஆணையும் அவரது வாட்ஸ்-அப் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் மகிழ்ச்சி அடைந்த விவசாயி குறிப்பிட்ட நாளில் லண்டன் செல்வது குறித்து மர்மநபரிடம் கேட்டுள்ளார். மறுமுனையில் பேசியவர் லண்டன் செல்வதற்கான விசா கட்டணம், விமான டிக்கெட், செயலாக்க தொகை, ஆலோசனை கட்டணம் என பல்வேறு முறைகளில் பணம் கேட்டுள்ளார். இதனை நம்பிய ராஜப்பன் மர்மநபர் கூறி வங்கி கணக்குகளுக்கு கடந்த 22.07.25 வரை 5 தவணைகளில் ரூ.5.94 லட்சம் பணத்தை ஆன்லைன் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.
இதையடுத்து அந்த மர்ம நபரை ராஜப்பன் தொடர்பு கொண்ட போது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. பலமுறை தொடர்பு கொள்ள முயன்றும் செல்போன் சுவிட்ச் ஆப் என்றே வந்துள்ளது. இதையடுத்து தன்னை மோசடி செய்து பணம் பறித்துள்ளனர் என்று ராஜப்பன் உணர்ந்துள்ளார்.
இதுகுறித்து தஞ்சை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் ராஜப்பன் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் டெல்லி மாநில வங்கி கணக்குகளில் இருந்து பண மோசடி நடந்திருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு தகவல்களை தெரிவித்த போலீசார் வங்கி கணக்குகளை முடக்கினர். மேலும் இது குறித்து தஞ்சை சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் (பொ) மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் தரப்பில் கூறுகையில், நிதி மோசடி, போலி செயலிகள், சமூக வலைதள மோசடிகள், ஆன்லைன் டிரேடிங்கில் டெபாசிட் செய்ய சொல்வது போன்ற குற்றங்களைத் தடுக்க, 1930 என்ற உதவி எண்ணுடனும், cybercrime.gov.in இணையதளத்துடனும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். முக்கியமாக, அறியாத அழைப்புகளை ஏற்காமல் இருப்பது, தனிப்பட்ட தகவல்களைப் பகிராமல் இருப்பது, பொது வைஃபையைப் பயன்படுத்தாமல் இருப்பது, போலி இணைப்புகளை (Links) கிளிக் செய்யாமல் இருக்க வேண்டும். மேலும் வங்கியிலிருந்து பேசுகிறோம் ஓடிபி வந்து இருக்கும் என்று வரும் அழைப்புகளை நம்பி ஏமாறக்கூடாது என்று தெரிவித்தனர்.























