மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகரிக்கும் சைபர் கிரைம் - இளைஞர்களை எச்சரிக்கும் காவல்துறை
தங்களது சுய விபரங்களை எந்த வெப்சைட்டிலும் பதிவு செய்ய வேண்டாம் என மாவட்ட சைபர் கிரைம் ஆய்வாளர் இளைஞர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் எச்சரிக்கை விடுத்து வருகிறார்.
சுய விபரங்களை எந்த வெப்சைட்டிலும் பதிவு செய்ய வேண்டாம் என்று மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உத்தரவின் பேரில், மாவட்ட சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் புயல் பாலசந்தர் மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து கொள்ளிடம் பகுதியில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வரும் மாவட்ட சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் புயல் பாலச்சந்திரன் கூறுகையில், பொதுமக்களிடையே தற்போது அதிக அளவில் பகுதிநேர வேலை என்ற பெயரில் பெரிய அளவில் மோசடி நடைபெற்று வருகின்றது.
இதில் அதிக அளவில் பாதிக்கப்படக்கூடியவர்கள் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரி இளைஞர்கள் மற்றும் பட்டதாரி பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களுடைய டேட்டாக்கள், இவர்கள் வேலை வாய்ப்புகள் தேடுவதற்காக சுய விவரங்களை லிங்க் இன், இண்டீட், நாக்ரி டாட் காம் இது போன்ற இளையதளங்களில் பதிவிடுகின்றனர். இதன்மூலம் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவர்களின் சுய விவரங்களை திருட்டுத்தனமாக தெரிந்து கொண்டு மேற்கண்ட பகுதி நேர வேலை எனக்கூறி சில தொகைகளை கட்ட சொல்லி கொடுத்து இன்வெஸ்ட்மென்ட் என்ற பெயரில் பல லட்சங்களை சுருட்டி விடுகின்றனர்.
எனவே இது போன்ற பகுதி நேர வேலை என்று இவைகளை பயன்படுத்த வேண்டாம். அதேபோல் தங்களுடைய சுய விவரங்களை தேவையில்லாமல் எந்த வெப்சைட்டிலும் பதிவு செய்ய வேண்டாம். பிரபலமான நிறுவனங்களின் பெயரில் ஆன்லைன் ஜாப், மற்றும் இணையதளம் மூலமாக போலியான வேலை வாய்ப்புகள் உள்ளதாக குறுஞ்செய்தி விளம்பரங்களை அனுப்பி உங்களை ஏமாற்றக்கூடும். அவர்கள் ஏதேனும் காரணம் கூறி பணம் செலுத்தக் கூறினால் அவர்களிடம் பணத்தை செலுத்தி ஏமாறாதீர்கள், மேலும் இது போன்ற அசம்பாவிதங்கள் உங்களுக்கு நடந்து விட்டால், பதட்டம் அடையாமல் உங்கள் மாவட்டத்தில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தை அணுக வேண்டும்.
அல்லது உடனடியாக மாநில சைபர் கிரைம் இலவச உதவி எண் 1930 க்கு 24 மணி நேரத்துக்குள் தொடர்பு கொண்டால் உங்களது பணம் மீட்டு தரப்படும். இதேபோல் தேவையில்லாத லிங்க் மற்றும் வீடியோ கால் போன்றவற்றை தொடவேண்டாம். கொள்ளிடம் சீர்காழி போன்ற பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் இதுபோன்ற முறையில் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். கொள்ளிடம் பகுதியில் அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் பணத்தை பறிகொடுத்து ஏமாறி வருகின்றனர். எனவே இது போன்ற விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றார்.